Wednesday, May 23, 2007

முல்லைப் பெரியாறு தமிழனுக்குச் சொந்தமில்லை!


முல்லைப் பெரியாறு தமிழகத்துக்குச் சொந்தமானதல்ல. அதிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீரைப் பெறுவதற்குக்கூட தமிழனுக்கு உரிமை இல்லை என்கிற நினைப்புதான் கேரள அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது.

இன்றைய தேதியில் முல்லைப் பெரியாறின் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருக்கிறது. ஜூன் மாதம் பருவமழை ஆரம்பித்தால்தான் அணைக்குத் தண்ணீர் வர ஆரம்பிக்கும். சரியான நேரத்தில் பருவமழை பொழிந்து அணைக்குத் தண்ணீர் வந்தால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் முதல் போகம் பயிர் செய்ய முடியும். இப்போது அணையில் தண்ணீர் இல்லாததால் முதல் போக விவசாயத்துக்கான தண்ணீர் கிடைக்காது என்கிற செய்தி கேட்டு பல லட்சக்கணக்கான விவசாயிகள் வருத்தத்தில் மூழ்கி இருக்கிறார்கள்.

தமிழக மக்கள் நியாயமாகக் கேட்கிற மாதிரி 152 அடிக்கு அணையில் நீரைத் தேக்கி வைத்திருந்தால் தமிழகத்தில் இருக்கும் ஐந்து மாவட்ட விவசாயிகளின் முதல் போக விவசாயத்துக்கு பங்கம் வந்திருக்காது. 152 அடிக்குத்தான் தேக்கி வைக்கவில்லை. உச்சநீதிமன்றம் சொன்ன அளவுக்காவது தண்ணீர் தேக்கி இருந்தால்கூட பாதி நிலத்துக்குத் தண்ணீர் கிடைத்திருக்கும். ஆனால், இரண்டையும் செய்யாமல் 136 அடிக்கு மேல் ஒரு இஞ்ச்கூட தண்ணீர் தேக்க விடமாட்டோம் என்று அடம் பிடிக்கும் கேரள அரசியல்வாதிகளை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை.

முல்லைப் பெரியாறு அணை பற்றி ஒரு அருமையான புத்தகம் சமீபத்தில் வந்திருக்கிறது. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த புத்தகம் முல்லைப் பெரியாறு பற்றி அத்தனை விஷயங்களையும் புட்டுப் புட்டு வைக்கிறது.

இப்போது கேரள எல்லைக்குள் இருக்கும் முல்லைப் பெரியாறு நிலப்பகுதி உண்மையில் தமிழகத்துக்குச் சொந்தமானது. ஆங்கில அரசாங்கம் செய்த ஒரு சிறுதவறின் காரணமாக, தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் ஜென்மப் பகை உருவாகிவிட்டது. நமக்குச் சொந்தமான நிலம் எப்படி கேரள அரசாங்கத்திடம் போனது என்பதில் ஆரம்பித்து, பென்னிகுக் என்னும் ஆங்கிலேயர் முல்லைப் பெரியாறு அணையை எப்பாடுபட்டுக் கட்டினார், பிரச்னை எப்படி ஆரம்பமானது, பிரச்னையின் இன்றைய நிலை என்ன என்பது வரை மிக மிக எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் ஆசிரியார் ஊரோடி வீரகுமார். இவர் ஒரு இயற்கை விவசாயி. முல்லைப் பெரியாறு பற்றி கிஞ்சித்தும் தெரியாதவர்கள் அலுங்காமல் குலுங்காமல் அது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அவசியம் இந்த புத்தகத்தைப் படிக்க வேண்டும் .

கர்நாடகவோடு காவிரிப் பிரச்னை, ஆந்திராவுடன் பாலாறில் பிரச்னை என தமிழகத்தின் மூன்று திசைகளில் உள்ள மாநிலங்கள் தண்ணீர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தொல்லை கொடுப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்தப் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு நதிகளை தேசியப் பட்டியலில் கொண்டு வருவதுதான். ஒரு சொட்டு தண்ணீர்கூட வீணாக்கப்படாமல் பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கிற ஒரு அமைப்பிடம் நீர் மேலாண்மை இருக்க வேண்டுமே ஒழிய, இந்தத் தண்ணீர் தமிழக விவசாயிக்கா, கர்நாடகா விவசாயிக்கா என்று பார்க்கக்கூடாது.

Monday, May 21, 2007

வாட்டி வதைக்கும் வெயில்! என்னதான் தீர்வு?

சென்னையில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்றைய வெயில் நிலவரம் 106 டிகிரிக்கு மேலே. பொதுவாக, கடுமையான வேலையைச் செய்தால் உடம்பில் வேர்வை கொட்டும். ஆனால், நேற்றெல்லாம் அதிவேகமாக சுழலும் ஃபேனுக்குக் கீழே சும்மா உட்கார்ந்தாலும் வேர்வை ஊத்திக் கொட்டியது.

அடிக்கிற வெயிலைப் பார்த்தால் மே மாதம் முழுக்க ஏதாவது ஒரு மலைப்பகுதியை நோக்கி ஓடிவிடலாமா என்று படுகிறது. இந்த ஆண்டே இப்படி இருக்கிறது. அடுத்த ஆண்டை நினைத்தால் எப்படி இருக்குமோ என்கிற கவலை வேறு மனதை அரிக்கிறது.

இந்த அக்னி வெயில் பிறந்த குழந்தைகளை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது? சுட்டெரிக்கும் வெயில் பஞ்சு போன்ற அந்த உடல் என்ன பாடுபடுகிறது தெரியுமா? பெரியவர்களாவது உடல்சூட்டைத் தணிக்க ஒரு நாளைக்கு 5 முறை குளிக்கிறார்கள். அந்தப் பச்சிளம் குழந்தைகள்? புதிதாகத் திருமணம் ஆனவர்கள், புதுப் பெண்டாட்டியை ஆடி மாதம் ஏன் ஆத்தா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்பதை இனிமேலாவது புரிந்து கொள்ளட்டும்.


இந்த கோடை காலத்தில் அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் வந்துவிட்டது. கத்தரி வெயில் முடிய இன்னும் ஒரு வாரம் உள்ளது. இனிமேலாவது வெயில் குறையுமா, குறையாதா என்கிற கவலை பலரையும் வாட்டி எடுக்கிறது.

இவ்வளவு வெயில் அடித்தாலும், நிறைய மரங்களை வளர்க்க வேண்டும் என்கிற எண்ணம் நம் மக்கள் யாருக்குமே வரவில்லை என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. மரங்கள் நிறைய இருக்கும் பகுதிகளில் வெயில் கொடுமை அவ்வளவாக நமக்குத் தெரிவதில்லை. சென்னை நகரில் அடையாரிலும் மரங்களின் எண்ணிக்கை அதிகம். அந்தப் பகுதிகளில் வெயில் அவ்வளவாகத் தெரிவதில்லை. ஆனால், வடசென்னையில் மரங்கள் ஏறக்குறைய இல்லை என்றே சொல்லிவிடலாம். எனவே, அந்தப் பகுதிகளில் வெயில் மண்டையைப் பிளக்கிறது.

மனிதன் இயற்கையை விட்டு என்று ஒதுங்க ஆரம்பித்தானோ அன்றிலிருந்த பல இன்னல்களுக்கு ஆட்பட ஆரம்பித்துவிட்டான். ஏசி தரும் செயற்கைத் தீர்வை ஒதுக்கிவிட்டு, இயற்கைக்கு மீண்டும் மனிதன் எப்போது திரும்புகிறோனோ அப்போதுதான் பல பிரச்னைகளுக்கு விடிவுகாலம் பிறக்கும். இதற்கு முதல்படியாக, தமிழகம் முழுக்க இன்னும் பல கோடி மரங்கள் நடப்பட வேண்டும்.

Friday, May 18, 2007

இளைஞர்களை வரவேற்க மறுக்கும் இயற்கை விவசாயிகள்

சென்னைக்கு அருகில் வசிக்கும் ஒரு இயற்கை விவசாயியை சமீபத்தில் பார்த்தேன். எனக்கு விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்று அவரிடம் சொன்னேன். பாரம்பரியமாக இருக்கும் எங்களாலேயே விவசாயம் செய்ய முடியவில்லை. நீங்கள் வந்தால் ஒன்றும் செய்ய முடியாது என்றார். அவர் சொன்னது நியாயம்தான். அனுபவசாலிகளே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது புதியவர்களால் எந்த அற்புதத்தையும் செய்துவிட முடியாது என்பது உண்மைதான்.

ஆனால், பாரம்பரிய விவசாயிகள் இப்படிச் சொல்லிச் சொல்லியே புதியவர்களை விவசாயத்தின் பக்கம் வரவிடுவதில்லை. எல்லாத் தொழிலிலும் கஷ்டம் உண்டு. விவசாயத்தில் பல மடங்கு கஷ்டங்கள் உண்டு. இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக புதியவர்கள் வரும் போது இருகரம் கூப்பி அழைக்க வேண்டாமா? நமக்கான தொழில்நுட்பங்களைக் கற்றுத் தர வேண்டாமா? என்று எனக்கு ஒரே யோசனையாக இருந்தது.

மண் வளம் காக்க நம் முன்னோர்கள் எத்தனையோ வழிமுறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மீன்குண்பம் என்கிற முறையைப் பற்றி கேள்விப்பட்ட போது ஆச்சரியப்பட்டுப் போனேன்.

மீன் குழம்பு என்றால் நம்மில் பலர் சப்புக் கொட்ட ஆரம்பித்துவிடுவோம். ஆனால், பயிர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை மீன்கள்.

மண்ணில் தழைச்சத்தைப் பெருக்க, அதாவது நைட்ரஜன் சத்தைப் பெருக்க - கண்ட கண்ட உரங்களைக் கொட்டுவதற்குப் பதிலாக பசுந்தாள் உரங்களை நிறைய பயன்படுத்தலாம் என்கிறார்கள் இயற்கை வேளாண் விஞ்ஞானிகள். உழவு முடிந்து பயிர்கள் வளர ஆரம்பித்தபிறகு தழைச்சத்து கூட்ட வேண்டுமெனில் மீன் குண்பத்தை தாராளாமாகப் பயிர்களுக்குக் கொடுக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

இந்த மீன் குண்பத்தைத் தயார் செய்வது மிகவும் சுலபமாம். குளத்து மீன், ஏரி மீன், கிணற்று மீன் இதில் ஏதாவது ஒரு வகை மீனை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனோடு தூளாக்கிய நாட்டு வெல்லத்தை கலந்து, ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்துவிடுங்கள். இப்படி 20 முதல் 22 நாட்கள் மூடி வைக்க வேண்டுமாம்.

பிறகு திறந்து பார்த்தால் கெட்டியான சாறு வடிகட்டி நிற்கும். இதில் ஒரு மில்லி சாறை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பயிருக்குப் பாய்ச்சினால் நல்ல பலன் கிடைக்கிறதாம்.

இயற்கை உரங்களை நம் முன்னோர்கள் எதிலிருந்தெல்லாம் உருவாக்கி இருக்கிறார்கள் பார்த்தீர்களா!

Friday, May 4, 2007

சுயம்புலிங்கம் என்கிற கரிசல் காட்டு எழுத்தாளர்

மு.சுயம்புலிங்கத்தைத் தெரியுமா உங்களுக்கு?

கி.ராஜநாராயணன் கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்றால் சுயம்புலிங்கம் தலைமகன். நீரற்று வெளிறிப் போன கரிசல் காட்டு விவசாயிகளின் வாழ்க்கையை பச்சை பச்சையாகப் படம் பிடித்துக் காட்டியவர். சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமைசுயம்புவின் எழுத்தைப் படிக்கிற்போது நம் முகத்தில் தெறிக்கும். பாளம் பாளமாகப் பிளந்து போன அந்த நிலத்தைக் காண்கிற போது நமக்கு தாகம் வந்து தவிக்கும். அந்தப் பாழ் நிலத்தை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறும் அகதி மக்களின் வாழ்க்கைக் காண்கிற போது கண்களில் ரத்தம் கொட்டும்.

நிறைய எழுதியவர்தான் சுயம்புலிங்கம். இன்று ஏகத்துக்கும் குறைத்துக் கொண்டுவிட்டார். பல ஆண்டுகளுக்கு முன்பே கோயில்பட்டியை விட்டு வெளியேறு, சென்னைக்கு அடுத்துள்ள பெருங்களத்தூரில் ஒரு சிறுகடை வைத்து நடத்தி வருகிறார்.

1990 வாக்கில் சுயம்புவின் கதைகளையும் கவிதைகளையும் ஒன்று திரட்டி ஊர்கூட்டம் என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் வந்தது. கோணங்கி தன்னுடைய கல்குதிரையில் சுயம்புவின் படைப்புகளை வெளியிடுவதற்காகவே ஒரு இதழை ஒதுக்கினார். சமீபத்தில் உயிர்மை பதிப்பகம் ஒரு பனங்காட்டு கிராமம் என்கிற தலைப்பில் அவர் சிறுகதைகளை வெளியிட்டிருக்கிறது.

கருசக் காட்டு விவசாயிகளின் மனநிலை எடுத்துச் சொல்ல, ஊர்கூட்டத்திலிருந்து ஒரு கதை இங்கே உங்களுக்குத் தருகிறேன்.


சமுசாரியின் கதை.


பட்டவத்தலை நெருப்பில் சுகிற காரநெடி.தொண்டை புகைந்து இருமல் வருகிறது.

கண்களைத் துடைத்துக் கொண்டு திண்ணையில் வந்து உட்காருகிறேன்.

தாத்தா வருகிறா.

சொயம்பு.. பாத்தியா, பய்யன் விளையாட்ட..

தெருவில் மணல்கட்டி, மோண்டு புட்டுச் செய்து விளையாடுகிறான் பய்யன்.

எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. தாத்தாவும் குலுங்கக் குலுங்க சிரித்தார். தெருவில் மழத்தண்ணி புரளவேண்டிய காலம்.

அயிப்பசி பிறந்து எழு தேதி ஆகிறது. தாத்தா மழை பெய்யுமா?

கைகளைத் தலைக்குக் கொடுத்து உடம்பை சுவரோடு சாய்த்துக் கொண்டு தாத்தா சொன்னார்.

ரேடியோக்காரன் நாப்பத்தெட்டு மணிநேரம் கெடு சொல்லுதான்.

ஜோசியக்காரன் கனத்தநால் கட்டங்களை சொல்லுதான்.

ஒருபயல் கய்யிலும் மழை பிடிபடவில்லை.

நீர்மேல் குமிழி. மழை பெய்தால்தான் எல்லாம்.

பூமாதேவி கொடுக்காமல் ஒரு பயலாலும் ஆவதில்லை.

சமுசாரி குடி கெட்டுக்கிடக்கு. விவசாயி நெம்பலப்பட்டுப் போன ஒரு நாட்டின் அரசன் நீடித்து அரசாள முடியாது.

முதல்மந்திரி விவசாயிகளுக்கு அவர் கஜானாவில் இருந்து அள்ளிக்குடுக்காராம்.

என்னத்தக் கொடுப்பார்? எத்தனை நாளைக்கு கொடுப்பார்?

சுவரோடு சாய்ந்த முதுகை நிமிர்த்தி மெள்ளத் தவழ்ந்து வந்து கால்களைத் தொங்கப் போட்டு உட்கார்ந்தார் தாத்தா. அவர் கைகள் பொடிமட்டையை கவனமாய் தட்டிக் கொண்டிருந்தது.

இதை நல்லாக் கேள்.

ரொம்ப செயலாக வாழ்ந்த குடும்பம். பெரிய்யசுத்துக்கெட்டு வீடு.

அந்த வீடு பொம்பளைகளப் பார்த்தால் முகத்தில் அருள் இருக்கும்.

ஏழூஏர் சமுசார். ஆடுகள் என்ன.. மாடுகள் என்ன.. எவ்வளவு வேலையாள்..

எந்த நாடு தீய்ந்து போனாலும் அந்தவீட்டுப் பட்டறையில் தவசம் இருக்கும்.

அந்த வீட்டுக்கு மாதம் ஒருவண்டி கருப்பட்டி கொடுத்திருக்கேன்.

என்ன மாதிரியாக வாழ்ந்த வீடு..

அந்த மனிதன் மதுரை வீதியில் குரங்குக்குட்டிக்கு சட்டை போட்டு தோள்மேல் உட்கார வைத்துக் கொண்டு கடைகடையாய் அலைகிறார்.

அந்த மனுசனுக்கே அந்தக்கதி.மற்றவர் கெதி என்ன ஆகிறது?

சொயம்பு-பூமி அதே இடத்தில்தான் இருக்கு.

விளையாவிட்டால்..?

தாத்தா தெருவில் நடந்துபோகிறதை பார்க்கிற என் கண்கள் மதுரை வீதியில் குரங்குக்குட்டிக்கு சட்டை போட்டு தோள்மேல் உட்கார வைத்துக் கொண்டு கடைகடையாய், அலைகிற அந்த சமுசாரியையே பார்க்கிறது.