Monday, July 16, 2007

மன்னித்துவிடு மழையே!

கவிஞர் பாலு சத்யா நமக்கு ஒரு கவிதையை அனுப்பி இருக்கிறார்.

மழை - எல்லோரும் ரசிக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் இந்தக் கவிஞருக்கோ வேறு மாதிரியான அனுபவம் கிடைத்திருக்கிறது. படித்துப் பாருங்களேன். இனி, கவிதை.


நிஜம்தென்மேற்குப் பருவத்தில்
நாறிவிடுகிறது
பத்தடிக்கும் குறைவான
எங்கள் செம்மண்தெரு.

கால்களை
வைக்கமுடியவில்லை
தெருவில்.

நகராட்சி ஊழியர்
அள்ளிப்போகாமல் விட்ட
இரண்டுநாள் குப்பையில்
உபயோகித்துக் கழித்த
ஆணுறை.

பக்கத்துவீட்டுக்
கைக்குழந்தையின் தாய்
வீசியெறிந்த
பிளாஸ்டிக் கவர் நனைந்து
செருப்பையும் மீறி
கால்விரல்களை
அலர்ஜிக்குள்ளாக்குகிறது
குழந்தை மலம்.

எதிர்க்கடை மளிகைக்காரர்
கழித்துப்போட்ட
அழுகிய தக்காளியோ...

நான்குவீடு தள்ளியிருக்கும்
வறட்டு இறுமல்காரரான
தொழுநோயாளியின் எச்சிலோ...

மழைக்குத் தப்பிவந்த
கருந்தேளோ...

எது வேண்டுமானாலும்
என் காலைப் பதம்பார்க்கலாம்.

ஆடிக்கொருமுறை
உடைப்பெடுக்கும்
பாதாள சாக்கடையால்
தாங்கமுடியவில்லை
இந்த மழையை.

இரும்பு மூடியை
மீறிக் கொண்டு
வழிந்தோடும் சாக்கடைநீர்
மழைநீரை முந்திக்கொண்டு
கால் நனைக்கிறது.

மன்னித்துவிடு மழையே!
என்னால் உன்னை
ரசிக்க முடியவில்லை.

- பாலு சத்யா

Friday, July 6, 2007

பள்ளித்தளம் - கட்டாயம் படிக்க வேண்டிய சிறுகதை!

2008, ஜூன் மாத புதிய பார்வையில் பள்ளித்தளம் என்று ஒரு சிறுகதை பிரசுரமாகி இருக்கிறது. ச.பாலமுருகன் எழுதிய கதை இது. இவர் எழுதிய சோளகர் தொட்டி என்கிற நாவலும் அற்புதமான நாவல். இந்தச் சிறுகதையைப் படித்து முடித்தபோது என் தாய்நாடு இன்னும் கேவலமான நிலையில் இருப்பதை எண்ணி வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. இனி சிறுகதை...

அந்தியூரிலிருந்து காலை ஆறு மணிக்கு புறப்படும் பேருந்து பர்கூர் வந்து மணியாச்சி பள்ளத்தை அடையும்போது எட்டரை மணி ஆகிவிஉம். மணியாச்சி பள்ளத்திற்கு மேல் தம்புரெட்டி, ஒன்னகரை, கொங்காடை போன்ற மலை கிராமங்களுக்கு கால் தடத்தில்தான் நடந்துபோக வேண்டும். மணியாச்சி பள்ளத்தில் எல்லாக் காலங்களிலும் தண்ணீர் சலசலத்து ஓடும். காலை ஒன்பதரை மணிக்கு ஒன்னகரை பள்ளியின் காலை வழிபாட்டு சப்தம் மணியாச்சி பள்ளத்தில் உள்ளவர்களுக்கு லேசாகக் கேட்கும். மலைப்பகுதிகளில் தொலைதூரத்தில் கூப்பிடும் ஒலி கேட்பதை பலசமயம் நான் ஆச்சர்யத்துடன் உள்வாங்கியது உண்டு.

ஒன்னகரையின் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியனாக நான் பணிபுரிந்தேன். எனக்கு ஆசிரியருக்கான எந்தத் தனித் தகுதியும் கிடையாது. எனக்குப் பாடத்திட்டத்தில் எவ்வித வரையறையும் இல்லை. பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துக்களைச் சொல்லித்தர வேண்டும். அவர்களை கையொப்பமிட பழக்க வேண்டும். எழுத்துக்கூட்டி அவர்களைப் படிக்க வைக்க வேண்டும். என் பள்ளியில் பதினாறு மாணவர்கள் இருந்தார்கள். எல்லோருக்கும் ஐந்து வயதிலிருந்து ஒன்பது வயதுக்குட்பட்டவர்கள். என் பள்ளி பல சமாம் திறந்தவெளியில் நடக்கும். மணியாச்சி பள்ளத்திற்கு சில சமயம் மாணவர்களுடன் வந்துவிடுவேன். நீரோடையில் சூரியக் கதிர்கள் பிரதிபலித்து பளிச்சிடும். அந்நீரோடையின் கரையில் நெடிய நாகமரமும் ஈட்டிமரமும் இருக்கும். அதில் கனத்த கரிய தேன்கூடுகள் அதிகமிருந்தது. நான் என் பள்ளிக் குழந்தைகளிடம் கேட்பேன்.

"இம்மரத்தின் பெயரென்ன?"

"இது பெஜில் மரம்" ஒரு சேரக் குரல் வரும்.

"அது சரி, இதன் பயன்பாடு என்ன?"

"கூதல் காய, அடுப்பு எரிக்க்..."

"அதைத் தவிர இந்த மரம் இம்மலைக்கு என்ன பயன் தருகிறது?"

குழந்தைகள் மெளனமாக இருந்தபோது, "உங்க அம்மா, அப்பா, தாத்தாகிட்டே கேட்டுட்டு வந்து நாளைக்குச் சொல்லணும்."

நான் நீரோடையில் கரையிலிருந்த மணலில் படுத்தபடியே நாகமரங்களின், ஈட்டி மரங்களின் குடை போல விரிந்த கிளைகளைப் பார்ப்பேன். என்னைச் சுற்றிலும் குழந்தைகளும் படுத்துக் கொள்வார்கள். நீரோடையின் சலசலப்பினூடே மரத்திலிருக்கும் குயில்களின் கீக்கி சப்தம் கேட்கும்.

``இந்தக் குயில்கள் எந்த மரத்தை இங்கே உருவாக்கக் காரணமாகயிருக்கின்றது?''

குழந்தைகள் மெளனமாக ஒருவரை ஒருவரு பார்த்துக் கொண்டார்கள். மகாதேவன் மட்டும் அவனின் பளிச்சிடும் கண்களை சிமிட்டிக் கொண்டு `சந்தன மரம்' என்றான்.

நான் எழுந்து உட்கார்ந்து கொண்டேன். அவனின் கண்ணத்தைத் தட்டி, `எப்படிச் சொல் பார்க்கலாம்' என்றேன்.

``இந்தக் குயில்கள் சாப்பிட்டு எச்சமிடும்போது விழும் சந்தனப் பழ விதைகள் மட்டுமே சந்தன மரமாக முளைக்கும்.''

எல்லாக் குழந்தைகளும் மகாதேவனைப் பார்த்தனர்.

``குயில்கள் இல்லை என்றால் சந்தன மரங்களில்லை''

எல்லாக் குழந்தைகளும் ஒருமுறைச் சொல்லச் சொன்னேன். குழந்தைகளின் உரத்த குரலில் சப்தத்தினால் மரத்திலிருந்த குயில்கள் சிறகடித்துப் பறக்கத் துவங்கின.

நான் இப்பள்ளிக்கு ஆசிரியனானதும், பள்ளி வந்ததும் எல்லாம் தற்செயலாக நடந்ததுதான். பழங்குடி மக்களின் சங்கம் ஒன்று ஒன்னகரையில் இருந்தது. ஒன்னகரை கொத்துக்காரன் ஜவனன் சங்கத்திற்கு ஆதரவு தந்து கொண்டிருந்தார். மலை கிராமத்தில் பள்ளிக்கூடம் வேண்டி ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான தயாரிப்புக்காக நான் அன்று ஒன்னகரை வரும்போது மதியம் மூன்று மணியாகிவிட்டது. ஊரில் ஜவனன் இல்லை. அவர் பாங்காட்டில் உள்ள மாட்டிப்பட்டிக்குப் போய்விட்டார் என்ற தகவல் வந்தது. ஜவனனை அவசியம் பார்க்க வேண்டும் என்பதால் தொட்டியிலிருந்த பசுவனும், சடையனும் என்னை பார்ங்காட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். உன்னிப் புதர்களும் நெருக்கமான மரங்களுமடைந்த அந்த வனத்தில் நாங்கள் கால் தடப்பாதையில் நடந்தோம். பாதையின் பல இடங்களில் யானை மற்றும் சிறுத்தையின் ரத்திகள் காய்ந்து கிடந்தன. எனக்கு ஊன்றுவதற்கு ஒரு மூங்கில் கம்பினை வெட்டிக் கொடுத்தார்கள். நாங்கள் மாட்டுப்பட்டியை அடையும் சமயம் சூரிய வெளிச்சம் மங்கிவிட்டிருந்தது. மாட்டுப்பட்டி மலையின் சரிவில் இருந்தது. சுமார் ஐம்பதிலிருந்து எழுபத்தி ஐந்து மலை மாடுகள் அங்கிருந்தது.

மலைச்சரிவு முடிந்த சமதளம் வரும் பகுதியில் அந்தப் மாட்டுப்பட்டி இருந்தது. மாடுகளை வனத்திற்குள் காலியில் மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு மாலையில் பட்டியில் அடைப்பார்கள். வருடத்திற்கு பத்து மாதம் இங்கேயே மாடுகள், ஆட்கள் தங்க மூன்று குடிசைகள் போடப்பட்டிருந்தது. அதன் கூரையாக ஒழுங்கின்றி சிதறிக் கிடந்த கானாம்பில் கட்டப்பட்ட கத்தைகள் சில கிடந்தது. மூங்கில் குழலில் ஒரு கட்டில். அதன் கீழே நேற்று விறகு மூட்டி கூதல் காய்ந்த விறகின் மிச்சமிருந்தது. மாடுகள் அப்போதுதான் வனத்திலிருந்து ஓட்டிவந்து பட்டியில் அடைத்துக் கொண்டிருந்தனர். பட்டியைச் சுற்றிலும் ஒப்புக்குச் சில காய்ந்த மரங்களின் தடுப்பு வேலை இருந்தது. மாடுகளை ஓட்டி வந்ததில் நான்கு சிறுவர்களுமிருந்தனர். கிழிந்த அழுக்கடைந்த சட்டை மற்றும் சிராயுடனிருந்தனர். அதில் ஒருவன் துருதுருவென கண்களைச் சிமிட்டிப் பார்த்தான். பின் குடிசைக்குள் வந்து நின்று கொண்டான். அங்கு என்னைப் பார்த்ததும் கொத்துக்காரன் ஜனனன் மகிழ்ந்து போய் வணக்கம் சொன்னார்.

நான் குடிசைக்குள் நின்ற சிறுவனைப் பார்த்து பெயர் கேட்டேன்.

``மகாதேவன்'' என்றான்.

``அவனுக்கு இனிமேல் விடியும் வரை கண் தெரியாது - மாலைக்கண்'' என்றார் ஜவனன்.

எனக்குள் அச்சிறுவனைப் பார்த்து பெரும் சோகம் எழுந்தது. அவன் கட்டிலுக்குக் கீழே உள்ள விறகு கிடந்த இடத்தின் அருகில் அமர்ந்து கொண்டான். மகாதேவன் கொத்துக்காரனின் பேரன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவன் தாய் நோயில் இறந்து போனாள். அதன்பின் அவனின் அப்பன் அவனை கைவிட்டுவிட்டு வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.

இரவு வளர்ந்ததும் கூதல் எடுக்கத் துவங்கியது. சுற்றிலும் பாங்காடு என்பதால் சில்வண்டுகளின் இடையறாது ஒலிக்கும் சப்தம் கேட்டது. கூடவே மாடுகளின் சப்தம். கொத்துக்காரன், விறகைப் பற்றவைத்துவிட்டு என்னைக் கட்டிலில் உட்கார வைத்தார். நான் மகாதேவனின் கண் பிரச்சினைக்குக் காய்கறிகள் சாப்பிடுவது நல்லது என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது அருகில் களி தயாராகிக் கொண்டிருந்தது. கொத்துக்காரர் எங்களின் அருகில் உட்கார்ந்து கூதல் காய்ந்து கொண்டிருந்த சிறுவனைத் தயிர் கொண்டுவரச் சொன்னார். அவன் அருகிலிருந்த மரத்தில் ஏறி மரக் கிளையிலிருந்த ஒரு மண்செப்பை எடுத்து வந்தான். காலையில் மாடு ஓட்டிப் போகும்போது புரையூற்றி சாப்பாடு கட்டிச் சென்ற பால் தயிராகியிருந்தது. களியைத் தயிருடன் பிசைந்து சாப்பிடும் சமயம் பெருமூச்சுவிடும் பிளிறல் கேட்டது. நான் உறைந்துபோய் நின்றேன். நான்கு யானைகள் மாட்டிப் பட்டியின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. நிலவொளியிலும் அதன் கண்கள் பிரகாசித்தன. கொத்துக்காரன் என்னை சப்தமிடாமலிருக்க சைகை காட்டினார். சில நிமிடங்களுக்குப் பின் அதனை விலகி அப்பால் போய்விட்டது. எங்களுடன் இருந்த சிறுவர்கள் யானைகள் அசைந்து போவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தனர். என் வாழ்வில் காட்டு யானைகளை வெகு அருகில் அன்று பார்த்தேன். வாழ்வுக்கும் மரணத்துக்கும் வெகு குறுகிய இடைவெளியை உணர்ந்தேன். கொத்துக்காரர் களி சாப்பிடச் சொன்னார். அந்த என்னை வெறு வகையாக யோசிக்க வைத்தது. எனக்குத் தூக்கம் வரவில்லை. கொத்துக்காரர் ஜவனன் பேசிக் கொண்டே இருந்தார். விடியும் தருவாயில் ஒன்றைச் சொன்னேன். ``ஊரில் ஒரு பள்ளிக்கூடம் அமைக்க முடியும் என்றால் நான் ஆசிரியராகப் பணிபுரிந்து குழந்தைகளுக்கு படிப்புச் சொல்லித் தருகிறேன்'' என்று.

விடிந்த பின்னே மாட்டுப் பட்டியை பசுவனையும் சடையனையும் பார்க்கச் சொல்லிவிட்டு கொத்துக்காரர் என்னுடன் வந்தார். மகாதேவனும் மற்ற மூன்று சிறுவர்களும் என்னுடன் ஒன்னகரை வந்தார்கள். கொத்துக்காரர் தொட்டிக்காரர்களிடம் பேசிவிட்டு நாகி என்ற பெண்ணின் ஆரியம் தட்டிய களத்துமேடும் அவளின் குடிசையையும் தற்போது பள்ளிக்கூடமாக உபயோகிப்பது என்றும் அந்த ராகி அறுத்த வயலை ஒட்டிய இடத்தில் உள்ள மேட்டு நிலத்தில் பள்ளிக்குக் குடிசை போடுவது என்றும் முடிவானது. நான் தற்கால பள்ளிக் குடிசையின் முன்பிருந்த களத்தில் அருகருகே தூரக்கிடந்த இரண்டு கவை உள்ள சாய்ந்த மரங்களை நட்டேன். அந்த இரண்டு கவைகளுக்கிடையே ஒரு மூங்கிலை வைத்து அதன் மையத்தில் கயிறு கட்டச் செய்து ஊஞ்சலை உருவாக்கினேன். என் பள்ளியில் குழந்தைகள் விளையாடத் தடையில்லை என்றேன். மகாதேவன் முதலில் அந்த ஊஞ்சலில் ஆடத் துவங்கினான். பின் சிறுவர்கள் முண்டியடித்துக் கொண்டு ஊஞ்சலுக்காக நின்றனர்.

சங்கத்தினருக்கு என் செயல் ஒருபுறம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் புலி வாலைப் பிடித்தது போன்ற இப்பள்ளி விவகாரத்தில் பாதியில் நான் நின்றுவிட்டால் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் பதில் சொல்ல வேண்டி வரும் என்றும் சங்கத்தின் ஆலோசனையைப் பெற்றிருக்க வேண்டும் என்றனர். நான் தொடர்ந்து அக்குழந்தைகளுக்காக ஆசிரியனாக இருப்பதாகக் கூறினேன். விரைவில் மேட்டுக்பகுதியில் நீண்ட கானாம்பில் குடிசைப் போடப்பட்டது. அந்தக் குடிசையினுள் ஒரு பகுதி தடுக்கப்பட்டு என் அறை உருவானது. எனக்கு தொட்டிக்காரர்கள் வீட்டிலிருந்து களி உருண்டையும் குழம்பும் வந்து கொண்டிருந்தது. தொட்டிக்காரர்களுடன் சேர்ந்து மேட்டுப்பகுதியின் சரிவில் கற்களை வைத்து தடுப்பு எழுப்பி அதில் மண்ணை நிரப்பி ஒரு மைதானம் உருவாக்கப்பட்டது. எங்கள் பள்ளியின் காலை வழிபாடு இம்மைதானத்தில் நடந்தது. அங்கிருந்து குழந்தைகள் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்து மணியாச்சி பள்ளத்தில் அப்பால் பேருந்து நிறுத்தம் வரை கேட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் பேருந்து கிளம்புவது மணியாச்சி பள்ளத்தில் வழக்கமாயிற்று. பள்ளி மைதானத்தைச் சுற்றிலும் சந்தன மரநாற்றுகளும் வேப்பமரமும் நடப்பட்டது. கூடவே காய்கறிச் செடிகளை நான் மகாதேவனை மனடில் கொண்டு நட்டேன். மகாதேவன் தினமும் சீங்கை மற்றும் ரக்கினிக் கீரை சாப்பிட்டு வரத் துவங்கினான். மாட்டுப்பட்டிக்கு எந்தச் சிறுவர்களையும் அழைத்துப் போகாமல் எல்லோரும் பள்ளிக்கு வந்தனர். சில சிறுவர்களின் கைகளிலிருந்த சிரங்குக்காக பள்ளி வந்ததும் சிகைக்காய்த் தூளால் கைகால்களைக் கழுவிக் கொண்டு பாடம் படிக்கத் துவங்கினர். அச்சிறுவர்களுடன் நான் இருந்த நாட்கள் என் வாழ்வில் இனிய நாட்களுள் ஒன்று. ஆனால் என் மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை.

நான் மலேசியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். மலை வைத்தியம் என் உடலுக்கு ஏற்புடையதாக இல்லாததால் எனக்கு காய்ச்சல் அதிகரிக்கவே ஈரோட்டு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டேன். நான் ஒரு மாதம் ஒய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் மிகவும் வெளிறிப் போயிருந்தேன். மீண்டும் மலைக்குப் போவது இயலாமல் போனது.

சங்கத்தினர் பள்ளியைத் தொடர்ந்து நடத்துவதற்காக வேறு வழியின்றி பர்கூரில் பத்தாவது படித்திருந்த இளைஞன் வெங்கடேசனை மாதம் ரூபாய் ஆயிரம் சம்பளம் தருவதாகப் பேசி என் இடத்தில் பணியமர்த்தினர். வெங்கடேசன் ஏற்கெனவே ஒரு தொண்டு நிறுவனத்தில் சில காலம் வேலை செய்திருந்ததால் அவன் அப்பணிக்கு ஒத்துப் போனான். அரசாங்கப் பாடத்திட்ட புத்தகத்தில் உள்ளவற்றை முறையே சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுத்தான். சிறுவர்களும் வெங்கடேசனிடம் நன்கு பழகிவிட்டனர். நான் சங்கத் தோழர்களுடன் சேர்ந்து மலைப்பள்ளிக்கு ஆசிரியர் சம்பளம் மாதம் ஆயிரம் பெற்று அனுப்ப நன்கொடை கேட்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தேன்.

(Unfinished)

Courtesy: puthiya paarvai

Tuesday, June 19, 2007

காய்கறி வளர்க்கலாம் வாரியளா?

அப்பாடா, ஒரு வழியாக கோடை காலம் முடிந்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையைச் சுற்றி ஓரளவுக்கு மழை பெய்திருக்கிறது. கூடிய விரைவில் தமிழகம் முழுக்க நல்ல மழை பெய்ய வேண்டும் என்பது என் ஆசை.

இந்த மழை காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு நல்ல யோசனை. உங்கள் வீட்டில் கொஞ்சுண்டு இடம் இருக்கா? கொஞ்சம் இடுப்பை வளைத்து வேலை செய்ய நீங்கள் தயாரா? சத்தான, உடம்புக்கு எந்தத் தீங்கும் செய்யாத காய்கறிகளைச் சாப்பிட வேண்டும் என்று உங்களுக்கு ஆசையா?

மேலே கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஆம் என்று பதில் சொன்னீர்கள் என்றால், ஒரு மண்வெட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் காய்கறி வளரக்கப் புறப்படலாம்.

உங்கள் வீட்டில் காய்கறி வளர்ப்பதினால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். முதலில் காய்கறிக்காக நீங்கள் செலவு செய்யும் அத்தனை பணத்தையும் மிச்சப்படுத்தி விடலாம். ஞாயிற்றுக்கிழமை காய்கறி மார்க்கெட்டுக்குப் போய் கண்ணீர் விட்டு காய்கறி வாங்கினேன். விலைப்பட்டியலைக் கொஞ்சம் பாருங்கள்.

தக்காளி - 32 ரூ. காரட் - 32. பீன்ஸ் - 40. வெங்காயம் - 28. முருங்கைகாய் ஒன்று - 4 ரூ. சென்னையில் லட்ச ரூபாய் சம்பாதித்தாலும் கையில் காசு மிஞ்சாது போலிருக்கு.

இந்த மாதிரியான புலம்பலை எல்லாம் வீட்டில் காய்கறி வளர்ப்பதன் மூலம் எளிதாகத் தவிர்த்துவிடலாம். வருஷத்து மூவாயிரம் ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம்.

தவிர, ரசாயணம் மருந்துகள் கலக்காத காய்கறிகள் உங்களுக்குக் கிடைக்கும். மார்க்கெட்டில் விற்பனை ஆகும் காய்கறிகள் அளவுக்கதிகமான ரசயாண மருந்து கொட்டி வளர்க்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அந்தக் காய்கறிகளை சாப்பிடுவதால் உங்களுக்கு ஏற்படும் நன்மை விட தீமைகளே அதிகம்.

இன்னொரு முக்கியமான விஷயம், சுவை. இயற்கையாக வளர்க்கப்படும் காய்கறிகளின் சுவையே தனி. சாப்பிட்டுப் பார்த்தவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும்.

வீட்டுத் தோட்டத்தில் காய்கறி வளர்ப்பது எப்படி என்று எங்களுக்குத் தெரியாதே என்றெல்லாம் சொல்லாதீர்கள். முதலில் தக்காளியைப் பிழிந்து விட்டு வளர்க்க ஆரம்பியுங்கள். பிறகு கீரை, வெண்டை, கத்தரி.. இப்படி ஒவ்வொன்றாக வளர்க்கக் கற்றுக் கொள்ளலாம்.

வீட்டில் இடம் இல்லையா? நோ ப்ராபளம். மாடியில் மண் தொட்டி வச்சு அருமையா காய்கறி வளர்க்கலாம்.

மரம், செடிகொடிகளை வளர்ப்பது என்பது ஒரு வகை தியானம். அது நமக்குக் கொடுக்கும் உற்சாகமே தனிரகம்.

இந்த மழைக் காலத்தை முழுமையாக நீங்கள் அனுபவிக்க காய்கறி வளருங்க. என்ன விதை, எங்கே கிடைக்கும் என்கிற மாதிரி எந்த சந்தேகம் வந்தாலும் இந்த சம்சாரிகிட்டே கேளுங்க.

Monday, June 18, 2007

இனிப்புப் பிரியர்களின் கவனத்துக்கு!

இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பாலில் வரை சர்க்கரை ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சர்க்கரையை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளைச் சர்க்கரையை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்றால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளைச் சர்க்கரைத் தயார் செய்ய என்னென்ன ரசயாணப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாருங்கள்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 செண்டி கிரேட் முதல் 70 செண்டி கிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
4. 102 செண்ட் கிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாக பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு வருகிறது சர்க்கர. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சர்க்கரையில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சர்க்கரையில் விஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சர்க்கரையை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசயானம் மஞ்சல் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

உங்கள் சட்டை காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சர்க்கரையை எடுத்து தேய்த்துப் பாருங்க. நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு சமாச்சாரத்தைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சர்க்கரையை சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடு படும்?

குடல் மட்டுமல்ல, பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி (ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான நுழைவுவாயில்) நிச்சயம் வரும்.

சரி, இன்று முதல் வெள்ளைச் சர்க்கரை சாப்பிட வேண்டாம். இனி இனிப்புக்கு என்ன வழி?

வழியில்லாமல் இல்லை. ஆலைகளில் தயாரான வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடுவதை ஒழித்துக் கட்டிவிட்டு, வெல்லம், நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

தமிழகம் முழுக்க உள்ள சில இயற்கை விவசாயிகள் தாங்களே சொந்தமாக கரும்பு வளர்த்து, வெல்லத்தையும் நாட்டுச் சர்க்கரையையும் செய்துவிற்கிறார்கள். நல்ல வெல்லத்தையும் நாட்டுச் சர்க்கரையும் தேவைப்படுகிறவர்கள் பின்வரும் செல்போன் நம்பர்களில் தொடர்பு கொள்ளலாம்.

சீத்தா ஏகாம்பரம்,
அருணோதயம் இயற்கை விவசாயிகள் மேம்பாட்டுச் சங்கம்,
திருவண்ணாமலை.
செல்போன்: 94424-55665.

சேவியர்,
சென்னை.
செல்போன்: 9364433353.

Monday, June 4, 2007

இந்த முறையும் சம்பா அம்போதானா?

ஜூன் மாதம் பிறந்துவிட்டால் தஞ்சை பகுதி விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தேதி 12. காரணம், இந்தத் தேதியில்தான் ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து குறுவைப் பருவ நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுவார்கள்.

இந்த ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி அணையைத் திறந்துவிட்டால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்கிற ஆசையில் இருந்தார்கள் விவரம் புரியாத அப்பாவி விவசாயிகள் பலர். வழக்கம்போல விவசாயிகளின் ஆசை நிராசையாகிப் போனது.

கடந்த ஆண்டு ஓரளவுக்கு மழை பெய்தாலும் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இப்போது இருக்கும் தண்ணீரின் அளவு சுமார் 77 அடிதான். இவ்வளவு குறைவான நீரைக் கொண்டு விவசாயத்திற்குத் திறந்துவிட முடியாது. ஒருமுறை தண்ணீர் அளிக்க ஆரம்பித்தால் கடைசி வரை அளிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. எனவே, இந்த முறை தண்ணீர் இல்லை. குறுவை போடும் விவசாயிகளின் திட்டமும் அம்போதான்.

தஞ்சை பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு இன்னமும் மேட்டூரிலிருந்து தண்ணீரை எதிர்பார்ப்பதைவிட ஆயிரக்கணக்கில் இருக்கும் குளங்களை தூறெடுத்து மழைக் காலத்தில் கிடைக்கும் நீரை நன்றாகத் தேக்கி வைக்கலாம். இதனால் நிலத்தடி நீர் வெகுவாக அதிகரிக்கும்.

காரணம், மேட்டூர் தண்ணீரை மட்டுமே நம்பியே ஒவ்வொரு முறையும் சம்பாவை விதைக்க முடியாது. தண்ணீர் கிடைக்கும் போது தேக்கிக் கொள்வதே சிறந்த வழியாக இருக்குமே ஒழிய, கிடைக்கும் போது வழிந்தோட விட்டுவிட்டு, மீண்டும் எப்போது வருமோ என்று எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கக்கூடாது.

Wednesday, May 23, 2007

முல்லைப் பெரியாறு தமிழனுக்குச் சொந்தமில்லை!


முல்லைப் பெரியாறு தமிழகத்துக்குச் சொந்தமானதல்ல. அதிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீரைப் பெறுவதற்குக்கூட தமிழனுக்கு உரிமை இல்லை என்கிற நினைப்புதான் கேரள அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது.

இன்றைய தேதியில் முல்லைப் பெரியாறின் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருக்கிறது. ஜூன் மாதம் பருவமழை ஆரம்பித்தால்தான் அணைக்குத் தண்ணீர் வர ஆரம்பிக்கும். சரியான நேரத்தில் பருவமழை பொழிந்து அணைக்குத் தண்ணீர் வந்தால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் முதல் போகம் பயிர் செய்ய முடியும். இப்போது அணையில் தண்ணீர் இல்லாததால் முதல் போக விவசாயத்துக்கான தண்ணீர் கிடைக்காது என்கிற செய்தி கேட்டு பல லட்சக்கணக்கான விவசாயிகள் வருத்தத்தில் மூழ்கி இருக்கிறார்கள்.

தமிழக மக்கள் நியாயமாகக் கேட்கிற மாதிரி 152 அடிக்கு அணையில் நீரைத் தேக்கி வைத்திருந்தால் தமிழகத்தில் இருக்கும் ஐந்து மாவட்ட விவசாயிகளின் முதல் போக விவசாயத்துக்கு பங்கம் வந்திருக்காது. 152 அடிக்குத்தான் தேக்கி வைக்கவில்லை. உச்சநீதிமன்றம் சொன்ன அளவுக்காவது தண்ணீர் தேக்கி இருந்தால்கூட பாதி நிலத்துக்குத் தண்ணீர் கிடைத்திருக்கும். ஆனால், இரண்டையும் செய்யாமல் 136 அடிக்கு மேல் ஒரு இஞ்ச்கூட தண்ணீர் தேக்க விடமாட்டோம் என்று அடம் பிடிக்கும் கேரள அரசியல்வாதிகளை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை.

முல்லைப் பெரியாறு அணை பற்றி ஒரு அருமையான புத்தகம் சமீபத்தில் வந்திருக்கிறது. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த புத்தகம் முல்லைப் பெரியாறு பற்றி அத்தனை விஷயங்களையும் புட்டுப் புட்டு வைக்கிறது.

இப்போது கேரள எல்லைக்குள் இருக்கும் முல்லைப் பெரியாறு நிலப்பகுதி உண்மையில் தமிழகத்துக்குச் சொந்தமானது. ஆங்கில அரசாங்கம் செய்த ஒரு சிறுதவறின் காரணமாக, தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் ஜென்மப் பகை உருவாகிவிட்டது. நமக்குச் சொந்தமான நிலம் எப்படி கேரள அரசாங்கத்திடம் போனது என்பதில் ஆரம்பித்து, பென்னிகுக் என்னும் ஆங்கிலேயர் முல்லைப் பெரியாறு அணையை எப்பாடுபட்டுக் கட்டினார், பிரச்னை எப்படி ஆரம்பமானது, பிரச்னையின் இன்றைய நிலை என்ன என்பது வரை மிக மிக எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் ஆசிரியார் ஊரோடி வீரகுமார். இவர் ஒரு இயற்கை விவசாயி. முல்லைப் பெரியாறு பற்றி கிஞ்சித்தும் தெரியாதவர்கள் அலுங்காமல் குலுங்காமல் அது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அவசியம் இந்த புத்தகத்தைப் படிக்க வேண்டும் .

கர்நாடகவோடு காவிரிப் பிரச்னை, ஆந்திராவுடன் பாலாறில் பிரச்னை என தமிழகத்தின் மூன்று திசைகளில் உள்ள மாநிலங்கள் தண்ணீர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தொல்லை கொடுப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்தப் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு நதிகளை தேசியப் பட்டியலில் கொண்டு வருவதுதான். ஒரு சொட்டு தண்ணீர்கூட வீணாக்கப்படாமல் பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கிற ஒரு அமைப்பிடம் நீர் மேலாண்மை இருக்க வேண்டுமே ஒழிய, இந்தத் தண்ணீர் தமிழக விவசாயிக்கா, கர்நாடகா விவசாயிக்கா என்று பார்க்கக்கூடாது.

Monday, May 21, 2007

வாட்டி வதைக்கும் வெயில்! என்னதான் தீர்வு?

சென்னையில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்றைய வெயில் நிலவரம் 106 டிகிரிக்கு மேலே. பொதுவாக, கடுமையான வேலையைச் செய்தால் உடம்பில் வேர்வை கொட்டும். ஆனால், நேற்றெல்லாம் அதிவேகமாக சுழலும் ஃபேனுக்குக் கீழே சும்மா உட்கார்ந்தாலும் வேர்வை ஊத்திக் கொட்டியது.

அடிக்கிற வெயிலைப் பார்த்தால் மே மாதம் முழுக்க ஏதாவது ஒரு மலைப்பகுதியை நோக்கி ஓடிவிடலாமா என்று படுகிறது. இந்த ஆண்டே இப்படி இருக்கிறது. அடுத்த ஆண்டை நினைத்தால் எப்படி இருக்குமோ என்கிற கவலை வேறு மனதை அரிக்கிறது.

இந்த அக்னி வெயில் பிறந்த குழந்தைகளை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது? சுட்டெரிக்கும் வெயில் பஞ்சு போன்ற அந்த உடல் என்ன பாடுபடுகிறது தெரியுமா? பெரியவர்களாவது உடல்சூட்டைத் தணிக்க ஒரு நாளைக்கு 5 முறை குளிக்கிறார்கள். அந்தப் பச்சிளம் குழந்தைகள்? புதிதாகத் திருமணம் ஆனவர்கள், புதுப் பெண்டாட்டியை ஆடி மாதம் ஏன் ஆத்தா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்பதை இனிமேலாவது புரிந்து கொள்ளட்டும்.


இந்த கோடை காலத்தில் அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் வந்துவிட்டது. கத்தரி வெயில் முடிய இன்னும் ஒரு வாரம் உள்ளது. இனிமேலாவது வெயில் குறையுமா, குறையாதா என்கிற கவலை பலரையும் வாட்டி எடுக்கிறது.

இவ்வளவு வெயில் அடித்தாலும், நிறைய மரங்களை வளர்க்க வேண்டும் என்கிற எண்ணம் நம் மக்கள் யாருக்குமே வரவில்லை என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. மரங்கள் நிறைய இருக்கும் பகுதிகளில் வெயில் கொடுமை அவ்வளவாக நமக்குத் தெரிவதில்லை. சென்னை நகரில் அடையாரிலும் மரங்களின் எண்ணிக்கை அதிகம். அந்தப் பகுதிகளில் வெயில் அவ்வளவாகத் தெரிவதில்லை. ஆனால், வடசென்னையில் மரங்கள் ஏறக்குறைய இல்லை என்றே சொல்லிவிடலாம். எனவே, அந்தப் பகுதிகளில் வெயில் மண்டையைப் பிளக்கிறது.

மனிதன் இயற்கையை விட்டு என்று ஒதுங்க ஆரம்பித்தானோ அன்றிலிருந்த பல இன்னல்களுக்கு ஆட்பட ஆரம்பித்துவிட்டான். ஏசி தரும் செயற்கைத் தீர்வை ஒதுக்கிவிட்டு, இயற்கைக்கு மீண்டும் மனிதன் எப்போது திரும்புகிறோனோ அப்போதுதான் பல பிரச்னைகளுக்கு விடிவுகாலம் பிறக்கும். இதற்கு முதல்படியாக, தமிழகம் முழுக்க இன்னும் பல கோடி மரங்கள் நடப்பட வேண்டும்.

Friday, May 18, 2007

இளைஞர்களை வரவேற்க மறுக்கும் இயற்கை விவசாயிகள்

சென்னைக்கு அருகில் வசிக்கும் ஒரு இயற்கை விவசாயியை சமீபத்தில் பார்த்தேன். எனக்கு விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்று அவரிடம் சொன்னேன். பாரம்பரியமாக இருக்கும் எங்களாலேயே விவசாயம் செய்ய முடியவில்லை. நீங்கள் வந்தால் ஒன்றும் செய்ய முடியாது என்றார். அவர் சொன்னது நியாயம்தான். அனுபவசாலிகளே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது புதியவர்களால் எந்த அற்புதத்தையும் செய்துவிட முடியாது என்பது உண்மைதான்.

ஆனால், பாரம்பரிய விவசாயிகள் இப்படிச் சொல்லிச் சொல்லியே புதியவர்களை விவசாயத்தின் பக்கம் வரவிடுவதில்லை. எல்லாத் தொழிலிலும் கஷ்டம் உண்டு. விவசாயத்தில் பல மடங்கு கஷ்டங்கள் உண்டு. இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக புதியவர்கள் வரும் போது இருகரம் கூப்பி அழைக்க வேண்டாமா? நமக்கான தொழில்நுட்பங்களைக் கற்றுத் தர வேண்டாமா? என்று எனக்கு ஒரே யோசனையாக இருந்தது.

மண் வளம் காக்க நம் முன்னோர்கள் எத்தனையோ வழிமுறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மீன்குண்பம் என்கிற முறையைப் பற்றி கேள்விப்பட்ட போது ஆச்சரியப்பட்டுப் போனேன்.

மீன் குழம்பு என்றால் நம்மில் பலர் சப்புக் கொட்ட ஆரம்பித்துவிடுவோம். ஆனால், பயிர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை மீன்கள்.

மண்ணில் தழைச்சத்தைப் பெருக்க, அதாவது நைட்ரஜன் சத்தைப் பெருக்க - கண்ட கண்ட உரங்களைக் கொட்டுவதற்குப் பதிலாக பசுந்தாள் உரங்களை நிறைய பயன்படுத்தலாம் என்கிறார்கள் இயற்கை வேளாண் விஞ்ஞானிகள். உழவு முடிந்து பயிர்கள் வளர ஆரம்பித்தபிறகு தழைச்சத்து கூட்ட வேண்டுமெனில் மீன் குண்பத்தை தாராளாமாகப் பயிர்களுக்குக் கொடுக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

இந்த மீன் குண்பத்தைத் தயார் செய்வது மிகவும் சுலபமாம். குளத்து மீன், ஏரி மீன், கிணற்று மீன் இதில் ஏதாவது ஒரு வகை மீனை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனோடு தூளாக்கிய நாட்டு வெல்லத்தை கலந்து, ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்துவிடுங்கள். இப்படி 20 முதல் 22 நாட்கள் மூடி வைக்க வேண்டுமாம்.

பிறகு திறந்து பார்த்தால் கெட்டியான சாறு வடிகட்டி நிற்கும். இதில் ஒரு மில்லி சாறை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பயிருக்குப் பாய்ச்சினால் நல்ல பலன் கிடைக்கிறதாம்.

இயற்கை உரங்களை நம் முன்னோர்கள் எதிலிருந்தெல்லாம் உருவாக்கி இருக்கிறார்கள் பார்த்தீர்களா!

Friday, May 4, 2007

சுயம்புலிங்கம் என்கிற கரிசல் காட்டு எழுத்தாளர்

மு.சுயம்புலிங்கத்தைத் தெரியுமா உங்களுக்கு?

கி.ராஜநாராயணன் கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்றால் சுயம்புலிங்கம் தலைமகன். நீரற்று வெளிறிப் போன கரிசல் காட்டு விவசாயிகளின் வாழ்க்கையை பச்சை பச்சையாகப் படம் பிடித்துக் காட்டியவர். சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமைசுயம்புவின் எழுத்தைப் படிக்கிற்போது நம் முகத்தில் தெறிக்கும். பாளம் பாளமாகப் பிளந்து போன அந்த நிலத்தைக் காண்கிற போது நமக்கு தாகம் வந்து தவிக்கும். அந்தப் பாழ் நிலத்தை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறும் அகதி மக்களின் வாழ்க்கைக் காண்கிற போது கண்களில் ரத்தம் கொட்டும்.

நிறைய எழுதியவர்தான் சுயம்புலிங்கம். இன்று ஏகத்துக்கும் குறைத்துக் கொண்டுவிட்டார். பல ஆண்டுகளுக்கு முன்பே கோயில்பட்டியை விட்டு வெளியேறு, சென்னைக்கு அடுத்துள்ள பெருங்களத்தூரில் ஒரு சிறுகடை வைத்து நடத்தி வருகிறார்.

1990 வாக்கில் சுயம்புவின் கதைகளையும் கவிதைகளையும் ஒன்று திரட்டி ஊர்கூட்டம் என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் வந்தது. கோணங்கி தன்னுடைய கல்குதிரையில் சுயம்புவின் படைப்புகளை வெளியிடுவதற்காகவே ஒரு இதழை ஒதுக்கினார். சமீபத்தில் உயிர்மை பதிப்பகம் ஒரு பனங்காட்டு கிராமம் என்கிற தலைப்பில் அவர் சிறுகதைகளை வெளியிட்டிருக்கிறது.

கருசக் காட்டு விவசாயிகளின் மனநிலை எடுத்துச் சொல்ல, ஊர்கூட்டத்திலிருந்து ஒரு கதை இங்கே உங்களுக்குத் தருகிறேன்.


சமுசாரியின் கதை.


பட்டவத்தலை நெருப்பில் சுகிற காரநெடி.தொண்டை புகைந்து இருமல் வருகிறது.

கண்களைத் துடைத்துக் கொண்டு திண்ணையில் வந்து உட்காருகிறேன்.

தாத்தா வருகிறா.

சொயம்பு.. பாத்தியா, பய்யன் விளையாட்ட..

தெருவில் மணல்கட்டி, மோண்டு புட்டுச் செய்து விளையாடுகிறான் பய்யன்.

எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. தாத்தாவும் குலுங்கக் குலுங்க சிரித்தார். தெருவில் மழத்தண்ணி புரளவேண்டிய காலம்.

அயிப்பசி பிறந்து எழு தேதி ஆகிறது. தாத்தா மழை பெய்யுமா?

கைகளைத் தலைக்குக் கொடுத்து உடம்பை சுவரோடு சாய்த்துக் கொண்டு தாத்தா சொன்னார்.

ரேடியோக்காரன் நாப்பத்தெட்டு மணிநேரம் கெடு சொல்லுதான்.

ஜோசியக்காரன் கனத்தநால் கட்டங்களை சொல்லுதான்.

ஒருபயல் கய்யிலும் மழை பிடிபடவில்லை.

நீர்மேல் குமிழி. மழை பெய்தால்தான் எல்லாம்.

பூமாதேவி கொடுக்காமல் ஒரு பயலாலும் ஆவதில்லை.

சமுசாரி குடி கெட்டுக்கிடக்கு. விவசாயி நெம்பலப்பட்டுப் போன ஒரு நாட்டின் அரசன் நீடித்து அரசாள முடியாது.

முதல்மந்திரி விவசாயிகளுக்கு அவர் கஜானாவில் இருந்து அள்ளிக்குடுக்காராம்.

என்னத்தக் கொடுப்பார்? எத்தனை நாளைக்கு கொடுப்பார்?

சுவரோடு சாய்ந்த முதுகை நிமிர்த்தி மெள்ளத் தவழ்ந்து வந்து கால்களைத் தொங்கப் போட்டு உட்கார்ந்தார் தாத்தா. அவர் கைகள் பொடிமட்டையை கவனமாய் தட்டிக் கொண்டிருந்தது.

இதை நல்லாக் கேள்.

ரொம்ப செயலாக வாழ்ந்த குடும்பம். பெரிய்யசுத்துக்கெட்டு வீடு.

அந்த வீடு பொம்பளைகளப் பார்த்தால் முகத்தில் அருள் இருக்கும்.

ஏழூஏர் சமுசார். ஆடுகள் என்ன.. மாடுகள் என்ன.. எவ்வளவு வேலையாள்..

எந்த நாடு தீய்ந்து போனாலும் அந்தவீட்டுப் பட்டறையில் தவசம் இருக்கும்.

அந்த வீட்டுக்கு மாதம் ஒருவண்டி கருப்பட்டி கொடுத்திருக்கேன்.

என்ன மாதிரியாக வாழ்ந்த வீடு..

அந்த மனிதன் மதுரை வீதியில் குரங்குக்குட்டிக்கு சட்டை போட்டு தோள்மேல் உட்கார வைத்துக் கொண்டு கடைகடையாய் அலைகிறார்.

அந்த மனுசனுக்கே அந்தக்கதி.மற்றவர் கெதி என்ன ஆகிறது?

சொயம்பு-பூமி அதே இடத்தில்தான் இருக்கு.

விளையாவிட்டால்..?

தாத்தா தெருவில் நடந்துபோகிறதை பார்க்கிற என் கண்கள் மதுரை வீதியில் குரங்குக்குட்டிக்கு சட்டை போட்டு தோள்மேல் உட்கார வைத்துக் கொண்டு கடைகடையாய், அலைகிற அந்த சமுசாரியையே பார்க்கிறது.

Saturday, April 28, 2007

பஞ்சகவ்யம் - பகுதி 3
`பஞ்சகவ்யத்தில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன?' என்று டாக்டர் நடராஜனிடம் கேட்டோம். அவர் சொன்னார்.


``செங்கல்பட்டு இயற்கை விவசாயி பி.பி.முகுந்தன், கள் சேர்த்தும் சேர்க்காமலும் இரண்டு விதமாக பஞ்சகவ்யத்தைத் தயார் செய்து, அங்குள்ள உயிரியில் கட்டுப்பாட்டு ஆய்வு மையத்தில் உள்ள முதன்மை விஞ்ஞானி சோலையப்பனிடம் ஆராய்ச்சி செய்யக் கொடுத்தார். அதை ஆராய்ந்து பார்த்ததில், அவர்களே பிரமித்துப் போகும் அளவுக்கு அதில் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் மிக மிக அதிகமாக இருப்பதையும் அந்த நுண்ணுயிர்கள் அதிக ஆற்றலுடன் இருப்பதையும் கண்டார்கள்.


பஞ்சகவ்யத்தில் தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசோஸ்பைரில்லம் பத்து கோடி இருந்தது. தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசடோபேக்டர் பல லட்சக்கணக்கில் இருந்தது. மணிச்சத்தைக் கரைத்துக் கொடுக்கக்கூடிய

பாஸ்போபேக்டீரியா ஐந்து கோடிக்கும் அதிகமாக இருந்தது. நோய் எதிர்ப்பாற்றலைத் தரும் சூடோமோனஸ் ஆறு கோடிக்கு மேல் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிசயித்துப் போனார்கள்.


பயிர்கள் வளர்வதற்குத் தேவையான் 13 வகையான பேரூட்ட, நுண்ணூட்டச் சத்துக்களும் தேவையான அளவில் உள்ளன. எனவே, எல்லா வகையான பயிர்களுக்கும் தாராளமாகப் பயன்படுத்தலாம்'' என்றார் அவர்.


பஞ்சகவ்யத்தை எப்படித் தயாரிப்பது என்பதையும் எப்படி பயன்படுத்துவது என்பதையும் `பணம் குவிக்கும் பஞ்சகவ்யா' என்கிற புத்தகத்தில் விளக்கமாக எழுதியிருக்கிறார் டாக்டர் நடராஜன். கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்து பதிப்புகளைக் கண்டுவிட்டது இந்தப் புத்தகம். மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது.


சில ஆண்டுகளுக்கு முன்பு, பஞ்சகவ்யத்தைப் பற்றி கேள்விப்பட்ட ஆந்திர அமைச்சர் ஒருவர், அந்த மாநில அரசாங்கத்துக்கும் பெரும் தலைவலியைக் கொடுத்த பருத்திச் சாவைத் தடுக்க பஞ்சகவ்யத்தை பயன்படுத்தலாமா என்று கேட்டு, டாக்டர் நடராஜனின் வீட்டுக்கே வந்துவிட்டாராம்.


டாக்டர் நடராஜன் கண்டுபிடித்தது பஞ்சகவ்யம் அல்ல! தமிழ்நாட்டு விவசாயிகளின் பஞ்சத்தைப் போக்க பஞ்சாமிர்தம்!

Friday, April 27, 2007

பஞ்சகவ்யம் - பகுதி 2

`பஞ்சகவ்யத்தைத் தெளித்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை கிடைக்கும்?' - இந்தக் கேள்வியை பஞ்சகவ்யத்தைக் கண்டுபிடித்த டாக்டர் நடராஜனிடம் கேட்டோம்.

அவர் சொன்னார்: ``இப்படி, அப்படி என்று சொல்ல முடியாத அளவுக்கு அற்புதமான பலன்கள் பல கிடைத்திருக்கிறது விவசாயிகளுக்கு. குறிப்பாக, ஆயிரமாயிரமாக செய்துவந்த உரச்செலவு சுத்தமாக இல்லாமல் போயிருக்கிறது. மகசூலும் கணிசமாகக் கூடியிருக்கிறது'' என்று சொன்னவர் எந்தெந்த செடியில் என்னென்ன நன்மை விளைந்திருக்கிறது என்பதையும் சொன்னார்.

மா

பூ பூக்கும் காலத்தில் மரத்தில் உள்ள எல்லா இலைகளையும் மறைக்கிற மாதிரி பூ பூக்கும். எவ்வளவு காற்று அடித்தாலும் பூ கொட்டாது. பூ பூத்து, நிறைய பிஞ்சுகள் விடும். பிஞ்சுகள் நன்கு காய்த்து, நல்ல விளைச்சலைக் கொடுக்கும். மாவைப் பொருத்தவரை ஒரு ஆண்டு அதிக விளைச்சல் தந்தால், அடுத்த ஆண்டு விளைச்சல் சரியாக இருக்காது என்பார்கள். பஞ்சகவ்யத்தைத் தெளித்தால் இந்தப் பிரச்னைகளுக்கு எளிதில் முடிவு கட்டிவிடலாம்.

எலுமிச்சை

எலுமிச்சை செடிகளுக்கு பஞ்சகவ்யத்தை ஊற்றினால், ஆண்டு முழுக்க பூக்களும் பிஞ்சுகளும் பழங்களும் மரத்தில் தொங்கிக் கொண்டே இருக்கும். விளைச்சல் பெருகுவதோடு பழங்கள் நல்ல நிறத்துடன் அதிக நாட்கள் புத்தம் புதிசாக இருக்கும் பஞ்சகவ்யத்தில் வளரும் எலுமிச்சையில் சாறு அதிகம். ஊறுகாய்க்கு பிரமாதமாக இருக்கும். (இது மாதிரியான எலுமிச்சை புளியங்குடி அண்ணாச்சி அந்தோணிசாமியிடம் கிடைக்கிறது! )

முருங்கை

முருங்கை மரத்துக்கு பஞ்சகவ்யத்தைத் தெளித்தால் நிறைய பூ பூத்துக் குலுங்கும். இதில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் செஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள மல்லாண்டி கலைமணியின் தோட்டத்திற்குப் போய் பார்க்கலாம்.

``கொய்யா, சப்போட்டா, நெல்லி, புளி, வாழை, கரும்பு, மஞ்சள், வெற்றிலை, மல்லிகை, கத்தரி, தென்னை, நிலக்கடலை, எள், நெற்பயிர் என்று பலவற்றிலும் அடித்துப் பார்த்துவிட்டோம். அத்தனையிலும் அற்புதமான மகசூல்'' என்று சந்தோஷமாகச் சொன்னார் டாக்டர் நடராஜன்.

பஞ்சகவ்யத்தில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்கிற கேள்விக்கான பதிலை நாளை பார்ப்போமா?

டாக்டர் நடராஜனைத் தொடர்பு கொள்ள விரும்புகிறவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

டாக்டர் கே.நடராஜன்,
தலைவர், கிராமப்புற சமுதாய செயல்மையம்,
ஆர்.எஸ். மருத்துவமனை வளாகம்,
கொடுமுடி, ஈரோடு-638 151.

போன்: 04204-222369, 222469.

Thursday, April 26, 2007

பஞ்சகவ்யம் - விவசாயிகளின் சர்வரோக நிவாரணி!

``ஜீபும்பா! எந்தப் பயிரும் வளர்வதற்குத் திராணியற்ற இந்த நிலத்தில் இனி நெற்பயிரும் பருப்பும் கத்திரியும் வெண்டையும் வாழையும் பூஞ்சோலையும் மாவும் தென்னையும் பலாவும் வளர்ந்து செழிக்கட்டும்' என்று நம்பிக்கையோடு பஞ்சகவ்யத்தைத் தெளியுங்கள்! உங்கள் வயலில் நீங்கள் இதுவரை பார்த்திராத அதிசயத்தை அடுத்து வரும் சில வாரங்களில் பார்க்க ஆரம்பிப்பீர்கள்''

இப்படிச் சொல்வது நானல்ல, தமிழ்நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள்.

`பஞ்சகவ்யமா? அப்படி என்றால் என்ன? அதைக் கண்டுபிடித்தது யார்?' என்று விசாரித்தபோது `கரூருக்குப் பக்கத்தில் கொடுமுடி என்கிற ஊரில் நடராஜன் என்று ஒருவர் இருக்கிறார். ஆங்கில மருத்துவர். அவரிடம் போய் இந்தக் கேள்வியைக் கேளுங்கள்' என்று சொல்லிவிட்டார்கள். அடுத்த நாள் நடராஜன் அய்யா வீட்டின் கதவைத் தட்டினோம். பஞ்சகவ்யத்தைக் கண்டுபிடித்தது நீங்கள் தானா? என்று கேட்டோம். பொறுமையாக பதில் சொல்ல ஆரம்பித்தார்.

``நான் தான் பஞ்சகவ்யத்தைக் கண்டுபிடித்தேன் என்பது கொஞ்சம் மிகையான கூற்று. 1998-ஆம் ஆண்டில் பெங்களூரில் நடந்த மூலிகைக் கண்காட்சிக்குப் போனபோது Organic Farming - Source Book என்று ஒரு புத்தகத்தைப் பார்த்தென். பிரேசில் நாட்டு விஞ்ஞானி ஒருவர் எழுதியது. பசுவின் பாலையும் சிறுநீரையும் 21 நாட்கள் ஊறவைத்து நுண்ணாட்டச் சத்து கலந்து அதில் இரண்டு சதவிகித கரைசலைத் தண்ணீருடன் சேர்த்து திராட்சை தோட்டத்திற்கு அடித்தபோது நல்ல பலன் தந்ததாக எழுதியிருந்தார்.

நாமும் இது போல செய்து பார்க்கலாமே என்றிருந்த நேரத்தில் மகா சிவராத்திரி வந்தது. கோயிலுக்குப் போய் சாமியை தரிசிக்கச் சென்றேன். பூஜைக்குப் பின் பிரசாதம் கொடுத்தார்கள். சுவாமிகளே! என்ன இது? என்று கேட்டேன். பஞ்சகவ்யம் என்றார். இதை ஏன் கொடுக்கிறீர்கள் என்றேன். இது வந்த நோயைப் போக்கும். இனிவரும் நோயை வராமல் தடுக்கும்'' என்றார்.

பசுவைன் சாணியையும் கோமியத்தையும் மட்டும் பயன்படுத்துவதற்குப் பதிலாக பசு கொடுக்கும் ஐந்து பொருட்களையும் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். என் வீட்டிலேயே பஞ்சகவ்யம் தயாரித்தேன். அதை சில பயிர்களின் மீது அடித்தும் பார்த்தேன். அதன்பிறகு நடந்தது அற்புதம்.

இன்றைக்குத் தமிழகம் முழுக்க பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் பஞ்சகவ்யத்தை பயன்படுத்துகின்றனர். ஏழை விவசாயிகளுக்குக் கிடைத்த போக்கிஷம் என்று புகழ்கின்றனர். இதுதான் நான் பஞ்சகவ்யத்தைக் கண்டுபிடித்த கதை'' என்று முடித்தார்.

பஞ்சகவ்யத்தை எப்படித் தயாரிப்பது? இந்த இயற்கை உரத்தைத் தெளித்தால் என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை பிறகு சொல்லவா?

Monday, April 23, 2007

கி.ராஜநாராயணன் என்கிற எழுத்தாள விவசாயி!


கி.ராஜநாராயணனுக்கு அறிமுகம் அநாவசியம். கரிசல் இலக்கியம் என்னும் அரிய இலக்கிய வகையைத் தோற்றுவித்தவர். சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர். கோயில்பட்டிக்கு அருகில் உள்ள இடைச்செவலில் பிறந்து, இன்று பாண்டிச்சேரியில் வாழ்ந்து வருகிறார். கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், கருசக்காட்டு கடிதாசி, வேட்டி (சிறுகதைத் தொகுப்பு), கிடை (குறுநாவல்), வயது வந்தவர்களுக்கு மட்டும் (விடலைகளுக்கான கிளுகிளு கதைகள்) என்று கி.ராஜநாராயணன் எழுதிய அத்தனை படைப்புகளும் என்றென்றும் ரசித்து படிக்கத் தக்கவை.

கி.ராஜநாராயணன் எழுதிய கோபல்ல கிராமத்து மக்கள், கருசக்காட்டு கடுதாசி ஆகியவற்றிலிருந்து சில முக்கியமான பகுதிகளைத் தொகுத்து `உயிர்க்கோடுகள்' என்கிற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் புதுவை இளவேனில். (உயிர்க்கோடுகள் புத்தகம் வாங்கிப் படிக்க நினைப்பவர்கள் பின்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம். அகரம்.
மனை எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் - 613 007. புத்தகத்தின் விலை : ரூ. 250.)

ராஜநாராயணின் படைப்புகளுக்கு ஆதிமூலம் வரைந்த ஓவியம் ஒவ்வொன்றும் அற்புதம். தமிழகத்தில் இன்று விவசாயிகள் எப்படி இருக்கிறார்கள்? அரசு அதிகாரிகள் விவசாயிகளை எப்படி நடத்துகிறார்கள் என்பதைச் சொல்ல உயிர்கோடுகள் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை இங்கே தருகிறேன்.


தீர்க்கமாக மூன்று ஆண்டுகள் நிறைந்து, நாலாவது ஆண்டில் 31.10.85-ல் சமூகவனக் கோட்ட அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதினேன். நீங்கள் கொடுத்த கன்றுகளெல்லாம் மரங்களாகிவிட்டன; வந்து பாருங்கள் என்று.

அதற்குக் கோட்டவன அலுவலகத்திலிருந்து பதில் வந்தது இப்படி:

`கன்றுகள் நடவு செய்துள்ள நிலத்தின் சர்வே எண், நிலம் அமைந்துள்ள கிராமத்தின் பெயர், பரப்பளவு மற்றும் விண்ணப்பதாரரின் பொறுப்பிலுள்ள நிலங்களின் அளவு, சர்வே எண் வாரியாகத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.'

ஏற்கனவே நான் அவர்களுக்குத் தெரிவித்துவிட்ட தகவல்களோடு, இப்போது புதிதாகச் சில அதிகப்படி தகவல்கள் கேட்டார்கள்.

கொடுக்கிற கை எப்பவும் மேலேதான் இருக்கும்; வாங்குகிற கை எப்பவும் கீழேதானே..? அதோடு, அதிகாரியின் வீட்டுக் கோழி முட்டை குடியானவனின் வீட்டு அம்மியின்மேல் பட்டு அம்மிக்கல் உடைந்ததாகத்தான் `சாஸ்திரங்களில்'(!) சொல்லப்பட்டிருக்கிறது.

கோட்டவன அதிகாரியின் கேள்விகளுக்கு ஒழுங்காக, மரியாதையாக உரிய காலத்தில் பதில் எழுதித் தபாலில் சேர்த்தேன். எழுபத்தைந்து நாட்கள் கழித்துத் திரும்பவும் ஒரு நினைவூட்டுக் கடிதம் எழுதினேன். கோட்டவன அதிகாரியிடமிருந்து, ந.எண்:1210/85 தி.நாள்.19.5.86. மாசி மாதம் 7 குரோதன திருவள்ளுவராண்டு 2017.. பதில் வந்தது. தமிழில் தேதியிட்டு பதில் வந்தது இந்தப் பைத்தியக்கார மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்த்து.


(ஓ-ம்) மு. அமனுல்லாகான்

கோட்டவன அலுவலர்


வனச்சரக் அலுவலகத்திலிருந்து ஒரு நாள் மரங்களைப் பார்க்க ஆட்கள் வந்தார்கள். எண்ணிப் பார்த்தார்கள். குறித்துக் கொண்டார்கள். ஆபீஸில் வந்து வனச்சரகரைப் பார்க்கும்படி சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.


கோவில்பட்டியிலுள்ள ஜோதிநகர் வனச்சரக அலுவலகத்தை விசாரித்து, வனச்சரக அலுவலரைப் போய்ச் சந்தித்தேன். நல்லவேளை அவர் ஆபிஸில் இருந்தார்.


ஒரு வரியில் அவர் சொல்லிவிட்டார்: நீங்க சிறு விவசாயி இல்லை. அதனால் மரத்துக்கு நாற்பது ரூபாய் என்கிற போனஸைப் பெற முடியாது என்று! அதிர்ச்சியாகத்தான் இருந்தது என்றாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல், சிறு விவசாயி என்றால் என்ன? என்று கேட்டேன். ``ஐந்து ஏக்கர் நிலமோ அல்லது அதற்குக் குறைவாகவோ வைத்திருப்பவரே சிறு விவசாயி'' என்றார். ``ஐந்து ஏக்கர் மானாவாரிப் புஞ்சை நிலம் வைத்திருப்பவன்.. அதில் ஜீவனத்துக்காக மகசூல் பண்ணுவானா, மரங்களாக நடுவானா..?'' என்று கேட்டேன்.Friday, April 20, 2007

டிராக்டர் சாணி போடுமா? - ராஜாஜி கேட்ட கிடுக்கிப்பிடி கேள்வி

காசுதான் கடவுள். பணத்தை செலவழிக்காமல் உங்களால் ஒரு சின்னப் பொருளைக்கூட வாங்க முடியாது என்கிற இந்தக் காலத்தில் இலவசமாக மாடு கொடுக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

தாம்பரம் சேலையூரில் உள்ள கோவர்தன் அறக்கட்டளை ஒரு நயா பைசாகூட வாங்காமல் நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கும் மாடுகளை இலவசமாகத் தருகிறது. தமிழ்நாடு முழுக்க பல ஏழை விவசாயிகள் இதனால் பயனடைந்திருக்கிறார்கள்.

``அட, ஆச்சரியமா இருக்கே!'' என்று கோவர்தன் அறக்கட்டளையின் தலைவர் நடேசனை சந்திக்கச் சென்றோம். மாட்டுத் தொழுவத்தில் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார் நடேசன். முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியரான இவர், பசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறார். இத்தனை காலம் இவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்ததன் விளைவு, தமிழகம் முழுக்க ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பசு பாதுகாப்பு மையங்கள் (கோசாலைகளை) அமைக்கப்பட்டு அங்கே மாடுகள் அருமையாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பசுக்களைப் பாதுகாக்க கோவர்தன் அறக்கட்டளை செய்து வரும் பணிகளைப் பற்றி நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார் நடேசன்.

``பசுக்கள் நமக்கு சாதாரண விலங்குகள் அல்ல. நம்மைப் பெற்றெடுத்து, பாலூட்டி வளர்த்த அன்னைக்கு இணையாக பசுக்களை மதிப்பவர்கள் நாம். இறைவனுக்கு இணையாக பசுக்களை கும்பிடுபவர்கள் நாம். மனித குலத்துக்கு பசுக்கள் அளிக்கும் பயன் காரணமாகவே அதை தெய்வ நிலைக்குக் கொண்டு சென்றார்கள் நம்முடைய மூதாதையர்கள்.
பசு பால் தருகிறது. அது வெண்ணெய் ஆகிறது. தயிராகிறது என்கிறதோடு பசுவின் பயன் முடிந்துவிடுவதில்லை. அது கொடுக்கும் சாணத்தை வைத்துத்தான் நம்முடைய முன்னோர்கள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்திருக்கிறார்கள்.

இப்படி நாம் போற்றி வழிபட்டு வந்த பசுக்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தபிறகு கிடுகிடுவெனக் குறைய ஆரம்பித்தது. ஒரு முறை ஒரு வெள்ளைக்காரர் மூதறிஞர் ராஜாஜியிடம் கேட்டாராம். `போயும் போயும் ஒரு மாட்டை வணங்குபவர்கள் நீங்கள். உங்களிடம் நாகரீக வளர்ச்சி இல்லை' என்று குற்றம் சாட்டினாராம். இதற்கு ராஜாஜி என்ன பதில் சொன்னார் தெரியுமா? `நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்ளும் நீங்கள் டிராக்டர்களை வணங்குகிறீர்கள். மகத்தான சத்து கொண்ட சாணத்தையும், கோமியத்தையும் (மாட்டின் சிறுநீர்) மாடு நமக்குத் தருகிறது. நீங்கள் கும்பிடும் டிராக்டர் சாணி போடுமா?' என்று கேட்டாராம் ராஜாஜி. அந்த வெள்ளைக்காரரால் பதில் சொல்ல முடியவில்லை.

இன்றைக்கு நாம் விவசாயத்தில் பின்தங்க ஆரம்பித்ததற்கு முக்கியமான காரணம், மாடுகளை நாம் காக்க மறந்ததுதான். மாடு என்கிற மிகப் பெரிய செல்வம் நம்மிடமிருந்து பறி போனதால், பைசா காசு செலவில்லாமல் நமக்குக் கிடைத்த எரு உரம் நமக்குக் கிடைக்காமலே போனது. வயல்களில் எரு உரங்களைப் போடுவதற்குப் பதிலாக ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொடுத்து செயற்கையான உரங்களை வாங்கி வயலில் போட்டோம். முதலில் அதிக விளைச்சலைக் கொடுத்த அந்த உரங்கள் இப்போது விளைச்சலின் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக மாறிவிட்டது. இனி விவசாயத்தில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டு வரவேண்டும் என்றால், விவசாயப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்றால், நிலத்துக்கும் நமக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத ஒரு வேளாண்மையை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு இயற்கை விவசாயம்தான் ஒரே தீர்வு.
`இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் மாடுகள் வேண்டும். எங்களிடம் மாடு இல்லை. அதனால்தான் நாங்கள் இயற்கை விவசாயம் செய்வதில்லை' என்று வருத்தப்படுகிற விவசாயிகள் பலர். அப்படிப்பட்ட விவசாயிகளில் நல்லவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவசமாக மாடுகளைத் தந்து வருகிறோம்'' என்கிறார் நடேசன்.

மாட்டுக் கொட்டிலில் மா என்று மாடுகள் கத்த, ``கொஞ்சம் இருங்க! எங்க குழந்தைகளுக்கு இது டீ டைம். நீங்க காப்பி சாப்பிடுங்க. குழந்தைங்களுக்கு தண்ணி காட்டியிட்டு வந்துர்றேன்'' என்று ஓடினார். சில நிமிடங்களுக்குக் பிறகு வந்தவரிடம் ஒரு கேள்வி கேட்டோம்.

``ஒரு மாடு வாங்க வேண்டும் என்றால் ஐந்தாயிரம் ரூபாயாவது செலவாகும் என்கிறார்கள். உங்களால் மட்டும் மாடுகளை எப்படி இலவசமாகத் தர முடிகிறது?'' - நடேசனிடம் கேட்டோம்.

``கறவை நின்று போன மாடுகள், வயதான மாடுகள், நோய்வாய்ப்பட்ட மாடுகளால் பயன் இல்லை என்று நினைத்து, அவற்றைத் தொடர்ந்து பராமரிக்க யாரும் விரும்புவதில்லை. இப்படிப்பட்ட மாடுகளை கிடைத்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள். இந்த மாடுகள் பெரும்பாலும் கேரளாவுக்குத்தான் செல்கிறது. அங்கு அந்த மாடுகள் வெட்டப்பட்டு இறைச்சியாக விற்கப்படுகிறது. அரசின் முறையான அனுமதி எதுவும் இல்லாமல் இப்படிக் கடத்திச் செல்லப்படும் மாடுகளை பிராணி வதை தடுப்புச் சங்கத்தின் உதவியுடன் பிடித்து, அந்த மாடுகளை மீட்டு வருகிறோம். அந்த மாடுகளை எங்கள் பசு பாதுகாப்பு மையத்தில் வைத்து பராமரிக்கிறோம்.

பயனற்ற மாடுகளை விற்று, அறுப்புக்கு அனுப்பத் தயாரில்லாத கருணையுள்ளம் கொண்ட சிலர், அந்த மாடுகளைக் கோயில்களுக்குத் தானமாக கொடுத்து விடுகிறார்கள். தமிழகம் முழுக்க உள்ள நூற்றுக்கணக்கான கோயில்களில் ஆயிரக்கணக்கான மாடுகள் தானமாக வழங்கப்படுகிறது. இந்த மாடுகளை ஒரு சில ஆண்டுகள வரை வைத்துப் பராமரிக்கிறது கோயில் நிர்வாகம். பின்பு, ஏலமுறையின் மூலம் யாருக்கு வேண்டுமானாலும் விற்றுவிடுகிறது. இந்த மாடுகளை வெட்டி கறியாக்கி கேரளாவில் விற்க நினைக்கும் சிலர்தான் மீண்டும் மீண்டும் வேறுவேறு ரூபகங்களில் வந்து இந்த மாடுகளை வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்.
இதனை எதிர்ந்து நாங்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு போட்டோ ம். கோயிலுக்கு நேர்ந்து விடப்படும் மாடுகள் ஏலம் மூலமாக யாருக்கும் விற்கக்கூடாது. அதற்கு எங்களிடம் கொடுத்தால் நாங்கள் அதை பராமரிக்கத் தயாராக இருக்கிறோம் என்று சொன்னோம். வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவே, கோயில்களிலிருந்து பல நூற்றுக்கணக்கான மாடுகள் இப்போது எங்களுக்குக் கிடைக்கின்றன. இவைகளைத்தான் ஏழை விவசாயிகளுக்கு இலவசமாகத் தருகிறோம். நாங்கள் தரும் மாடுகள் பால் கொடுக்காது. குட்டி போடாது. வண்டி இழுக்காது. ஆனால் விலை மதிப்பற்ற சாணத்தையும், கோமியத்தையும் உங்களுக்குக் கொடுக்கும்!'' - கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார் நடேசன்.

`யார் கேட்டாலும் மாடுகளைக் கொடுப்பீர்களா?' - இது நம்முடைய அடுத்த கேள்வி.

``நிச்சயமாகக் கொடுப்போம். ஆனால் நாங்கள் சொல்லும் நிபந்தனைகளை அவர்கள் நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டும். மாடு வேண்டும் என்று எங்களிடம் கேட்டு வருகிறவர்கள் ஒரு ஏக்கரோ அல்லது இரண்டு ஏக்கரோ நிலம் வைத்திருக்க வேண்டும். மாடுகள் கொடுக்கும் சாணத்தையும், கோமியத்தையும் பயன்படுத்தி, இயற்கை விவசாயம் செய்பவராக இருக்க வேண்டும். செயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்பவர்களுக்கு நாங்கள் மாடுகளைக் கொடுப்பதில்லை.

இந்த கண்டிஷன்கள் அடிப்படையானவை. இதை விட முக்கியமான இன்னொரு கண்டிஷன் இருக்கிறது. மாடு வேண்டும் என்று கேட்டு வந்தவுடன் யாருக்கு வேண்டுமானாலும் மாடுகளைக் கொடுத்துவிட மாட்டோம். மாடு வேண்டும் என்று கேட்கிறவர் யார், எப்படிப்பட்டவர், பசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அக்கறை அவருக்கு இருக்கிறதா அல்லது மாடுகளை இலவசமாக வாங்கி, கிடைத்த விலைக்கு விற்க வேண்டும் என்று நினைக்கிறாரா என்கிற மாதிரி பல கோணங்களில் அவர் பற்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் விசாரிப்போம். தீர விசாரித்த பிறகு அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால்தான் மாடுகளைக் கொடுப்போம். மாடுகளை நிச்சயம் பாதுகாப்பார் என்கிற நம்பிக்கை அவர் மீது எங்களுக்கு வந்துவிட்டால் ஒரு மாடு அல்ல, இரண்டு மாடு அல்ல, நூறு மாடுகளைக்கூட கொடுப்போம்.

மாடுகளைக் கொடுத்த பிறகு எப்போது வேண்டுமானாலும் உங்கள் வீட்டுக்கு நாங்கள் வருவோம். நாங்கள் கொடுத்த மாட்டை நீங்கள் நன்றாக வைத்திருக்கிறீர்கள் என்கிற திருப்தி எங்களுக்கு ஏற்பட்டால்தான் மாடு உங்களிடம் தொடர்ந்து இருக்கும். மாட்டுக்கு சரியான தினி கொடுக்காமல் காயப் போட்டால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டோம்.
பொதுவாக ஒரு தனிப்பட்ட நபர் வந்து எங்களிடம் மாடு கேட்பதைவிட, மூன்று, நான்கு பேர் சேர்ந்து, கூட்டாக வந்து மாடுகளைக் கேட்டால், அவர்களுக்கு மாடு வழங்க முன்னுரிமை அளிப்போம். இப்படி மாடுகளைக் கொடுப்பதன் மூலம் அடிக்கடி வந்து மாடுகளைக் கண்காணிக்கவும் எங்களுக்கு வசதியாக இருக்கும்'' என்கிறார் நடேசன். கோவர்தன் அறக்கட்டளையிலிருந்து மாடுகளைப் பெற்றதன் மூலம் பலருடைய வாழ்க்கைப் பாதையே மாறி இருக்கிறது. இதற்கு ஒரே ஒரு உதாரணம், கூத்தம்பாக்கத்தில் உள்ள அன்னை இந்திரா மகளிர் சுயஉதவிக் குழு. இந்தக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு ஆளுக்கொரு மாட்டை கொடுத்திருக்கிறது இந்த அமைப்பு. அந்த மாடுகளை வைத்துக் கொண்டு அவர்கள் காய்கறி வளர்த்தார்கள். முன்பு வீட்டில் உள்ள வேலைகளை மட்டுமே செய்து வந்த அந்தப் பெண்கள் இன்று கை நிறைய சம்பாதிக்கிறார்கள். இப்படித் தமிழகம் முழுக்க நூற்றுக்கணக்கான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகிறார் நடேசன்.

கோவர்தன் அறக்கட்டளையைப் பொருத்த வரை முக்கியமான இன்னொரு விஷயம், இந்த அமைப்பு கொடுத்த மாடுகளை வைத்துக் கொண்டு, இயற்கையான முறையில் பயிர்களை விளைவித்தால் அதை விற்றுத் தரவும் உதவி செய்கிறது. ``தாம்பரத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தினமும் இயற்கையாக விளையும் அரிசி ஒரு மூட்டை வேண்டும் என்று கேட்டார்கள். எங்களால் கொடுக்க முடியவில்லை. நூறு லிட்டர் பால் வேண்டும் என்று கேட்டார்கள். எங்களால் கொடுக்க முடியவில்லை. இயற்கையாக விளைவிக்கப்படும் பொருட்களுக்கு நிறைய டிமாண்ட் இருக்கிறது. சப்ளைதான் இல்லை'' என்கிறார் நடேசன்.

நடேசனின் முகவரியும் தொலைபேசி எண்ணும்:

கோவர்த்தன் அறக்கட்டளை,
6, வடக்கு ஆஞ்சனேயர் கோவில் தெரு,
மாருதி நகர்,
ராஜகீழ்ப்பாக்கம்,
சோலையூர்,
சென்னை-600073.

044-22272618.

Thursday, April 19, 2007

விவசாயம் அழிவதற்குக் காரணம் அரசியல்வாதிகள்தான்!

``இன்றைய தேதியில் விவசாயியாக பிறக்க யாருக்குமே விருப்பம் இல்லை. இந்த ஈனத் தொழில் என்னோடு போகட்டும். என் மகன் விவசாயம் செய்ய வரவே கூடாது. எப்பாடு பட்டாவது எட்டாவதோ, பத்தாவதோ படிக்க வைத்து, ஏதாவது ஒரு வேலைக்கு அனுப்பிவிட வேண்டும் என்றுதான் ஒவ்வொரு தந்தையும் நினைக்கிறான். மில் வேலையில் கிடைக்கும் இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்தை வாங்கத்தான் ஒவ்வொரு இளைஞனும் ஆசைப்படுகிறானே தவிர, வேளாண்மை செய்ய ஆசைப்படுவதில்லை. அவ்வளவு ஏன், பட்டரை வேலைக்கெல்லாம் தயாராக இருக்கிறார்கள். மண்வெட்டியை எடுத்து வரப்பை வெட்ட வேண்டும் என்றால் சிதறி ஓடி விடுகிறார்கள்.

விவசாயிகள் விவசாயக் கூலி வேலை செய்ய ஆட்கள் கிடைக்காமல் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமை இன்னும் சில காலம் தொடர்ந்தால் உணவுப் பொருட்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புண்டு. விவசாயமும் விவசாயிகளும் அழிவதற்குக் காரணம் அரசியல்வாதிகளும் அவர்கள் வகுத்த ஒப்பந்தங்களும்தான்'' - இப்படி மனம் கொதித்து பேசுகிறார் மாம்பாக்கம் விவசாயி வீரபத்ரன்.

கிட்டத்தட்ட எழுபது வயதை நெருங்கும் வீரபத்ரன், பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரம் படித்தவர். பொருளாதாரத் துறையில் புகழ் பெற்ற பேராசிரியராக இருந்த எம்.ஜி.ரங்காவின் மாணவர். அரசு வேலை கிடைத்த போதும், விவசாயமே போதும் என்று இருந்துவிட்டார். மாம்பாக்கம் ஒன்றியத்தின் சேர்மனாகவும் பல ஆண்டுகள் இருந்திருக்கிறார். விவசாயிகளின் இன்றைய நிலை பற்றி அவர் மனம் புழுங்கிப் பேசிய பேச்சு இதோ...

''தமிழ்நாட்டில் உழுதவன் கணக்கு பார்த்தால் உழவுக் கோல் இருக்காது என்று சொல்லும் நிலைதான் பரவலாக இருக்கிறது. எல்லோருக்கும் கல்வி கொடுத்தார்கள். ஆனால், பண்டைய காலத்திலிருந்து விவசாயியின் குழந்தைகளுக்கு மட்டும் படிப்பே கொடுக்காமல் பாமரனாகத்தான் வைத்திருந்தார்கள்.

விவசாயிகளின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததற்கு காரணம், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களின் விலையேற்றத்தை முழுமையாகத் தடுத்து நிறுத்தப்பட்டதுதான். உதாரணமாக, 1970ஆம் ஆண்டில் 35 குதிரை சக்தி கொண்ட ஒரு டிராக்டரின் விலை இருபதாயிரம் ரூபாய். அப்போது ஒரு மூட்டை நெல் (75 கிலோ) 45 முதல் 50 ரூபாய் வரை விற்றது. கிட்டத்தட்ட 400 மூட்டை நெல் விற்று ஒரு டிராக்டர் வாங்க முடிந்தது. ஆனால் அதே டிராக்டரின் விலை இன்று சுமார் 5 லட்ச ரூபாய். ஆனால், ஒரு மூட்டை நெல்லின் விலை 350 முதல் 400 ரூபாய்தான். கிட்டத்தட்ட ஆயிரம் மூட்டை நெல் விற்றால்தான் இன்று ஒரு டிராக்டர் வாங்க முடியும். நெல்லின் பண்டமாற்று சக்தி (எக்ஸ்சேஞ்ச் வால்யூ) எப்படித் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

அன்று ஒரு டன் இரும்பு ஆயிரம் ரூபாய். இருபது மூட்டை நெல் விற்று ஒரு டன் இரும்பை வாங்க முடிந்தது. இன்றைய தேதியில் 75 மூட்டை நெல் விற்றால்தான் வாங்க முடியும்.

அன்று ஒரு மாடு ஆயிரம் ரூபாய். அதே மாடு இன்று இருபதாயிரம் ரூபாய். அன்று ஒரு லிட்டர் டீசலின் விலை 0.67 காசுதான். இன்று அதே டீசல் 35 ரூபாய்.

அன்று தினக்கூலி வெறும் 2.50. இன்று நூறு ரூபாய். அன்று ஒரு மண்வெட்டி விலை இரண்டு ரூபாய். இன்று ஒரு மண்வெட்டியின் விலை 90 ரூபாய்.

எதற்காக இத்தனைப் புள்ளிவிபரங்களைச் சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா?

இவை எல்லாம் ஒரு விவசாயிக்குத் தேவையான முக்கியமான இடுபொருட்கள். விலை பார்க்காமல் ஒவ்வொரு விவசாயியும் இதை வாங்கியே தீரவேண்டும்.

தவிர, விவசாயியும் சாதாரண மனிதன்தான் என்கிற முறையில் ஒவ்வொரு விஷயத்துக்கும் அவன் செலவு செய்தாக வேண்டியிருக்குது. உதாரணமாக, அன்று ஒரு சோப் விலை ஐம்பது காசு. இன்று அதே சோப்பின் விலை 12 ரூபாய். அன்று ஒரு பிஸ்கட்டின் விலை 50 பைசா. இன்று 11 ரூபாய். அன்று ஒரு வேட்டி இரண்டு ரூபாய்க்குள் கிடைத்தது. இங்கு 50 ரூபாய்க்கும் அதிகம்.

அன்று ஒரு மூட்டை நெல் விற்று ஒரு சவரன் வாங்க முடிந்தது. இன்று 25 மூட்டைகள் விற்றால் பவுன் பார்க்க முடியும்.

1970 முதல் 2000 ஆண்டுக்குள் தொழிற்சாலைப் பொருட்களின் விலை 35 முதல் 40 மடங்கு அதிகரித்துள்ளது. அரசு உத்யோகஸ்தர்களின் ஊதியம் 50 மடங்கு உயர்ந்துள்ளது. ரூபாய் கணக்கில் முதலில் போடப்பட்ட திட்டங்கள் ஆயிரமாகி, லட்சமாகி, இன்று கோடிகளை தாண்டிவிட்டது. ஆனால், நெல் மற்றும் கோதுமையின் விலை மட்டும் 8 மடங்கு மட்டுமே உயர்ந்துள்ளது.
இந்த ஏற்றத்தாழ்வை யார் இதை உருவாக்கினார்கள் அல்லது எதனால் உருவானது? இதை சீர்படுத்த எந்த அரசியல்வாதியிடமாவது ஏதாவது திட்டம் இருக்கிறதா? மற்ற எல்லாப் பொருட்களின் விலையும் அபாரமாக உயரும். ஆனால் விவசாயி விளைவிக்கும் பொருட்கள் மட்டும் அவ்வளவு உயராது என்றால் அது என்ன நியாயம்?

கடந்த ஐம்பது ஆண்டுகளில் அரசில் உள்ளவர்கள் ஐந்து ஊதியக் கமிஷன் அமைத்து தங்கள் ஊதியங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டார்களே ஒழிய, படிக்காத விவசாய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டுமென்று அவர்கள் ஒரு போதும் நினைக்கவில்லை! பருத்தித் தற்கொலைகள் எத்தனையோ நடந்த போதும், அரசாங்கம் எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நம் விவசாயிகளுக்கு இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை வெளிநாட்டில் உள்ள விவசாயிகளுக்கு எப்போதோ ஏற்பட்டது. 1939ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி பல விதமான எதிர்ப்புகளுக்கிடையே தனது சாதுர்யத்தை பயன்படுத்தி நான்கு முக்கியமான சட்டங்களைக் கொண்டு வந்தார். அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணச் சங்கம், நில நிர்வாகச் சட்டம், விலை நிர்ணய சட்டம், விவசாய உற்பத்தியாளர் அங்காடிச் சட்டம் எனக் கொண்டு சட்டங்களை இயற்றினார்.

இந்தச் சட்டத்தின்படி, எல்லா விவசாயிகளின் கடனும் ரத்து செய்யப்பட்டது. எல்லாத் துறைகளிலும் விளை நிலம் உயர்ந்துள்ளது போல, விவசாயத்தில் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. அந்த விலைக்குப் பின்பும் அதிகம் ஏறவும், இறங்கவும் முடியாத படிக்கு, உற்பத்தியாளர் சந்தைகள் வாரந்தோறும் அமைக்கப்பட்டது. தேவைக்கு மேல் உற்பத்தி காட்டாமல் இருக்க, அதாவது விவசாயிகள், விவசாயம் செய்யாமல் சும்மா இருக்க பண்ணை எப்படி மானியம் கொடுத்தார்கள்.

இன்று அமெரிக்காலும், கனடாவிலும் விவசாயம் செய்ய ஒரு ஏக்கருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மானியமாக கொடுக்கிறார்கள். கொடுத்தால் தான் விவசாயிகள் விவசாயம் செய்கிறார்கள். மானியத்தை உரிமையோடு வசூல் செய்ய அங்கு சட்டமே உள்ளது.

நம் நாட்டில் அரசியல்வாதிகள், விவசாயிகளின் உண்மையான பிரச்னையைக் கண்டறிவதற்கு பதிலாக, மானியத்துக்கு மேல் மானியம் கொடுத்தார்கள். மின்சாரத்திற்கு மானியம் கொடுத்தார்கள். இதனால் பம்ப்செட் பயன்பாடு பெருகியது. நிலத்தடி நீர் அதாலபாதாளத்திற்குப் போனது. உரத்திற்கு மானியம் கொடுத்தார்கள். குறைந்த விலைக்குக் கிடைக்கிறதே என எல்லா விவசாயிகளும் உரத்தை வாங்கி நிலத்தில் கொட்டினார்கள். மகசூல் பெருகுவதற்குப் பதிலாக நிலம் பாழாய் போனது மிச்சம்.

வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். பரிதாபப்பட்ட அரசாங்கம், வட்டியை ரத்து செய்ததே ஒழிய கடனை ரத்து செய்யவில்லை. இன்றும் அதிகமாக கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள். இந்த ஜென்மம் முழுக்க உழைத்தாலும் விவசாயி கடன் இல்லாமல் இருக்க முடியுமா என்பது சந்தேகமே.
`விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து 'எங்களுக்குத் தேவை எந்த இலவசங்களும் அல்ல. எங்கள் குறைகளைத் தீர்க்கும் சரியான திட்டங்கள்தான்' என்று ஒரே குரலில் சொல்ல வேண்டும். அந்தக் குரல் அதிகார அமைப்பில் உள்ளவர்களின் காதுகளை எட்ட வேண்டும். தற்போது விவசாயியின் முகத்தில் புன்னகையை பார்க்க முடியும். விவசாயத்திற்கு ஒரு மரியாதை கிடைக்கும்!'' என்று பொருமித் தீர்த்தார் வீரபத்திரன்.

ஆர அமர யோசித்துப் பார்த்தால் அவர் சொல்வதில் நிறைய நியாயம் இருப்பது புரியும்.

Monday, April 16, 2007

தமிழகத்தின் நம்பர் 1 விவசாயி!

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
- சாதனை செய்யும் நம்பர் ஒன் விவசாயி


``விவசாயத்துக்கு இது போறாத காலம்! முன்ன மாதிரி வானம் என்ன, மும்மாரி மழை பொழிஞ்சுகிட்டா இருக்கு! தண்ணியில்லாம எப்படி விவசாயம் செய்ய முடியும்?ஒஒ என்று புலம்பும் கிராமத்துப் பெருசுகள் பலர்.

வகை தொகை இல்லாமல் மரங்கள் வெட்டப்பட்டதினால் மழையின் அளவு கடுமையாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மை. அதற்காக, மழையே இல்லை என்று நிலத்தை மூட்டை கட்டி, தூக்கி எறிந்துவிட வேண்டிய கட்டாயம் நமக்கு இன்னும் ஏறபட்டுவிடவில்லை. தண்ணீர் பற்றாக்குறை என்கிற தீர்க்க முடியாத பிரச்னை ஒரு பக்கமிருக்க, கணக்கு வழக்கில்லாமல் தண்ணீரை ஊற்றி, விலை மதிப்பற்ற செல்வத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இன்றைய தேதியில் தண்ணீர் சிக்கனத்திற்கு வழி சொல்கிறவர்களைத் தாராளமாக தலைவர்களாக ஏற்றுக் கொள்ளலாம். திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள புளியங்குடி விவசாயி அந்தோணிசாமி, கரும்பு சாகுபடியில் தண்ணீர் சிக்கனத்திற்காக பல ஆராய்ச்சிகளைச் செய்தவர்.

``காவிரியாற்றுப் பாசன விவசாயிகள் வேண்டுமானால் தண்ணீரை இளக்காரமாக நினைக்கலாம். நெல்லுக்கும் வாழைக்கும் கரும்புக்கும் மடை திறந்து வெள்ளத்தைப் பாய்ச்சலாம். ஆனால், நாங்களோ வானம் பார்த்த பூமிக்குச் சொந்தக்காரர்கள். எங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு மழைத்துளியும் வருண பகவான் எங்களுக்கு அளிக்கும் உயிர்மூச்சு. ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட வீணடிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். அதனாலதான் தண்ணீர் சிக்கனத்திற்காகப் பல வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம்ஒஒ என்கிறார் அந்தோணிசாமி.

``தண்ணீர் சிக்கனத்திற்காக நீங்கள் கடைபிடிக்கும் வழிமுறைகள் என்ன?ஒஒ என்று அந்தோணிசாமியிடம் கேட்டோ ம்.

``சொல்றேன். அதுக்கு முன்னால உங்ககிட்ட ஒரு கேள்வி. என் தோட்டத்தை அப்படியே ஒரு பொடி நடை நடந்து போய் சுத்திப் பார்த்துகிட்டே பேசலாமா?'' என்று கேட்கிறார். அன்போடு நம்மை அழைத்துச் சென்ற அந்தோணிசாமி அண்ணாச்சியைப் பற்றிய அறிமுகத்தை இங்கேயே செய்துவிடுவது நல்லது.

புளியங்குடி பக்கத்தில் உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த இவர், பாரம்பரியமான விவசாயி. பள்ளிக்கூடத்தில் எட்டாவது வரை மட்டுமே படித்தவர். மத்திய அமைச்சராக இருந்த அமரர் கிருஷ்ணசாமி இவரது பள்ளித் தோழர்.

இளைஞர் பருவம் தொட்டே விவசாயத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என்று வெறி கொண்டவர். செயற்கை உரங்களை நம்பி இவர் தீவிரமாக விவசாயம் செய்யப் போக கிட்டத்தட்ட 50 லட்ச ரூபாய் கடனாளியாக மாறிவிட்டாராம் அண்ணாச்சி. பிறகு செயற்கை உரத்தைத் தூர எறிந்துவிட்டு, இயற்கை விவசாயத்துக்கு மாறினார். பட்ட கடன் 50 லட்சத்தையும் மொத்தமாக துடைத்து எறிந்ததோடு, இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கருக்கு சொந்தக்காரர் அண்ணாச்சி. அறுபது ஏக்கருக்கும் மேலே எலுமிச்சையும் இன்னுமொரு அறுபது ஏக்கருக்கு மேலே கரும்பும் வளர்க்கிறார்.

``கரும்பு வளர்க்க மிக அதிகமான தண்ணீரைத் தமிழகத்து விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். ஒரு கிலோ சர்க்கரை உருவாக்க 20 முதல் 22 ஆயிரம் லிட்டர் தண்ணீரச் செலவழிக்கிறார்கள். ஆனால், நான் ஒரு கிலோ சர்க்கரையை உருவாக்க 1500 லிட்டர் முதல் 1800 லிட்டர் தண்ணீர் மட்டுமே செலவழிக்கிறேன். அதாவது, மற்ற விவசாயிகளுடன் ஒப்பிடும் போது 10 சதவிகிதத்துக்கும் குறைவான தண்ணீரையே பயன்படுத்துகிறேன்!''

``அப்படியா! ஆச்சரியமாக இருக்கிறதே! உங்களால் மட்டும் எப்படி இவ்வளவு குறைவான நீரைக் கொண்டு கரும்பை வளர்க்க முடிகிறது?'' என்று கேட்டவுடன், அதற்கான பதிலை கொஞ்சமும் தயக்கமில்லாமல் தெள்ளத் தெளிவாக சொல்ல ஆரம்பித்தார்.

``கால்வாய் பாசனக்காரர்கள் மடையைத் திறந்து வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிற மாதிரி நான் கால்வாயைத் திறந்து தண்ணீரைக் கொட்ட மாட்டேன். சொட்டு நீர் பாசனம்தான் எனக்கு அடிப்படை.
நிலத்தை நன்றாக உழுதபின் ஆறு அடி, மூன்று அடி என்று இடைவெளி விட்டு அடி மடுக்கிறேன். முதலில் மூன்று அடி பார், அடுத்து ஆறு அடி பார். மீண்டும் மூன்று அடி பார், அடுத்து ஆறு அடி பார். இப்படி மாற்றி, மாற்றி அடி மடுக்குறேன். ஆறு அடி பாரில் பயறு வகைப் பயிர்களை விதைத்து வளர்க்கிறேன். அடுத்த மூன்றடி பாரில் இரண்டு வரிசையாக கரும்பை நட்டேன். கரும்புக்கு இடையில் பயறு வகைகளாகப் பிடுங்கி மூடாக்காக வைத்தேன்.

இதன் பின்னர், பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஏதாவது ஒரு பயறு வகைப் பயிரை ஊன்றிவிடுகிறேன். அது வளர்ந்து மூடாக்கிற்குப் பயன்படும். குறிப்பாக, 45 நாட்கள் மூடாக்குப் பயிர்களை வளர விட்டும் பின்பு பிடுங்கி மூடாக்காக பயன்படுத்துகிறேன்.

பின்னர் தொண்ணூறாம் நாள் அடுத்த மூடாக்கு செய்ய வேண்டும். அதற்கு அடுத்ததாக பயிர் ஊக்கியான மீன் அமினோ அமிலத்தை இரண்டாம் மூடாகு செய்த பிறகு ஒரு லிட்டருக்கு நூறு லிட்டர் நீர் என்ற அளவில் சேர்த்துத் தெளிக்க வேண்டும். 120-ஆம் நாள் பஞ்சகாவ்யா கரைசலைத் தெளிக்க வேண்டும்.

இப்படிச் செய்வதன் மூலம் பத்து டன் உரத்தை நிலத்தில் கொட்டியதர்கு சமமாக ஆகிவிடுகிறது. 160-ஆம் நாள் முதல் சோகையை உறிக்க வேண்டும். உரித்து கரும்புக்கு அடியில் வைத்து மீண்டும் மண்ணால் மூடிவிட வேண்டும். இது முடிந்த பிறகு மீன் அமினோ அமிலம் தெளிக்க வேண்டும்.
210-ஆம் நாள் இரண்டாவது முறை சோகை உரிக்க வேண்டும். முன்பு சொன்னது போலவே, இதையும் மூடாக்கு செய்ய வேண்டும். மீண்டும் மீன் அமினோ அமிலம் அல்லது பஞ்சகாவ்யதைத் தெளிக்க வேண்டும்.
250-ஆம் நாள் கடைசி சோகையை உரிப்பு செய்ய வேண்டும். அது அடுத்த பயறு வகைப் பயிருக்கான உரமாக மாறும். இப்படித் தொடர்ந்து நிலத்தைப் பண்படுத்துவதன் மூலம் நிலத்தில் உள்ள மண்புழுக்கள், பூச்சிகள் என பல உயிரினங்கள் கோடிக் கணக்கில் பெருகுகின்றன.இதனால் நிலம் குளுகுளுவென இருக்கும். வெளியே முப்பது டிகிரி செல்சியஸ் வெயில் அடித்தால் என் தோட்டத்துக்குள்ளே 25 டிகிரி செல்சியஸ்தான வெப்பம் இருக்கும். வெப்பம் அதிகம் இல்லாததால் தண்ணீரின் தேவையும் கணிசமாகக் குறைந்துவிடுகிறது. இதுதான் நான் செய்யும் தொழில்நுட்பம்தான்!'' என்று ஒரு விவசாயக் கல்லூரிப் பேராசிரியர் மாதிரி பேசுகிறார் அந்தோணிசாமி.

தமிழகத்தின் சராசரி கரும்பு விளைச்சல் ஏக்கருக்கு முப்பது டன். இது இந்திய சராசரியை விட கொஞ்சம் அதிகம். ஆனால், அந்தோணிசாமியோ ஒரு ஏக்கருக்கு சராசரியாக அறுபது டன் கரும்பை சாகுபடி செய்கிறார். இத்தனைக்கும் இந்த உரம், அந்த உரம், மருந்துச் செலவு என்று பத்து ரூபாய்கூட செலவழிப்பதில்லை. செலவும் இல்லை; அதே நேரத்தில் விளைச்சலும் அதிகம். தமிழ்நாட்டில் உள்ள மற்ற விவசாயிகளும் அந்தோணிசாமியைப் பின்பற்றினால் லட்சம் லட்சமாகப் பணத்தைக் குவிக்கலாம்.

இது மட்டுமல்ல, அந்தோணிசாமியின் தோட்டத்தில் வளரும் கரும்பில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கணக்கிட்டார்கள். கிட்டத்தட்ட 80 சதவிகிதம் குளுக்கோஸ் இருப்பதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஆர்வமுள்ள விவசாயிகள் அவரது தோட்டத்துக்கு ஒருமுறை நேரடியாகச் சென்று பார்த்து விட்டு வரலாம்!

அண்ணாச்சிக்கு நல்லதாக நாலு வார்த்தை சொல்லி பாராட்ட நினைப்பவர்கள் இந்த முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். xavierukr@yahoo.com

Friday, April 13, 2007

ஆடு மேய்க்கலாம்! ஆயிரமாயிரமா சம்பாதிக்கலாம்!

``நீயெல்லாம் ஆடு மேய்க்கத் தாண்டா லாயக்கு' என்று யாராவது உங்களைப் பார்த்து திட்டினால் கோபபபடாதீர்கள். சந்தோஷப்படுங்கள். ஏதோ ஒரு படிப்பைப் படித்து விட்டு நான்காயிரம், ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு ஆளாய் அலைவதை விட, வீட்டிலிருந்தபடியே உடம்பு நோகாமல் ஆடு வளர்த்து அதே பணத்தைச் சம்பாதிக்கலாம். இதுக்கு நான் கியாரண்டி'' - நம்பிக்கையோடு உறுதி தருகிறார் தாமோதரன்.

விழுப்புரம் - பாண்டிச்சேரி சாலையில் வில்லியனூருக்குப் பக்கத்தில் இருக்கிற சிறிய கிராமம் பெரம்பை. இங்கு பெஸ்ட் பார்ம் என்கிற பெயரில் ஒரு ஆட்டுப் பண்ணையை நடத்தி வருகிறார் தாமோதரன். அதில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆடுகளையும் வளர்த்து வருகிறார். ஆடு வளர்ப்புக்கு இவர் வந்ததே சுவாரஸ்யமான தனிக்கதை.

``நான் ஒரு சென்னைவாசி. பிறந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தான். தமிழ்நாட்டு கிராமங்களில் கலைப் பொருட்களை இலங்கை, மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா என்று பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதுதான் என் வேலை.

எனக்கு காந்தியத்தில் நிறைய ஈடுபாடு உண்டு. கிராமங்களின் முன்னேற்றம்தான் உண்மையான முன்னேற்றம் என்று உறுதியாக நம்புகிறவன் நான். முப்பத்திரண்டு வயதில் திடீரன் எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அந்த வயதிலேயே `ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை நடந்தது. `இனிமேல் நீண்ட தூரம் அடிக்கடி பயணம் செய்யக்கூடாது என்றார்கள் மருத்துவர்கள். கிராமத்தில் தங்கி மக்களுக்காகப் பணி செய்ய சரியான வாய்ப்பு இது என்று நினைத்து, பாண்டிச்சேரிக்கு வந்தேன். ஆடு வளர்ப்பில் இறங்கினேன். இப்போது எனக்கும் ஓரளவுக்குச் சம்பாத்தியம் கிடைக்கிறது. மக்களுக்கும் வேலை தர முடிகிறது'' என்கிறார் தாமோதரன்.

ஆடு வளர்ப்பது பற்றி எ முதல் இசட் வரை அருமையாகச் சொல்லித் தருகிறார் தாமோதரன். அவர் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்போமா?

``ஆடு வளர்ப்பது லாபகரமான தொழில் என்பதில் யாருக்கும் எள்ளளவு சந்தேகமும் வேண்டாம். நாம் வளர்க்கும் ஆடுகளை மிக மிக எளிதாக மார்க்கெட்டிங் செய்துவிடலாம் என்பதால், இந்தத் தொழிலில் ஆண், பெண் வித்தியாசமின்றி யார் வேண்டுமானாலும் தாராளமாக இறங்கலாம்.
கொட்டில் முறையில் நீங்கள் ஆடு வளர்க்கப் போகிறீர்கள் என்றால் உங்களுக்கு சொந்தமான இடத்திலேயே ஷெட் அமைத்து, ஆடு வளர்க்கலாம். அதற்கு உங்களுக்கு இரண்டு ஏக்கர் இடம் இருந்தால் போதும். பகலில் வெளியே ஆட்டை மேயவிட்டு, இரவில் கொட்டிலில் அடைத்துவிடலாம். மழைக் காலங்களில் ஆட்டை வெளியே கொண்டு போய் மேய்க்க முடியாதபோது, உங்களிடம் உள்ள இரண்டு ஏக்கரில் வளரும் பசுந்தீவனத்தை ஆடுகளுக்கு உணவாகக் கொடுக்கலாம்.

உங்களிடம் நிறைய இடம் இருக்கிறது. மேய்ச்சலுக்காக ஆடுகளை வெளியே அனுப்பத் தேவையில்லை என்றால், ஆறு ஏக்கரை முதலில் தனியாக ஒதுக்கிவிடுங்கள். ஆட்டுக்குத் தேவையான பசுந்தீவனத்தை இந்த ஆறு ஏக்கரில் வளர்த்து, சாப்பிடத் தாருங்கள். நீங்கள் ஆடு வளர்க்கும் இடத்தைச் சுற்றி மேய்ச்சல் நிலம் இல்லை என்றால் தனியாக இடம் ஒதுக்கி, பசுந்தீவனம் வளர்த்து, ஆட்டைப் பராமரிப்பது தவிர வேறு வழியில்லை.
கொட்டில் முறையில் வளர்க்கும் போது ஆடுகளுக்கு அடிக்கடி நோய் வர வாய்ப்புண்டு. மேய்ச்சல் முறையில் வளர்த்தால் ஆடுகள் நிறைய அலைய வேண்டியிருக்கும். இதனால் ஆட்டின் உடல் எடை குறையும். இரண்டையும் சம அளவில் கலந்து வளர்க்கப்படும் ஆடுகள், நல்ல உடல் எடையோடு ஆரோக்கியமாக இருக்கும்.

நம்மூரில் நிறைய வகை ஆடுகள் உண்டு. நாட்டு ஆடுகள் வளர்ப்பதற்குச் சிறந்தவை. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள் செங்கனி, பால்கனி அருமையான ஆடு வகைகள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியாடும் நல்ல இறைச்சி தரக்கூடியவை.

ஆடுகளை வளர்க்க நிலங்கள் தயார் என்றால், சில விஷயங்களை அவசியம் தெரிந்து கொள்வது நல்லது. முதலில் ஆடுகளை சந்தையில் வாங்குவதைவிட, பண்ணைக்கு போய் வாங்குவது நல்லது. இரண்டாவது, உங்களுக்கான பசுந்தீவனத்தை நீங்களே வளர்த்தால்தான் செலவு குறையும். கலப்பினத் தீவனத்தை ஆடுகளுக்கு நிறைய தந்தால், நமக்குத்தான் செலவு அதிகமாகும்.

தொழில் ரீதியில் ஆடு வளர்க்க விரும்புகிறவர்கள், குட்டி ஆடுகளை வாங்காமல், ஒன்றரை வயதுள்ள இரண்டு பல்லுள்ள ஆடுகளாகப் பார்த்து வாங்க வேண்டும். அந்த மாதிரி ஆடுகள்தான் அடுத்த ஆறு மாதத்தில் குட்டி போடும். பதினைந்து மாதங்களுக்குப் பிறகு நல்ல உடல் எடையோடு இருக்கும். விற்றாலும் நல்ல விலைக்குப் போகும்.

ஒரு ஆட்டின் விலை ஆயிரம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை விற்கிறார்கள். எந்த இனத்து ஆடுகளை வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து ஆட்டின் விலை மாறும்'' - அடிப்படையான விஷயங்களை சொல்லிக் கொண்டே போகிறார் தாமோதரன்.

ஓரளவுக்கு வருவாய் தரக்கூடிய வகையில் எல்லோரும் ஆடு வளர்க்கிற மாதிரி ஒரு புதிய முறையை பல கிராமங்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் தாமோதரன். இரண்டு ஏக்கர் நிலமும் மூன்று பேர் வேலை பார்க்க்கூடிய ஒரு குடும்பத்துக்கு அல்லது ஒரு குழுவிற்கு 25 அல்லது 50 ஆடுகளைக் கொடுக்கிறார். இதற்காக அவர்கள் ஒரு நயா பைசாகூட கொடுக்க வேண்டியதில்லை. இந்த ஆடுகளை ஆரோக்கியமாகப் பராமரித்து, வளர்க்க வேண்டிய வேலை அவர்களுடையது. ஒரு ஆடு, இரண்டு ஆண்டுகளுக்குள் சராசரியாக மூன்று குட்டிகளை ஈணும். ஐம்பது ஆடுகளை நீங்கள் வளர்க்கிறீர்கள் என்றால் ஏறக்குறைய 150 குட்டிகள் உங்களுக்குக் கிடைக்கும். இதில் 75 குட்டிகளை நீங்களே வைத்துக் கொள்ளலாம். மீதமுள்ள குட்டிகளை தாமோதரனுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் அக்ரிமெண்ட்.

ஆடு வளர்க்கும் போது ஒன்றிரண்டு ஆடுகள் இறந்தாலும் அதற்காக அவர்கள் நஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடமிருந்து ஒரு சான்றிதழ் வாங்கிக் கொடுத்தாலே போதும். அதற்கான இன்ஷுரன்ஸை வாங்கிவிடுகிறார் தாமோதரன்.

``பாரம்பரியமான இந்த முறை நல்ல மேய்ச்சல் நிலம் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் அதிவேகமாகப் பரவி வருகிறது. நூறு ஆடுகளை நாம் வளர்க்கும் பட்சத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 2.25 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். நாங்களே பதிமூன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆடுகளைக் கொடுத்து வளர்த்து வருகிறோம்'' என்கிறார் தாமோதரன்.

இன்னும் சில ஆண்டுகளில் கோழி வளர்ப்பு போல, ஆடு வளர்ப்பும் தனிப் பெருந் தொழிலாக வளர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தாமேதரனுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறவர்கள் 094437-37094 என்கிற எண்ணுடன் தொலைபேசலாம்.

கொசுறுத் தகவல் : மகாராஷ்டிராவில் SELF என்கிற ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் தாமோதரன் என்கிற மராத்திக்காரர். கிராமங்களில் ஆடு வளர்ப்பதை ஊக்குவிப்பதுதான் இவரது அமைப்பின் வேலை. இந்த அமைப்பின் ஒரு ஆண்டு டேர்ன் - ஓவர் எவ்வளவு தெரியுமா? 650 கோடி ரூபாய்!

தமிழ் விவசாயிகளுக்கு வழிகாட்டும் வெள்ளைக்காரர்

கட்டாந்தரையில் பசுஞ்சோலை!

செக்கச்செவேலென திரும்பிய பக்கமெல்லாம் தெரியும் செம்மண். காலை வழுக்கும் உருண்டைக் கற்கள். ஆண்டுக்கு மூன்று மாதம் மழை பெய்தாலே அதிகம் என்று சொல்லும் அளவுக்குத் தாகம் தீராத பூமி. அந்த இடத்தைப் பார்த்தால், 'இந்தக் கட்டாந்தரையில் என்ன முளைக்கும்? கருவேலஞ் செடிகளும் பனையும் புளியும் தவிர வேறு என்ன விளையும்?' என்று கேட்கத் தோன்றும். நாமாக இருந்தால் அந்த நிலத்தை இலவசமாகக் கொடுத்தால்கூட வேண்டாம் என்று ஒதுங்கியிருப்போம்.

ஆனால், அப்படிப்பட்ட நிலத்தை பசுமை கொழிக்கும் பசுஞ்சோலையாக மாற்றியிருக்கிறார் பெர்னார்ட் கிளார்க். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெற்றுடம்பாக கிடந்த அந்த பூமியில் இன்று குளுமை தரும் மரங்கள் பலப்பல.

பாண்டிச்சேரி- திண்டிவனம் நெடுஞ்சாலையில் திருச்சிற்றம்பலத்திர்கு அருகே உள்ள பெர்னார்டின் தோட்டத்துக்குள் நுழைந்தால் ஒரு சின்ன காட்டுக்குள் நுழைந்துவிட்ட மாதிரி ஒரு பிரமை. அதனால்தானோ என்னவோ அந்த இடத்திற்கு பிருந்தாவனம் என்று பெயர் வைத்திருக்கிறார்.

இந்த வியத்தகு மாற்றத்தைச் செய்த பெர்னார்டு கிளார்க், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர். மேற்கத்திய நாட்டு மனிதர்கள் அடிப்படை வசதிகள் அனைத்தையும் அடைந்தவர்கள். அதனால்தான் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி ஆன்ம பயணம் செய்ய எளிதில் துணிந்துவிடுகிறார்கள். விஞ்ஞானம் தந்த வளர்ச்சி மனிதனின் வயிற்றை நிரப்பும். ஆனால், ஆன்மாவை ஓட்டை விழுந்த குடமாகவே வைத்திருக்கும் என்பதை சிறு வயதிலேயே உணர்ந்தார் பெர்னார்ட். எனவேதான் முப்பது வயதிலேயே வேலை, சொத்து, சுகம் என்று எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு, பாண்டிச்சேரிக்கு வந்து அரவிந்தர் ஆசிரமத்தில் சேர்ந்தார். அன்றிலிருந்து இன்று வரை ஆனமப் பயணம் மேற்கொள்ளும் சாதாரண மனிதனாக வாழ்ந்து வருகிறார் பெர்னார்ட்.

'கட்டாந்தரையில் இத்தனை மரங்களை வளர்த்தது எப்படி?' என்று பெர்னார்டிடம் கேட்டோம். பெர்னார்டின் மனைவி தீபிகா, மூலிகைச் சாறு ஜூஸ் கொடுக்க, அதை ரசித்துக் குடித்தபடி பதில் சொல்ல ஆரம்பித்தார்.

"தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற வேண்டும். சலிப்பில்லாத மனித உழைப்பும் ஓரளவுக்குத் தண்ணீரும் இருந்தால் எந்த நிலத்தையும் தரிசு நிலம் என்று ஒதுக்கி வைக்கத் தேவையில்லை என்பது எங்கள் ஆசிரமத்தின் நம்பிக்கை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூன்று ஏக்கர் நிலத்தைக் கொடுத்து இதில் காட்டை உருவாக்க முடியுமா?" என்று கேட்டார்கள்.

இடத்தைப் பார்த்தபோது, அது சவால் நிறைந்த வேலையாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். என்றாலும், நம்பிக்கையோடு செய்ய ஆரம்பித்தேன்.
நிலத்தை எப்போதும் சும்மா போட்டு வைத்திருக்கக் கூடாது. இது பாரம்பரிய விவசாயத்தின் பாலபாடம். காரணம், சூரியனில் இருந்து வரும் வெப்பம் நிலத்தை எரித்துவிடும். நுண்ணுயிர்கள் மட்டுமல்ல, மனிதர்கள்கூட இந்த வெப்பத்தில் துவண்டு போவார்கள். எனவே, உடனடியாக ஏதாவது ஒரு மரம் வளர்த்து பூமிக்கு நிழல் தந்து, வெப்பத்திலிருந்து காக்க வேண்டும்.
எனக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தில் இப்படி ஒரு வேலையை உடனடியாகச் செய்தாக வேண்டும் என்று முடிவு செய்தேன். என்ன மரம் வளர்ப்பது என்கிற பிரச்னை தலை தூக்கியது. நீரை தண்ணீரை எதிர்பார்க்காமல் வேகமாக வளரக்கூடிய மரங்களைத் தேடிப் பிடித்தேன். அவசரத்திற்கு எனக்குக் கை கொடுத்தது விராலி மரமும், ஆஸ்திரேலியன் அக்கேசியா என்கிற மரமும்தான்.

இந்த மரங்கள் மழை நீரைக் குடித்தே நன்றாக வளரும். நிறைய இலைகளை நிலத்தில் கொட்டும். மண்ணில் விழந்த இலைகள் மட்கும். மண் வளம் பெறும். நுண்ணுயிர்கள் பிறக்கும். புல் பூண்டுகள் முளைக்கும். அதைச் சாப்பிட ஆடு, மாடுகள் வரும். சாணம் போடும். அதில் இருந்து பூச்சிகள் வரும். அதை உண்ண காக்கைகளும் வரும். கடைசியில் அந்த இடம் பசுமையான விளைநிலமாக மாறிவிடும். இந்த இடத்தையும் நாங்கள் இப்படித்தான் மாற்றினோம்" என்கிறார் பெர்னார்ட்.

"வாருங்கள். இந்தத் தோட்டத்தில் என்னவெல்லாம் விளைகிறது என்று காட்டுகிறேன்" என்று அழைத்தார் பெர்னார்ட். போனால் நமக்கு வியப்புக்கும் மேல் வியப்பு.

பெர்னார்டின் தோட்டத்தில் வாழை நன்றாக குலை தள்ளியிருந்தது. பச்சை வெண்டை, சிகப்பு வெண்டை, குட்டை வெண்டை என வெண்டை மட்டும் நான்கு வகைகளை வளர்க்கிறார். கொடியில் பாகல் சந்தோஷமாக ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. தக்காளி, மிளகாய் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தன. பூசணி, இலைக்குள் மறைந்து கண்ணாமூச்சு காட்டிக் கொண்டிருந்தது. பப்பாளி மரம் படுகம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அவ்வளவு ஏன், பைனாப்பிள்கூட அருமையாக வளர்ந்து இருந்தது. இது தவிர ஏராளமான மூலிகைச் செடிகள்.

"நிலத்துக்குத் தேவையான தண்ணீர் தேங்குகிற மாதிரி முதலில் ஆங்காங்கே சின்னச் சின்ன குழிகளை வெட்டி மழைநீரைச் சேகரியுங்கள். பிளாஸ்டிக் தவிர, மக்கக்கூடிய எந்தக் குப்பையும் இலவசமாகக் கிடைத்தால் உங்கள் நிலத்தில் கொட்டுங்கள்.

ஓரளவுக்கு ஈரப் பதத்தில் விதைகளைத் தூவுங்கள். நீங்கள் விதைக்கும் எந்த விதையும் உங்களை ஏமாற்றாது. கொஞ்சமாக உழைத்ததிலேயே இந்த நிலம் இப்படி மாறியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் வளமான நிலங்கள்தான் அதிகம். நாம் உழைக்கத் தயாராக இல்லை. நிலம் தரிசு என்று சொல்லி காயப் போட்டுவிடுகிறோம். நம்பிக்கையோடு எந்த நிலத்தையும் பண்படுத்துங்கள். அதில் நீங்கள் விதைக்கும் எந்த விதையும் முளைக்கும்" என்கிறார் பெர்னார்ட்.

வித்தியாசமான இந்த வெள்ளைக்காரருக்கு தமிழ்நாட்டு விவசாயிகளை வழி நடத்தும் அத்தனை தகுதிகளும் இருக்கின்றன.

Wednesday, April 11, 2007

காந்தி கடலை உங்களுக்கு வேண்டுமா?

விவசாயத்தை ஒரு தொழிலாக அல்ல, ஒரு வாழ்வியல் லட்சியமாகவே நினைத்து செயல்படுகிறவர் தக்கோலம் விவசாயி நீலசம்பத். இவர் வளர்க்கும் காந்திக் கடலை இன்னும் சில ஆண்டுகளில் தமிழகம் முழுக்கப் பரவி பரபரப்பை ஏற்படுத்தப் போகிறது.

காந்தி கடலையா? அது என்ன என்று விசாரிக்க தக்கோலம் நோக்கிப் போனோம். அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் கிட்டத்தட்ட பதினைந்து கி.மி. தொலைவில் இருக்கிறது தக்கோலம் பேரூராட்சி. ஊரில் போய் இறங்கி 'நீலசம்பத்' என்று கேட்டால், "ஓ, திருக்குறள் பண்ணைக்காரா?" என்று அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள் இளைஞர்கள்.

வீட்டுக்குப் போய் உட்கார்ந்தவுடன் கிராமத்து கலாசாரப்படி டம்ளர் நிறையத் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறார் நீலசம்பத்தின் மனைவி கோமளவல்லி. கூடவே கொஞ்சம் முந்திரி பருப்பைக் கொண்டு வந்து வைக்கிறார். விவசாயி வீட்டில் முந்திரி பருப்பு உபசாரமா? நாம் கொஞ்சம் திகைப்போடு கேட்க, பேச ஆரம்பித்தார் நீலசம்பத்."அது முந்திரி பருப்பு இல்லீங்க.. முந்திரி பருப்பு மாதிரி மொக்கை, மொக்கையா இருக்கிற காந்திக் கடலை. இதை நான் கண்டுபிடிச்ச விதமே சுவாரஸ்யமானது.

எங்க ஊர்ல எனக்கு மூணு ஏக்கர் நிலம் இருக்கு. புஞ்சை நிலம்தான். நெல்லையும் கடலையும்தான் பயிர் செய்வேன். நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜெ.எல்.24 என்கிற கடலை ரகத்தைப் பயிர் செய்தேன். விளைச்சல் முடிந்து கடலை விதைகளைப் பிரித்த போது, சில கடலை விதைகள் மட்டும் கொஞ்சம் பெரிதாக, நீளமாக இருப்பதை கவனித்திருக்கிறார் என் மனைவி. உடைத்துப் பார்த்தால், கடலைப் பருப்பு சிகப்பாக, பெரிதாக இருந்திருக்கிறது. இந்த மாத்ரி கடலைகளை மட்டும் தனியாகப் பொறுக்கி, அதை மீண்டும் விதைத்தோம். விதைத்த போதுதான் தெரிந்தது. அது படர்கொடியாக வளரக்கூடிய கடலைப் பயிர் என்று. விளைச்சலும் நன்றாக இருந்தது.

இந்தக் கடலைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று என் நண்பர் ஜான் தன்ராஜிடம் கேட்டேன். அவரும் ஒரு இயற்கை விவசாயி. பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இப்போது திருத்தணிக்குப் பக்கத்தில் உள்ள காவேரி ராஜபுரத்தில் அற்புதமாக விவசாயம் செய்து வருகிறார். என் கையில் இருந்த கடலையைப் பார்த்த தன்ராஜ், "இது குஜராத் மாநிலத்திலிருந்து வந்த கடலை. குஜராத்தில் இந்த வகை கடலையை நிறைய பயிர் செய்கிறாகள். எனவே இதற்கு காந்தி கடலை என்று பெயர் வைக்கலாம்" என்றார்.

கடலையையும் பசுவின் பாலையும் எல்லோரும் சாப்பிட வேண்டும் என்று சொன்னவர் காந்தி. அந்த மகாத்மாவின் பெயரை வைப்பது பொருத்தமாகத்தான் இருக்கும் என்று உடனே சரி என்று வைத்தேன். இப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் காந்தி கடலை வேண்டும், காந்தி கடலை வேண்டும் என்று கேட்டு வாங்கிப் பயிர் செய்கிறார்கள். நல்ல விளைச்சல் தந்து, விவசாயிகளுக்கு நிறைய வருமானம் தந்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சி; எனக்கும் மகிழ்ச்சி. என்னுடைய நோக்கமெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை விவசாயிகளின் வீட்டுக்கும் காந்தி கடலையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே.

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு காராபூந்தி, மைசூர்பாகு கொடுப்பதை விட காந்தி கடலையை வறுத்தோ, அவித்தோ கொடுக்கலாம். அவர்களும் ஆரோக்கியமான உணவை ஆனந்தமாக சாப்பிடுவார்கள்".முந்திரி பருப்பு போல இருந்த காந்தி கடலையை சாப்பிட்ட போது சுவையாகத்தான் இருந்தது. "இந்த கடலையில் சத்தும் அதிகம். எண்ணெய்ச் சத்து பத்து சதவிகிதம் குறைவு. எனவே, கொஞ்சம் அதிகம் சாப்பிட்டாலும் தலை சுற்றாது" என்றார் நீலசம்பத்.டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான ஒரு பட்டம் மட்டும் இப்போது காந்தி கடலையை சாகுபடி செய்கிறார் நீலசம்பத்.

தான் சாகுபடி செய்யும் கடலையை பெரும்பாலும் விதைக் கடலையாகவே விற்கிறார். ஒரு கிலோ கடலை விலை ரூ. 50. கடந்த ஆண்டு கிலோ 40 ரூபாய் விற்றாராம். விலையேற்றத்துக்குக் காரணம், விவசாய வேலை செய்ய ஆட்கள் கிடைக்காததுதான் என்கிறார்.

'சரி, உங்க பண்ணைக்கு ஏன் திருக்குறள் பண்ணை என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்?' என்று கேட்டோம்.

"வள்ளுவர், காரல் மார்ஸ், பெரியார், மாவோ - இந்த நான்கு சிந்தனையாளர்களின் வழி நடப்பவன் நான். என்னைப் பொருத்த வரை திருவள்ளுவர் மாதிரி ஒரு சிந்தனையாளரைக் கண்டது இல்லை. இந்த உலகத்தில் எத்த்னையோ தொழில்கள் வரலாம். ஆனால் விவசாயம்தான் எல்லா தொழிலுக்கும் அடிப்படையாக இருக்கும் என்று அன்றைக்கே சொன்னார் அந்த தத்துவ ஞானி. அவரைக் கண்டு என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை!" என்று உணர்ச்சி வசப்பட்டார்.

"உங்களுக்கு பணத் தேவை இருந்தால், உங்களிடம் உள்ள நகைகளை விற்றுக் கொள்ளுங்கள். நிலத்தை மட்டும் எந்தக் காரணத்தை கொண்டும் விற்காதீர்கள். இன்னும் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் வாரிசுகளுக்கு நீங்கள் விட்டுச் செல்லும் மிகப் பெரிய சொத்தாக உங்கள் நிலம்தான் இருக்கும்" என்கிறார் நீலசம்பத்.

வித்தியாசமான இந்த விவசாயியோட தொடர்பு கொள்ள நினைக்கிறவர்கள் பின்வரும் தொலைபேசி எண்ணில் பேசலாம். 04177-246448.

முகவரி: திருக்குறள் பண்ணை, 40, மேல் தெரு, தக்கோலம் - 631 151.