Wednesday, May 23, 2007

முல்லைப் பெரியாறு தமிழனுக்குச் சொந்தமில்லை!


முல்லைப் பெரியாறு தமிழகத்துக்குச் சொந்தமானதல்ல. அதிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீரைப் பெறுவதற்குக்கூட தமிழனுக்கு உரிமை இல்லை என்கிற நினைப்புதான் கேரள அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது.

இன்றைய தேதியில் முல்லைப் பெரியாறின் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருக்கிறது. ஜூன் மாதம் பருவமழை ஆரம்பித்தால்தான் அணைக்குத் தண்ணீர் வர ஆரம்பிக்கும். சரியான நேரத்தில் பருவமழை பொழிந்து அணைக்குத் தண்ணீர் வந்தால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் முதல் போகம் பயிர் செய்ய முடியும். இப்போது அணையில் தண்ணீர் இல்லாததால் முதல் போக விவசாயத்துக்கான தண்ணீர் கிடைக்காது என்கிற செய்தி கேட்டு பல லட்சக்கணக்கான விவசாயிகள் வருத்தத்தில் மூழ்கி இருக்கிறார்கள்.

தமிழக மக்கள் நியாயமாகக் கேட்கிற மாதிரி 152 அடிக்கு அணையில் நீரைத் தேக்கி வைத்திருந்தால் தமிழகத்தில் இருக்கும் ஐந்து மாவட்ட விவசாயிகளின் முதல் போக விவசாயத்துக்கு பங்கம் வந்திருக்காது. 152 அடிக்குத்தான் தேக்கி வைக்கவில்லை. உச்சநீதிமன்றம் சொன்ன அளவுக்காவது தண்ணீர் தேக்கி இருந்தால்கூட பாதி நிலத்துக்குத் தண்ணீர் கிடைத்திருக்கும். ஆனால், இரண்டையும் செய்யாமல் 136 அடிக்கு மேல் ஒரு இஞ்ச்கூட தண்ணீர் தேக்க விடமாட்டோம் என்று அடம் பிடிக்கும் கேரள அரசியல்வாதிகளை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை.

முல்லைப் பெரியாறு அணை பற்றி ஒரு அருமையான புத்தகம் சமீபத்தில் வந்திருக்கிறது. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த புத்தகம் முல்லைப் பெரியாறு பற்றி அத்தனை விஷயங்களையும் புட்டுப் புட்டு வைக்கிறது.

இப்போது கேரள எல்லைக்குள் இருக்கும் முல்லைப் பெரியாறு நிலப்பகுதி உண்மையில் தமிழகத்துக்குச் சொந்தமானது. ஆங்கில அரசாங்கம் செய்த ஒரு சிறுதவறின் காரணமாக, தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் ஜென்மப் பகை உருவாகிவிட்டது. நமக்குச் சொந்தமான நிலம் எப்படி கேரள அரசாங்கத்திடம் போனது என்பதில் ஆரம்பித்து, பென்னிகுக் என்னும் ஆங்கிலேயர் முல்லைப் பெரியாறு அணையை எப்பாடுபட்டுக் கட்டினார், பிரச்னை எப்படி ஆரம்பமானது, பிரச்னையின் இன்றைய நிலை என்ன என்பது வரை மிக மிக எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் ஆசிரியார் ஊரோடி வீரகுமார். இவர் ஒரு இயற்கை விவசாயி. முல்லைப் பெரியாறு பற்றி கிஞ்சித்தும் தெரியாதவர்கள் அலுங்காமல் குலுங்காமல் அது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அவசியம் இந்த புத்தகத்தைப் படிக்க வேண்டும் .

கர்நாடகவோடு காவிரிப் பிரச்னை, ஆந்திராவுடன் பாலாறில் பிரச்னை என தமிழகத்தின் மூன்று திசைகளில் உள்ள மாநிலங்கள் தண்ணீர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தொல்லை கொடுப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்தப் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு நதிகளை தேசியப் பட்டியலில் கொண்டு வருவதுதான். ஒரு சொட்டு தண்ணீர்கூட வீணாக்கப்படாமல் பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கிற ஒரு அமைப்பிடம் நீர் மேலாண்மை இருக்க வேண்டுமே ஒழிய, இந்தத் தண்ணீர் தமிழக விவசாயிக்கா, கர்நாடகா விவசாயிக்கா என்று பார்க்கக்கூடாது.

Monday, May 21, 2007

வாட்டி வதைக்கும் வெயில்! என்னதான் தீர்வு?

சென்னையில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்றைய வெயில் நிலவரம் 106 டிகிரிக்கு மேலே. பொதுவாக, கடுமையான வேலையைச் செய்தால் உடம்பில் வேர்வை கொட்டும். ஆனால், நேற்றெல்லாம் அதிவேகமாக சுழலும் ஃபேனுக்குக் கீழே சும்மா உட்கார்ந்தாலும் வேர்வை ஊத்திக் கொட்டியது.

அடிக்கிற வெயிலைப் பார்த்தால் மே மாதம் முழுக்க ஏதாவது ஒரு மலைப்பகுதியை நோக்கி ஓடிவிடலாமா என்று படுகிறது. இந்த ஆண்டே இப்படி இருக்கிறது. அடுத்த ஆண்டை நினைத்தால் எப்படி இருக்குமோ என்கிற கவலை வேறு மனதை அரிக்கிறது.

இந்த அக்னி வெயில் பிறந்த குழந்தைகளை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது? சுட்டெரிக்கும் வெயில் பஞ்சு போன்ற அந்த உடல் என்ன பாடுபடுகிறது தெரியுமா? பெரியவர்களாவது உடல்சூட்டைத் தணிக்க ஒரு நாளைக்கு 5 முறை குளிக்கிறார்கள். அந்தப் பச்சிளம் குழந்தைகள்? புதிதாகத் திருமணம் ஆனவர்கள், புதுப் பெண்டாட்டியை ஆடி மாதம் ஏன் ஆத்தா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்பதை இனிமேலாவது புரிந்து கொள்ளட்டும்.


இந்த கோடை காலத்தில் அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் வந்துவிட்டது. கத்தரி வெயில் முடிய இன்னும் ஒரு வாரம் உள்ளது. இனிமேலாவது வெயில் குறையுமா, குறையாதா என்கிற கவலை பலரையும் வாட்டி எடுக்கிறது.

இவ்வளவு வெயில் அடித்தாலும், நிறைய மரங்களை வளர்க்க வேண்டும் என்கிற எண்ணம் நம் மக்கள் யாருக்குமே வரவில்லை என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. மரங்கள் நிறைய இருக்கும் பகுதிகளில் வெயில் கொடுமை அவ்வளவாக நமக்குத் தெரிவதில்லை. சென்னை நகரில் அடையாரிலும் மரங்களின் எண்ணிக்கை அதிகம். அந்தப் பகுதிகளில் வெயில் அவ்வளவாகத் தெரிவதில்லை. ஆனால், வடசென்னையில் மரங்கள் ஏறக்குறைய இல்லை என்றே சொல்லிவிடலாம். எனவே, அந்தப் பகுதிகளில் வெயில் மண்டையைப் பிளக்கிறது.

மனிதன் இயற்கையை விட்டு என்று ஒதுங்க ஆரம்பித்தானோ அன்றிலிருந்த பல இன்னல்களுக்கு ஆட்பட ஆரம்பித்துவிட்டான். ஏசி தரும் செயற்கைத் தீர்வை ஒதுக்கிவிட்டு, இயற்கைக்கு மீண்டும் மனிதன் எப்போது திரும்புகிறோனோ அப்போதுதான் பல பிரச்னைகளுக்கு விடிவுகாலம் பிறக்கும். இதற்கு முதல்படியாக, தமிழகம் முழுக்க இன்னும் பல கோடி மரங்கள் நடப்பட வேண்டும்.