Thursday, September 4, 2008

அ.தி.மு.க. - கம்யூனிஸ்ட் கூட்டணி எடுபடுமா?

கூடிய விரையில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. - கம்யூனிஸ்ட் கூட்டணி வருமா என்பதுதான் இப்போதைக்கு மிக முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி எப்படி அமையும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு நான் எழுதிய ஒரு பதிவில் (அந்தப் பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும்) தி.மு.க. - காங்கிரஸ் - விஜயகாந்த் என ஒரு முக்கோண கூட்டணி அமைய வாய்ப்புண்டு என்று எழுதி இருந்தேன். இப்போது ஜுவி போன்ற பத்திரிகைகளும் அந்தக் கோணத்தில் செய்திகளை வெளியிட ஆரம்பித்திருக்கின்றன.

இனி, அ.தி.மு.க. கூட்டணி எப்படி அமையும் என்று பார்ப்போம்.

அ.தி.மு.க.வைப் பொருத்த வரை இரண்டு விதங்களில் அது கூட்டணி அமைக்கலாம். ஒன்று, அது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்.

ஏனெனில் நடக்கப் போவது நாடாளுமன்றத் தேர்தல். பா.ஜ.க. மீண்டும் டெல்லியில் ஆட்சிக்கு வர வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. பணவீக்கம், பெட்ரோல் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்பட பல பிரச்னைகளின் காரணமாக காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு கொஞ்சம் மங்கவே செய்திருக்கிறது.

இந்த நிலையில் காங்கிரஸுக்கு எதிரி என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேருவது இயல்பான விஷயம்தான்.

தவிர, அ.தி.மு.க.வின் ஆதரவுடன் டெல்லியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துவிட்டால், தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. ஆட்சிக்குப பல இடைஞ்சல்களைக் கொடுக்க முடியும். முன்பு பா.ஜ.க. ஆட்சியில் இருந்தே போதே இது மாதிரியான பல விஷயங்களை அ.தி.மு.க. செய்திருக்கிறது.

அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைப்பதில் பா.ஜ.க.வுக்கும் எந்தப் பிரச்னையும் இருக்காது. காரணம், இப்போதைக்கு தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியான தி.மு.க. காங்கிரஸுடன் உறுதியாக இருக்கிறது. அ.தி.மு.க. நிராகரித்து விட்டு, தனியாகப் போட்டி இட்டு, தமிழகத்தில் எங்களுக்கு எந்தச் செல்வாக்கும் இல்லை என்று ஊரறியச் செய்யும் தவறை பா.ஜ.க. இன்னொரு முறையும் செய்யாது என்று நம்புவோம். அம்மா கொடுக்கிற சீட்டை வாங்கிக் கொள்வதன் மூலம் பா.ஜ.க. சில தொகுதிகளில் ஜெயிக்கவும் முடியும். அ.தி.மு.க. மூலம் பல எம்.பி.க்களின் ஆதரவையும் பெற முடியும் என்பது பா.ஜ.க.வின் கணக்கு.

சரி, அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் கூட்டணி ஏற்படவில்லை என்றால்...? அதற்கு சரிபங்கு வாய்ப்பு உண்டு. ஏற்கெனவே பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்து அவர்களையும் படாதபாடு படுத்தி, தானும் படாதபாடு பட்டவர் ஜெயலலிதா. மீண்டும் அவர்களோடு கூட்டு சேர ஜெயலலிதா தயக்கம் காட்டலாம். தவிர, தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்பதே ஜெயலலிதாவின் கணக்கு. வாஜ்பாயையும் அத்வானியும் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் தெரியச் செய்தது நாங்கள் என்று பேசியவர் அவர். பா.ஜ.க. ஒரு தேவையில்லாத சுமை. அதைத் தேவையில்லாமல் தூக்கித் திரிய வேண்டுமா என்றுகூட அவர் நினைப்பதுண்டு.

அந்த நிலையில் அவர் கம்யூனிஸ்ட்டுகளின் வழிகாட்டுதலில் மாயாவதி தலைமையில் அமையப் போகும் மூன்றாம் அணியில் சேர ஒரு வாய்ப்புண்டு. மூன்றாம் அணியைப் பொருத்தவரை அகில இந்திய அளவில் அதற்கு பெரிய ஆதரவு ஒன்றும் இல்லை என்றாலும், இருக்கிற மிகச் சில பெரிய கட்சிகளில் தானும் ஒன்று என்கிற தெம்பு அ.தி.மு.க.வுக்குக் கிடைக்கும். பல மாநிலங்களில் இருக்கும் இந்தக் கட்சிகள் கொஞ்சம் நன்றாக வேலை பார்த்தால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற முடியும். இதன் மூலம் காங்கிரஸையும், பாஜகவையும் கொஞ்சம் ஆட்டிப் பார்க்க முடியும். தப்பித் தவறி ஆட்சிக்கு வந்தால்கூட தான் நினைப்பதை அவர்கள் மூலம் எளிதாகச் சாதித்துக் கொள்ள முடியும் என்று ஜெயலலிதா நினைக்கலாம்.

தவிர, தமிழகத்தில் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு தனக்குக் கிடைக்கும். பா.ஜ.க.வோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கு நிச்சயம் அதிகம். ஏற்கெனவே இருக்கும் ம.தி,மு.க.வோடு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்துவிட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக தேர்தல் களத்தில் இறங்கிவிடுவார்கள்.
மேலும், கடைசி நேரத்தில் பா.ம.க.வும் இந்தக் கூட்டணியில் வந்து சேர ஒரு வாய்ப்புண்டு.

இப்போதைக்கு அ.தி.மு.க. கூட்டணி இப்படித்தான் அமையும். அ.தி.மு.க. - கம்யூனிஸ்ட் கூட்டணி சேர்ந்தால் அது எடுபடுமா? என்பது முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கான சரியான பதிலைச் சொல்ல இன்னும் சில காலம் பொறுத்தே ஆக வேண்டும்.

Monday, September 1, 2008

தொடரும் மின்வெட்டும் அதன் அரசியலும்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டின் தாக்குதல் அதிகமாகவே இருக்கிறது. 'மின்வெட்டா? அப்படி ஏதும் இல்லையே!' என்று முதலில் நழுவப் பார்த்தார்கள் ஆளும் கட்சியினர். பிறகு, உண்மைதான், ஆனால் நிலைமை சீக்கிரத்தில் சரியாகிவிடும் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

ஆனால் நிலைமை சரி ஆவதற்கு பதிலாக இப்போது மின்னல் வெட்டாக மின்வெட்டு தமிழன் தலையில் விழுந்திருக்கிறது.

இதுநாள் வரை நகர்ப்புறங்களில் 1 மணி நேரமாக இருந்த மின்வெட்டி இனி 1.30 மணி நேரம் வரை இருக்கும் என்று அரசாங்கம் சொல்லி இருக்கிறது. சிறிய நகரங்களில் சுமார் 3 மணி நேரம் வரையும் கிராமப்புறங்களில் 5 மணி நேரம் வரை மின்சாரம் இல்லாமல் போகலாமாம்.

என்னாச்சு நம் மின் துறைக்கு? இதுநாள் வரை இல்லாத மின் தட்டுப்பாடு இந்த ஆண்டு மட்டும் எப்படி வந்தது? அதிகரித்து வரும் மின் தேவைக்கு ஏற்ப நமது அரசாங்கங்கள் மின் உற்பத்தி செய்யவில்லையா?

மக்கள் கேட்கும் நிறைய கேள்விகளுக்கு அரசாங்கம் வெள்ளை அறிக்கை கொடுத்துத்தான் நிலைமையை விளக்கிச் சொல்ல வேண்டும்.

என்னைப் பொருத்த வரை, இந்த மின்வெட்டுக்கு ஒரு அரசியல் காரணம் இருக்கலாம் என்று நினைக்கிறேன். கூடிய விரைவில் இந்தியா முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன் வைக்கப் போகும் மிக் முக்கியமான பிரச்னை, தேச வளர்ச்சி.

'தேசம் வளர்ச்சி அடைய வேண்டுமெனில், நாம் இன்னும் அதிகமாக மின் உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கு அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் மிகவும் அவசியம். எனவே, வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள்' என்று இந்த மின்வெட்டின் மூலம் காங்கிரஸ் கட்சி சொல்லாமல் சொல்கிறதோ என்னவோ!

மின்வெட்டை அனுபவித்து வரும் மக்களும் ஆமாம், ஆமாம், மின்சாரம் நமக்குத் தேவை என்றால் அணு ஒப்பந்தம் தேவைதான் என்று சொல்லவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

மின்வெட்டு ஓட்டாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Friday, August 29, 2008

நீங்கள் சாப்பிடுகிற காய்கறிகளில் விஷம்!

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரைப் பற்றி உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருபவர். சுற்றுச்சூழல் போராளி. ஏன் வேண்டும் இயற்கை விவசாயம் என்பது குறித்து அவர் எழுதிய கட்டுரை இதோ:

கண்களை விற்றா சித்திரம் வாங்குவது?

ஒரு பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் கேளம்பாக்கத்தை அடுத்த திருப்பேரூரில் டி.இ.டிஇ. அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம். பிரேசில் நாட்டில் இருந்து வந்திருந்த கிரிஸ்டி என்ற பெண்மணி முக்கிய விருந்தினர். தள்ளுப் படங்களைப் போட்டுக் காட்டி
விளக்கிக் கொண்டிருந்தார்.

பச்சைப் புரட்சியினால் உழவர்கள் நிலத்தைக் கம்பெனிகள் வாங்கிக் கொண்டுவிட்டன. உழவர்கள் தமக்குச் சொந்தமான நிலங்களிலேயே கூலிகளானார்கள். ஏற்றுமதிக்காக வாழைத் தோட்டம் போட்டார்கள். வாழைத் தோட்டம் போட்டபோது எலிகாப்டர் மேலே பறந்து பூச்சி கொல்லி நஞ்சைத் தெளித்தது. இதுபோன்ற போக்கால் புற்று நோய்க்கு ஆளானார்கள். தோட்டத் தொழிலை எட்டிக் கூடப் பார்க்காத மனைவி மார்களும் இத்தகைய நோய்களுக்கு ஆளானார்கள். பிறப்புறுப்புக்களிலெல்லாம் ரணக் கட்டிகள்இ பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் உறுப்புக் குறைவு. அரையும் குறையுமாகப் பாலுறுப்புக்கள். படம் போட்டுக் காட்டாது. இருந்தால் இந்தக் கொடூரத்தை நம்புவது கடினம்.

படக் காட்சி முடிவில் கேள்வி நேரம். இந்தியாவில் கூட நிறைய பூச்சி கொல்லி தெளிக்கிறார்கள். நீ காட்டிய அளவு கொடுமை இல்லையே என்று கேட்டேன். அதைக் கேட்ட கிரிஸ்டி இப்படிச் சொன்னாள்.

''அதன் விளைவு இனிமேல் தான் தெரியும்'' என்றவள் காரணமும் சொன்னான். ''முதலாவதாக இந்தியர்கள் அதிகம் இறைச்சி உண்பதில்லை. இரண்டாவதாக, நீங்கள் ஐ.எம்.எப்.பிடம் அண்மையில் தான் கடன் வாங்கியுள்ளீர்கள்.

கிரிஸ்டியின் வாக்கு பலித்துள்ளதைக் காசர்கோடு படம் பிடித்துக் காட்டுகிறது. கேரளாவில் பாலக்காடு அடுத்துள்ள காசரகோடு பகுதி உலகத்தின் பார்வையைக் கவர்ந்துள்ளது. அங்கு 7000 ஏக்கர் பரப்பில் முந்திரிக் காடு உள்ளது. அது அரசுக்குச் சொந்தம். இந்தக் காட்டில் ஏரோப்ளேன் பறந்து பறந்து நச்சு தெளித்தது. மரத்துக்கு மேலே மின் கம்பி போவதால் உயரே உயரே பறந்து நஞ்சு தெளித்தது. அதன் விளைவு பயங்கரமாக இருந்தது. சுற்று வட்டாரத்தில் இருந்த 25 கிராமத்து மக்கள் தோல் புற்று நோய்க்கு ஆளானார்கள். இவர்கள் முந்திரிக் கொட்டை தின்றவர்களும் அல்ல. முந்திரிக் கொல்லையில் வேலை பார்த்தவர் ரூம் அல்ல. இவர்கள் பயன்படுத்திய ஓடை நீரிலும் மூச்சுக் காற்றிலும் நஞ்சு குடி புகுந்துவிட்டது. மக்கள் உடலெங்கும் புற்று நோய்ப் புண்கள். வயிறு வீக்கம், மூச்சிறைப்பு இப்படிப் பாதிப்புகள். பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறவி ஊனம். கட்டைவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையே நமக்கு இயல்பான இடைவெளி உண்டல்லவா? அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரவிரலுக்கு சுட்டுவிரலுக்கும் இடையில் பிளவு காணப்படுகிறது. நடுவிரல்களையே காணோம். குழந்தைக்குத் தலை மட்டும் பெருக்கிறது. உடம்பு சிசுவின் உடலாகவே உள்ளது. இருந்து நான்கு வயது சிறுவன் நாலுவயது குழந்தை போல உடலும் மனமும் சிறுத்துக் காணப்படுகிறான். பிறக்கின்ற கன்றுக்குட்டி மூன்று காலுடன் பிறக்கிறது.

இவற்றையெல்லாம் முதலில் கண்டுகொண்டவர் ஒரு மருத்துவர். வருகின்ற நோயாளிகள் ஒரே வகை நோய்க்கு ஆளாகியுள்ளார்களே என்று புருவத்தை நெளித்த டாக்டர் இந்தக் கொடுமையை வெளிக் கொணர்ந்தார். இவர் கடைசியாகக் கண்டுபிடித்தது. பிறக்கின்ற குழந்தைக்கு சிறுநீரகங்கள் முதுகுக்கு வெளியே தொங்குகின்றன என்பதாகும். பத்து வருடமாக இவர்கள் போராடினார்கள். கோகோ, பெப்சி புகழ் (டெல்லி) சுற்றுச் சூழல் விஞ்ஞான மையம் அனைத்தையும் சோதித்து, ''முந்திரிக் காட்டில் தெளித்த என்டோசல்பான்தான் காரணம் என்று சான்று வழங்கியது. அரசு ஒரு மூன்று பேர் கமிட்டி போட்டது. கமிட்டி மக்களைப் பார்க்காமலே தீர்ப்பு எழுதியது. ''பாதிப்பு என்டோ சல்பான் தெளித்ததால் தான் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை'' என்று எழுதினார்கள். அதற்கு மேலும் ஒரு மைய அரசு வேளாண் விஞ்ஞானி விடுத்த அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது. அவர் சொன்னது இதுதான்.

''என்டோசல்பான் தெளிப்பதால்தான் பிறவி ஊனம் வர வேண்டும் என்பது இல்லை. நெருக்கமான உறவினர்கள் இடையே திருமணம் முடித்தால் கூட பிறக்கும் குழந்தைகள் ஊனமாகப் பிறக்கும்'' என்று முத்துக்களை உதிர்த்தார்.

மக்கள் போராட்டம் ஓயவில்லை. நீதிமன்றம் சென்றார்கள். எலிகாப்டரில் என்டோசல் பான் தெளிப்பதை நீதிமன்றம் தடை செய்தது. எலிகாப்டரில் நஞ்சு தெளிப்பதை நிறுத்தி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. முந்திரிக் காட்டில் விளைச்சல் குறையவில்லை என்று செய்தி வருகிறது. அதாவது பூச்சிகொல்லிக்கே தேவை இருக்கவில்லை என்பது நிரூபணமாகி இருக்கிறது.

பொருள்கள் மீது பூச்சி கொல்லி தெளிக்கும்போது அவை மீது எஞ்சிய நஞ்சு படிந்திருப்பதை 1984 ஆம் ஆண்டிலேயே கோவை வேளாண் பல்கலைக்கழகம் கண்டுபிடித்தது. காய், கனி, தானியம், இறைச்சி. முட்டை, பால் இவற்றில் காணப்படும் எஞ்சிய நஞ்சு தாயின் உடலில் சேமிக்கப்பட்டு குழந்தை பெற்ற பின்பு குழந்தைக்கு ஊட்டும் தாய்ப்பாலிலும் வெளிப்படுகிறது என்று கண்டறிந்தார்கள். அதனால், இயற்கை வழி பயிர்ப் பாதுகாப்புத் துறை என்று ஒரு ஆராய்ச்சித் துறையே ஏற்படுத்தப்பட்டது. இருபத்திரண்டு ஆண்டுகளாக எந்த ஒன்றையும் பல்கலைக் கழகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லையா? என்று உழவர்கள் வியப்படைகிறார்கள்.

1984 ஆம் ஆண்டு போப்பால் நகரில் கார்பைடு (செவின்) என்ற அமெரிக்கக் கம்பெனியின் பூச்சி கொல்லி ஆலையில் ஒரு இரவில் நச்சுக் கசிவு ஏற்பட்டது. பல்லாயிரவர் மடிந்தார்கள். பல்லாயிரவர் முடம் ஆனார்கள். அன்று சிறுவனாக இருந்த சுனில்குமார் இன்று 25 ஆவது வயதில் தற்கொலை செய்துகொண்டுவிட்டான். இன்னும் பலர் தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளார்கள் என்ற செய்தி இதயத்தைப் பிழிகிறது.

பூச்சி கொல்லிகள் இத்தகைய தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை 1962 ஆம் ஆண்டே ''ராச்சேல் கார்சன்'' புத்தகமாக எழுதி வெளியிட்டார். அமெரிக்கர்களுக்குத் தெரிந்துவிட்டது. வேப்பங்கொட்டைச் சாறே பூச்சியையும் விரட்டும், நோய் களையும் விரட்டும் என்று. அது குறித்துத்தான் 2000 ஆண்டில் மே மாதத்தில் ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் வழக்கு நடந்தது. இந்த அலுவலகம் ஜெர்மன் நாட்டில் உள்ள மியூனிச் நகரத்தில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இந்தியாவில் இருந்து போயிருந்த ஐந்து பேரில் நானும் ஒருவன். காப்புரிமை வாங்கியிருந்த கம்பெனியின் பெயர் டபிள்யு. ஆர்.கிரேஸ். இந்த கம்பெனி வேப்பங் கொட்டைச் சாறு பூஞ்சாள நோய்களைக் கட்டுப்படுத்துகிறது என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்திருப்பதாகக் கூறி அமெரிக்காவில் ஒரு காப்புரிமை வாங்கி இருந்தான். ஐரோப்பாவிலும் ஒரு காப்புரிமையும் வாங்கி இருந்தான். டெல்லி நகரில் டாக்டர வந்தனா சிவா தலைமையில் செயல்படும் விஞ்ஞான, உயிரியல் ஆராய்ச்சி மையம் இதை எதிர்த்து வழக்கு தொடுத்தது.

வேம்பு எங்கள் சுதந்திர மரம். நினைவு தெரியாத காலத்திலிருந்து வேம்பு எங்கள் பயிர் மருத்துவத்திலும் கால்நடை மருத்துவத்திலும் மனித மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதில் புதிதாக நீங்கள் எதையும் கண்டுபிடிப்பதற்கில்லை என்பது எங்கள் வாதமாக இருந்தது. நடுவர் கம்பெனிக்காரரிடம் கேட்டார். ''நீங்கள் புதிதாகக் கண்டுபிடித்தது என்ன? இந்தியாவில் சிறிய அளவில் செக்கில் ஆட்டுகிறார்கள். நாங்க பெரிய அளவில் ஃபேக்டரியில் தயாரிக்கிறோம்.'' இது கம்பெனியார் பதில்.

எங்களுக்காக வாதிட்ட வழக்கறிஞர் கேட்டார். ''A''யைக் கண்டுபிடித்தால் அது இல்லாததைக் கண்டு பிடித்ததாகும். இன்னொருவர் A,B,C,D யெல்லாம் கண்டுபிடித்த பிறகு ''E''ஐ நீ கண்டு பிடித்தால் அது எப்படிப் புதிய கண்டுபிடிப்பு? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் கம்பெனி தோற்றுப்போனது. அதன் தோல்வியை வலுப்படுத்த இன்னுமொரு சாட்சியையும் நடுவர் முன் வைத்தோம். அது டபிள்யூ. ஆர்.கிரேஸ் கம்பெனி மும்பாய் வியாபாரிக்கு எழுதிய கடிதம். அதில் ''நீங்கள் வேப்பங்கொட்டைச் சாற்றைப் பயிர்களில் தெளித்து சோதித்துப் பா¡த்திருப்பதாக அறிய வருகிறோம். உங்கள் கண்டுபிடிப்பை எங்களுக்குக் கொடுத்தால் போதிய சன்மானம் தருவோம் என்று எழுதப்பட்டிருந்தது. இந்தச் சாட்சியத்தைப் பார்த்தபோது கம்பெனிக்காரன் மூஞ்சி வெளுத்துப் போனது. மும்பாய்க்காரர் என்னதான் செய்திருந்தார்?

வேப்பங்கொட்டைச் சாற்றைக் காய்ச்சி வடித்து 35 உழவர்களின் பருத்தி, திராட்சைத் தோட்டங்களில் தெளித்திருந்தார். இரண்டு பயிர்களிலும்
பூச்சிகளும் கட்டுப்பட்டன. நோய்களும் மட்டுப்பட்டன. இந்தியாவில் எது அதிகமாக விற்கும் என்பதை யோசித்து மும்பாய் வியாபாரி பூச்சி கொல்லி தயாரிக்கக் காப்புரிமை வாங்கியுள்ளார்.

வேப்பங் கொட்டைச்சாறு பூச்சியையும் கட்டுப்படுத்தும் நோயையும் மட்டுப்படுத்தும் என்ற உண்மை பரப்பப்பட்டால் பல உழவர்களின் தற்கொலை தவிர்க்கப்படும். ஆந்திராவில் ஆயிரம் ஆயிரம் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். காரணம் பருத்திக் காயைத் தின்ற புழுக்களை இரசாயணப் பூச்சி கொல்லிகளால் கொல்ல முடியவில்லை. ஆந்திராவில் உழவர் தற்கொலையை ஒட்டி தமிழகத்து உழவியல் விஞ்ஞானி திரு.செல்வம் மற்றும் இரு விஞ்ஞானிகளை இணைத்துக் கொண்டு ''பருத்தி உழவர்களின் நண்பர்கள்'' என்ற நூலை வெளியிட்டார். அதில் எந்த எந்தப் பூச்சிகளை எந்த எந்த பூச்சிகள் உண்ணுகின்றன என்பது வண்ண வண்ணப் படங்களுடன் விளக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு உழவுத்துறை இயக்குனர், ஆந்திர மாநில உழவுத் துறை இயக்குனர் இருவரும் முன்னுரை எழுதியுள்ளார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசகர் அணிந்துரை வழங்கியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள செய்தி முக்கியமானது.

''ஒரு பருத்தி வயலில் 150 உயிரினங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பத்து மட்டுமே செடியைத் தின்கின்றன. 100 உயிரினம் செடியைத் தின்னும் பூச்சிகளைத் தின்கின்றன. மீதமுள்ள நாற்பது உயிரினங்கள் நன்மையும் செய்வது இல்லை. தீமையும் செய்வது இல்லை. இரசாயணத்தைத் தெளித்துத்தான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லுபவர்கள் உயிரியல் விஞ்ஞானம் பற்றிய அறிவில்லாதவர்கள். அல்லது வேறு ஏதோ காரணத்தால் அப்படிச் சொல்லுகிறார்கள்'' இப்படி எழுதி வெளியிட்டார்கள். நமது விஞ்ஞானிகளுக்கு இந்தப் புத்தகத்தில் ஆளுக்கொன்று கொடுத்தால் நமது உண்ணும் உணவும் குடிநீரும் நஞ்சாகாமல் காக்கப்படும்.

பத்தொன்பது ஆண்டுகளாக நான் முட்டைகோசு சாப்பிடுவதைத் தவிர்த்து வந்தேன். அக்டோபர் கடைசி வாரம் நீலகிரி சென்றபோது மீண்டும் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. முட்டைக்கோசு உண்பதை விலக்கியதற்கான அடிப்படைக் காரணம். அது 1987 ஆம் ஆண்டு. நான்கு வார இயற்கை உழவாண்மை பயிற்சி முடித்திருந்த நேரம். பெங்களூர் போயிருந்தேன். அங்கு முட்டை கோசு அறுவடை நடைபெறுவதைப் பார்த்தேன். ஒரு பெரிய அண்டா அல்லது கொப்பரையில் என்ட்ரின், எக்கலாச்சு முதலாக என்டோசல்பான் ஈறாக பத்து வகை பூச்சி. பூசனைக் கொல்லிகளைக் கொட்டிக் கலக்குகிறார்கள். பிறகு, முட்டை கோசு, காலி ப்ளவர், பீட்ரூட், கேரட் அனைத்தையும் தயாரிக்கப்பட்டுள்ள நஞ்சுக் கலவையில் முக்கி எடுக்கிறார்கள்.

அவர்களில் ஒருவரை நோக்கி நான் கேட்டேன். ''இந்த நஞ்சு அனைத்தும் பூச்சி, பூஞ்சனத்தைக் கொல்வதற்கு என்றுதானே சொன்னார்கள். ஏன் அறுவடை செய்தபிறகு முக்குகிறீர்கள்?'' என்று கேட்டேன். அவர்கள் பதில் விசித்திரமானது.

''அறுவடையாகும் காய்கறிகள் உடனடியாக விற்கப்படுவது இல்லை. பல இடங்களுக்கும் போய் வாடிக்கையாளரை சந்திக்கும் போது ஐந்து நாள் கடந்திருக்கும். அதற்குள் காய்கறி வதங்கி வாடிப்போனால் விற்காமல் கடந்து போகும். அதற்காகத்தான் பூச்சி கொல்லியில் முக்கி எடுக்கிறோம்.''

மேட்டூர் இலக்கியக் கழகத்தில் இதுகுறித்துப் பேசியபோது ஒரு இளைஞர் எழுந்து, ''ஐயா நான் நீலகிரியில் இருந்து வருகிறேன். நாங்கள் முட்டை கோசை நஞ்சு கலந்த நீரில் முக்கி எடுப்பது இல்லை'' என்றார். ''நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லுங்கள். போகும் இடமெல்லாம் அதைச் சொல்கிறேன்'' என்றேன். அந்த இளைஞர் வாய்திறக்கவில்லை. நீலகிரி போனபோது தெரிந்துகொண்டேன். அவர்கள் சக்தி மிகுந்த பூச்சி கொல்லியை சக்தி மிகுந்த தெளிப்பானில் இட்டு வாரம் ஒரு முறை முட்டைகோசு, காலிஃப்ளவர் செடிகளைக் குளிப்பாட்டுகிறார்கள்.

இன்று ஒரு மாற்றம். வான்யா ஓர் என்று பெயர் சூடிய ஓர் சேவகி தனது நண்பர்களுடன் கூட ''எர்த் ட்ரஸ்ட்'' என்று ஒரு அறக்கட்டளை தொடங்கியுள்ளார். இந்த அமைப்பு சார்ந்த நண்பர்கள் ''உயிரகற்றல் வேளாண்மை''யில் பயிற்சியளிக்கிறார்கள். பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள், ஆடவர், மகளிர் அனைவரும் இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தி காய்கறி உற்பத்தி செய்கிறார்கள். அவை சென்னையில் மயிலாப்பூரில் உள்ள கடைக்குக் கூட வருகின்றன. ''உங்கள் காய்கறி வாடுவது இல்லையா'' என்று கேட்டேன். ''நாங்கள் யூரியா, டீ.ஏ.பீ என்று உப்பு எதுவும் போடுவது இல்லை'' என்றார்கள்.

நன்றி: திரு. நம்மாழ்வார்

இந்தக் கட்டுரை நான் எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட 'சிம்பிளா தோட்டம் போடு' என்கிற புத்தகத்தில் உள்ளது.

Wednesday, August 27, 2008

அந்தநாள் ஞாபகம்... முதன் முதலாக எங்கள் வீட்டுக்கு டிவி வந்தபோது!

முதன் முதலாக நம் வீட்டுக்கு டிவி வந்ததை நம்மில் பலரும் மறக்க முடியாது. உங்களுக்கும் அந்த நினைவுகள் பசுமையாகவே இருக்கும். என் நினைவுகளை நான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். (நண்பர் முத்துகுமாரின் டிவி அனுபவங்களைப் படிக்க இங்கே சொடுக்கவும்.)


பள்ளிக்கூடம், பரிட்சை என்று படாதபாடு பட்டுக் கொண்டிருந்த காலம் அது.

அரும்பு மீசை முளைக்கும் வயதிலேயே அரசியல் ஜுரமும் பற்றிக் கொண்டது. எமர்ஜென்ஸி முடிவுக்குக் கொண்டு மூன்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இல்லாத காமெடிகளை எல்லாம் நடத்தி முடித்தி ருந்தார்கள் ஜனதா கட்சியினர்.

அடுத்து அம்மா இந்திராவின் ஆட்சிதான் என்கிற அரசியல் வெறியில் திளைத்துக் கொண்டிருந்தது என் குடும்பம். எனவே நாட்டு நடப்புகள் காதில் வந்து விழுந்து கொண்டே இருந்தன.

அன்றைய தேதியில் நாட்டு நடப்புகளுக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் காலையில் தினத்தந்தி, அதைவிட்டால் ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி. அதற்கடுத்து, இது இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம். செய்திகள் வாசிப்பது .........

தினத்தந்தியும் இலங்கை வானொலி நிலையத்தின் பாடல்களையும் கேட்காமல் எந்த தெற்கத்தித் தமிழனும் வளர்ந்திருக்கவே முடியாது அந்தக் காலத்தில். (ஜெண்டில்மேன்களே, இவன் அந்தக் காலம் என்கிறானே, அப்போது இவனுக்கு என்ன வயதிருக்கும், இப்போது என்ன வயதிருக்கும் என்கிற விவகாரமான சிந்தனை எல்லாம் வேணாம், சொல்லிப்புட்டேன்.)

1981-ஆம் ஆண்டு வாக்கில் மதுரையில் மொட்டை மாடிகளில் நீள நீளமாக கம்பிகள் முளைக்க ஆரம்பித்தன. காக்கைகளும் குருவிகளும் இதில் உட்கார அனுமதி இல்லை. அப்படி என்னடா இந்தக் கம்பி என்று விசாரித்ததில் அதுதான் டிவி ஆண்டனா என்றார்கள். பெரும் பணக்காரர்கள் தங்கள் பகட்டை பறை சாற்றிக் கொள்ள டிவி ஆண்டனாவை மொட்டை மாடிகளில் கொடியாக ஏற்றியிருந்தார்கள். உள்ளே டிவி இருந்ததா, இல்லையா என்று
யாருக்குத் தெரியும்?

சில மாதங்களில் மதுரை தெற்கு மாசி வீதி, வடக்கு மாசி வீதி ஷோரூம்களில் டிவிக்களை வைத்தனர். என் அப்பா அப்பப்ப என்னை டவுனுக்கு அழைத்துச் செல்வார். மேற்படி வீதிகளில் நடந்து செல்லும் போது ஷோரூம்களில் டிவிக்களை பார்த்து விட்டால் நான் அப்படியே நின்றுவிடுவேன். இப்போது
ஷோரூம் டிவிகளில் ஓசியாக கிரிக்கெட் பார்க்கும் கலாச்சாரத்தை உலகில் முதன் முதலாகத் தொடங்கி வைத்தது நானாகத்தான் இருக்க வேண்டும்.

என் அப்பாவும் எனக்காக சில நிமிடங்கள் பொறுமையாக நிற்பார். பிறகு, து ஏடு இப்பி ரா, மீ மொதுரளி கேர் ஜீ சவ்ல தீடி அவ்டுஸ் (நீ இங்கேயே நில், நெய்த சேலைகளை முதலாளி வீட்டில் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன்) என்று சொல்லி விட்டுக் கிளம்பிவிடுவார்.

இப்படி ஒரு முறை என்னை விட்டு விட்டுப் போனார். ஒரு மணி நேரம் ஆச்சு. இரண்டு மணி நேரம் ஆச்சு. அவர் திரும்ப வரவில்லை. ஷோரூமை மூடிவிட்டு, கடைக்காரர்கள் போய்விட்டார்கள். நான் எங்கே போவது, எப்படிப் போவது என்று தெரியாமல் கடை முன்னால் நின்று கொண்டிருந்தேன். அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

என் பயத்தை எக்ஸ்பிரஸ் வேகத்தில் அதிகரிக்கிற மாதிரி, ஒரு போலீஸ்காரர் என்னைப் பிடித்துவிட்டார். அவர் கேட்ட அதட்டலான கேள்விகளால் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஒன்றுக்கு, இரண்டுக்கோடு மூன்றுக்கும் சேர்ந்து வந்துவிடும் போலிருந்தது. கடவுளே வந்த மாதிரி சைக்கிள் ரிக்‌ஷாவில் வந்து இறங்கினார் அப்பா. ”மொதுரளி பராட் ஜேடி ஒதெஸ்பா. தெனு அவி கூலி தேத்தவேள இக்ககெடி ஹொய்ய (“முதலாளி வெளியில போயிட்டார்ப்பா. காத்திருந்து அவர்கிட்ட கூலி வாங்கிட்டு வர்றதுக்குள்ள நாழியாயிட்டுச்சு”) என்று சொல்லி, கடைசி பஸ்ஸில் கடைசிப் படிக்கட்டில் என்னை ஏற்றிவிட்டு அவரும் தொங்கிக் கொண்டு வந்தார்.

இத்தனைக்கும் அந்த நேரத்தில் அந்த டிவியில் தெரிந்தது இலங்கை டிவியின் ரூபவாஹிணி நிகழ்ச்சிகள்தான். இழவு, அதில் தமிழ் சுத்தமாக இருக்காது. ஐரோப்பிய நாட்டில் தயாரான நிகழ்ச்சிகளையே அதிகம் காட்டிக் கொண்டு இருப்பார்கள். ஆனால், அதைப் பார்க்கவே எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

இந்த நேரத்தில்தான் தினத்தந்தியில் ஒரு செய்தி. கொடைக்கான லில் புதிதாக ஒரு டிவி கோபுரத்தை அமைப்பதாகவும் சென்னை யிலிருந்து ஒளிபரப்பாகும் அத்தனை நிகழ்ச்சிகளும் அந்தக் கோபுரம் வழியாக தென் மாவட்டங்கள் முழுக்க ஒளிபரப்பாகும் என்றார்கள்.

இந்த செய்தியைப் படித்த மக்கள் சந்தோஷத்தில் கூத்தாட ஆரம்பித்தனர். இனி தினமும் சினிமாச் செலவு மிச்சம். லட்சுமி தியேட்டர்காரனுக்கு இந்த செய்தி மிகுந்த எரிச்சலைத் தந்தது. ‘நாய்ப்பளுக, பெரிய ஆஸ்பத்திரியை ஒழுங்கா நடத்த இந்த நாய்ங்களுக்கு துப்பில்ல. டிவி காட்றானாம் டிவி’ என்று பொரிந்து தள்ள ஆரம்பித்தார். ஆனால், தியேட்டர்காரனின் வீட்டில் மட்டும் 12 அடி ஆண்டனா காற்றில் அழகாக ஆடிக் கொண்டிருந்தது.

ஒளிபரப்பு ஆரம்பமான சில மாதங்களில் எங்கள் வீட்டில் ஒரு சிறிய கறுப்பு வெள்ளை டிவி பெட்டியைக் கொண்டு வந்துவிட்டார் அப்பா. கெல்ட்ரான் கம்பெனி, கணீரென்று கிருஷ்ணா... முகுந்தா பாடியது. அப்பா, பாகவதரின் பரமரசிகர். ரேடியோவில் பாகவரின் பாடல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டால், நெசவடிப்பதை நிறுத்தி விட்டு பாட்டைக் கேட்க ஆரம்பித்துவிடுவார். (இப்போதும் அப்பாவின் ஞாபகம் எனக்கு வரும்போது பாகவதரின் பாடல்களைத்தான் நான் கேட்பேன்)

எங்கள் காலனியில் முதன் முதலில் டிவி வாங்கியது என் வீட்டில் தான். நாலு தறியை மிதித்து வாழும் ஏழைக் குடும்பம் எங்களுடை யது. மற்றவர்கள் நிலைமை இன்னும் கொடுமை. எனவே, முக்கியமான விஷயம் ஏதாவது வேண்டுமெனில் எங்கள் வீட்டைத் தட்ட யாரும் கூச்சப்பட மாட்டார்கள். எங்கள் வீட்டில் ஒரு ஏணி இருந்தது. ஒரு அகலம், 11 அடி நீளம். என் வீட்டைச் சுற்றி இருந்த நூற்றுக்கணக்கான வீடுகளுக்கும் அந்த ஏணி பயன்பட்டது. கல்யாண வீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்க, மராமத்து செய்ய, இழவு வீட்டுக்கு கொட்டைகை போட என அந்த ஏணி ஏறக்குறைய ஒரு மனிதப்பிறவி
போல இருந்து பல நல்ல கெட்ட விஷயங்களைப் பார்த்திருக்கிறது.

முதல் நாள் தொடங்கி, யார் டிவி பார்க்க வந்தாலும் உடனடியாக அனுமதிப்பார் என் அப்பா. இதனால் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியின் போதும், ஞாயிற்றுக்கிழமை சினிமா படத்தையும் பார்க்க 4 மணி தொடங்கி மக்கள் துண்டு போட்டு இடத்தைப் பிடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

என் குடும்பத்தினர் அனைவரும் சிவாஜி வெறியர்கள். எனவே சிவாஜி படம் என்றால் அன்றைக்குப் படம் பார்க்க வருகிறவர்களுக்கு சுக்கு காப்பி கொடுக்க ஏற்பாடு செய்துவிடுவார் என் அண்ணன். கூடவே கொஞ்சம் காரபூந்தியையும் கொடுப்பார். ஒசிப்படம், காப்பி, காரபூந்தி சமாச்சாரங்கள் அதிக மக்களை என் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தது. எனவே, 20 உட்காரக்கூடிய அறையிலி ருந்து (உண்மையில் அங்கே 10 பேர்தான் உட்கார முடியும்) பெரிய ஹாலுக்கு டிவியைக் கொண்டு வந்து வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால் எம்ஜிஆர் படமென்றால் என் குடும்பத்தார் டிவி பக்கமே வரமாட்டார்கள். அன்று ரேடியோ அலறும். எப்போதையும்விட வேகமாகத் தறி அடிப்பார்கள். டிவி நிலையம் ஒழிக என்று சிவானந்த சாலைக்குக் கடிதம் எழுதிப் போடுவார்கள்.

நாம் டிவி பார்க்கவில்லை என்றாலும் விரும்புகிறவர்கள் பார்க்கட் டும் என்று என் அப்பா டிவியைப் போட்டுவிடுவார். சில எம்ஜிஆர் ரசிகர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து படம் பார்ப்பார்கள். சிலருக்கு சுயமரியாதை உதைக்கும்.

‘அந்த வீட்ல அம்புட்டுப் பேரும் தொந்தியோட ரசிகருங்கெ. வாத்தியாரை சொட்டத் தலையன்னுதான் சொல்லுவாங்கெ. செத்தாலும் நான் அந்த வீட்டுக்குப் போயி தலைவரோட பணத்தை பார்க்க மாட்டேன்’ என்று கரித்துக் கொட்டுவார்கள்.

நான் பள்ளிக்கூடத்தை முடித்து விட்டு கல்லூரிக்குள் நுழைந்திருந்த சமயம். அடிக்கடி கல்லூரி விடுமுறை விட்டு விடுவார்கள். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அடிக்கடி மூத்த மாணவர்கள் கல்லூரிப் புறக்கணிப்பை நிகழ்த்துவார்கள். இந்த நேரத்தில் பலருக்கும் கிரிக்கெட் போதை மெல்ல மெல்ல ஏற ஆரம்பித்திருந்தது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காகவே பலரும் டிவி வாங்கினார்கள்.

என் வீட்டில் விளையாட்டு என்றாலே முகம் சுளிப்பார்கள். நல்ல வேளையாக நான் படித்த கல்லூரியில் ஒரு கலர் டிவி இருந்ததால் நான் அங்கேயே கிரிக்கெட் பார்த்து விடுவேன்.

102 டிகிரி காய்ச்சலில் கவாஸ்கர் 100 ரன் எடுத்தது, அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்த கபில், கொஞ்சம்கூட அலட்டாமல் பக்கத்தில் பரிதாபமாக நின்று கொண்டிருக்கும் கென்யா நாட்டு பேட்ஸ்மேனின் கழுத்தில் கையைப் போட்டு என்ன, ரொம்ப படுத்துறேனா என்று விசாரித்ததையும் மறக்க முடியாத காட்சிகள்.

தேர்தல் வந்துவிட்டால் என் வீட்டு டிவி பொதுச் சொத்தாகிவிடும். தூர்தர்ஷனில் தேர்தல் முடிவுகள் இரண்டு, மூன்று நாட்களுக்கு என விடிய விடிய வரும். குடியிருப்பின் விளையாட்டு மைதானத்தில் ஒரு பந்தலைப் போட்டு எங்கள் வீட்டு டிவியைக் கொண்டு போய் வைத்துவிடுவார்கள்.

காங்கிரஸ் கட்சி ஜெயிச்சாச்சு என்கிற தகவல் வந்தவுடன் வெடி வெடித்துக் கொண்டாடுவார்கள். இதில் வெடி நிகழ்ச்சியில் முக்கியமான பங்கு என் குடும்பத்தினருக்கு உண்டு. சாலையின் நாலு மூலையில் வெடி வெடிப்பதல்ல நோக்கம். எதிர்க்கட்சிக் காரர்களின் வீட்டைத் தேடிப் போய் அவர்களின் வீட்டு வாசலுக்கு முன்பு ஆயிரம் வாலாவை வைப்பார்கள். சிலர் கதவை சாத்திக் கொள்வார்கள். சிலர் சண்டைக்கு வருவார்கள்.

வெற்றி உச்சத்தில் ஒருமுறை எல்லோரும் வெடி வெடிக்கச் சென்று விட, எங்கள் வீட்டு டிவியை அப்படியே போட்டு விட்டுப் போய் விட்டார்கள். என் வீட்டின் மீது ஏண்டா நாயே வெடி வெடிச்சே என்று எதிர்க்கட்சிக்காரர் ஆக்ரோஷமாகசண்டை நடந்து கொண்டிருந்த சமயத்தில் யாரோ ஒருவன் சாமர்த்திய மாக என் வீட்டு டிவியை அடித்து நொறுக்கிவிட்டான். தகவல் தெரிந்ததும் ஆடிப் போய்விட்டார் அப்பா. ’எவனோ ஜெயிக்கப் போறான். அதுக்காக நாம இப்பிடி அடிச்சுக்கணுமா?’ என்கிற முதிர்ச்சி அவரிடம் வர ஆரம்பித்திருந்தது.

பதிலாக என்னிடம் வெறி கூடியிருந்தது. ஜனநாயக வாலிபர் சங்க தொடர்புகள் எனக்கு ஏற்பட்டிருந்தன. ரஷ்ய இலக்கியம், சுத்த இலக்கியம், கவிதைத் தொகுப்புகள், பிரெஞ்சு, ஜெர்மன் சினிமாக்கள் என மாறிக் கொண்டிருந்தேன் நான்.

டிவியில் வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பாகும் சப்டைட்டில் படத்தை சுத்துப்பட்டில் நான் மட்டுமே முழித்திருந்து பார்ப்பேன்.

ஞாயிற்றுக்கிழமை ராமாயணத்தைப் போடுவார்கள். எனக்கு வெறுப்பாக இருக்கும். பிஜேபி கட்சி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருந்ததற்கு ஒரு அறிகுறிதான் ராமாயணம் தொடர். அந்த நிகழ்ச்சி மட்டும் வராமல் போயிருந்தால் அயோத்தியில் பாபர் மசூதியை உடைக்க நாகர்கோவிலில் இருந்தெல்லாம் மக்கள் போயிருக்க மாட்டார்கள் என்று தோழர்கள் சொன்னது எனக்கு சரியாகவே பட்டது.ராமாயணத்துக்கு அடுத்த வந்த சாப்ளின் படங்களே எனக்குப் பிடித்ததாக இருந்தன.

அடுத்து, ஒன்றிரண்டு ஆண்டுகள்தான். டிவியை மறந்து தோழர்களுடன் முழுமையாக ஐக்கியமாகிவிட்டேன். புத்தகம் படிப்பதே பிரதானமானது. டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது முட்டாள்தனமாகப்பட்டது.

வெகுஜன வாழ்விலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகி விலகி, சென்னைக்கு வந்துவிட்டேன். நான் திரும்ப மதுரைக்கு செல்லும் போது தூர்தர்ஷன் இல்லை. எல்லோர் வீட்டிலும் சன் டிவி ஓடிக் கொண்டிருந்தது. காலை, மாலை, இரவு என எல்லா நேரத்திலும் பாட்டு, சினிமா படம். டிவி பார்ப்பதை முற்றிலுமாக ஒதுக்க ஆரம்பித்துவிட்டேன்.

இப்போது நான் விரும்பிப் பார்க்கும் சேனல்கள் மக்கள் தொலைக்காட்சி, ஏசியாநெட், டிவி5 சேனல்கள்தான். பாவம், தூர்தர்ஷன்...? பொதிகையில் செய்திகளை பார்ப்பதோடு சரி.

Tuesday, August 26, 2008

அடிச்சு சொல்றேன்! நீங்க சுத்த சைவம் கிடையாது!

நான் சுத்த சைவம். காரணம், நான் காய்கறிகளை மட்டுமே சாப்பிடுகிறேன் என்று நீங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

அடிச்சுச் சொல்றேன், நீங்க சுத்த சைவம் கிடையவே கிடையாது. பயோடெக்னாலஜி கைங்கரியத்தினால் ஜீன் இடமாற்றத் தொழில்நுட்பம் விவசாயத் துறையில் வந்தபிறகு சைவ வஸ்துக்களில் பல அசைவ வஸ்துக்கள் சேர்ந்துவிட்டன. சுத்த சைவம் என்கிற பெயரில் நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் காய்கறிகளில் பல அசைவ அம்சங்கள் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டது.

இயற்கை விவசாயி தக்கோலம் நீல.சம்பத்து (அவரைப் பற்றி ஏற்கெனவே எழுதி இருக்கிறேன். அதை படிக்க வேண்டுமெனில் இங்கே சொடுக்கவும்!) என்பவர் எழுதிய இயற்கை வேளாண்மை அறிவுச் சுவடியில் இந்தச் செய்தி இருந்தது கண்டு நான் அதிர்ந்து போனேன். தக்காளியிலும், உருளைக்கிழங்கிலும் பிற விலங்குகளின் ஜீன் எப்படி புகுத்தப்பட்டுள்ளது என்பது பற்றி அதில் சொல்லப்பட்டிருக்கும் ஆச்சரிய உண்மை இதோ:

தவளைத் தக்காளி:

தக்காளிப் பழத்தை வணிகத்துக்காக இடம் மாற்றும் போதும், கையாளும் போதும் உடைந்து போவதைத் தவிர்ப்பதற்காக தவளையின் தோலில் உள்ள மரபணுவைத் தக்காளியின் தோலில் புகுத்தியுள்ளனர். அந்த தவளை மரபணுத் தக்காளியைத்தான் நாம் இன்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

உருளைக்கிழங்கு மீன்:
அநேகமாக உருளைக் கிழங்கைப் பல மாதங்கள் குளிர்பதனக் கிடங்கில் பாதுகாத்து வைத்திருந்தே கொண்டு செல்கிறார்கள். வெளி வெப்பத்தால் உருளைக் கிழங்கில் சுருக்கம் விழாமல் இருக்க, மீனின் தோலில் உள்ள மரபணுவை உருளைக் கிழங்கின் தோலில் புகுத்தியுள்ளனர். பருவம் அல்லாத காலங்களில் நல்ல உருளைக்கிழங்கு கிடைப்பதன் ரகசியம் இதுதான்.

இந்தப் பதிவை நான் எழுதியதற்குக் காரணம், சைவ உணவை உண்பவர்களை வாந்தி எடுக்க வைக்க வேண்டுமென்பதல்ல. அசைவ உணவை சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்குமல்ல. உணவுப் பொருட்களின் ஜீனில் தேவையில்லாமல் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது. அப்படி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை நாம் தவிர்க்க வேண்டும். இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகளை நாம் சாப்பிட வேண்டும் என்று உங்களிடம் வற்புறுத்திச் சொல்வதற்காகத்தான்.

Monday, August 25, 2008

ராமதாஸின் வெள்ளைக்கொடியும் கருணாநிதியின் பச்சைக்கொடியும்!

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படிப்பட்ட கூட்டணி அமையும் என்று கடந்த வாரம் நான் எழுதியிருந்த ஒரு பதிவில், தி.மு.க. - பா.ம.க. மீண்டும் கூட்டணி சேர ஒரு வாய்ப்புள்ளது என்று எழுதி இருந்தேன். இப்போது அது உண்மையாகிவிட்டது. உடைந்த கூட்டணி இவ்வளவு சீக்கிரத்தில் சரியாகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

தி.மு.க. அரசின் செயல்பாடுகள் சரியில்லை என்று கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக விமர்சனம் செய்து வந்தது பா.ம.க. பா.ம.க.வின் முக்கியப் பிரமுகர் குருவின் மீது நடவடிக்கை எடுத்ததால் கூட்டணியை முறித்துக் கொண்டது அந்தக் கட்சி.

ஆனால், மத்திய அரசின் அமைச்சர் பதவியை பா.ம.க. தொடர்ந்து வகித்து வந்தது. இதிலிருந்தே பா.ம.க., காங்கிரஸ் கட்சியுடனே தொடர்ந்து இருக்க விரும்புகிறது என்பது தெளிவானது.

காங்கிரஸும் பா.ம.க.வை விட்டுவிடத் தயாரில்லை. காங்கிரஸைப் பொருத்தவரை, பா.ம.க.வின் புலிகள் ஆதரவு போன்ற விஷயங்கள் எல்லாம் அதற்கு ஒரு பொருட்டே அல்ல. பா.ம.க. - அ.தி.மு.க. கூட்டணி ஏற்பட்டால், அது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும். அதனால் அ.தி.மு.க.வுக்குத்தான் லாபமாக இருக்கும் என்பதை காங்கிரஸ் நன்றாக அறிந்திருந்தது.

இதனைத் தடுத்தும் நிறுத்த தி.மு.க. - பா.ம.க. கூட்டணி மீண்டும் ஏற்பட வேண்டும் மத்திய அமைச்சர் பா.சிதம்பரமே மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் இறங்கினார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பா.ம.க. மீண்டும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள கொள்கை ரீதியில் ஒப்புதல் தெரிவித்துவிட்டார் தமிழக முதல்வர்.

பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள பச்சைக்கொடியைக் காட்டுவதற்கு முன்பே, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தாம் கூட்டணிக்குத் தயார் என்று வெள்ளைக்கொடி காட்டிவிட்டார். மத்தியில் காங்கிரஸ் கட்சி மீது கம்யூனிஸ்ட் கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தது போல, தமிழ்நாட்டில் தி.மு.க. மீது கம்யூனிஸ்ட் கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தால், தி.மு.க.வுக்கு ஆதரவாக நாங்கள் வாக்களிப்போம் என்று ராமதாஸ் சொல்லி இருந்தார். ராமதாஸ் காட்டிய இந்த வெள்ளைக்கொடிக்குத்தான் கருணாநிதி இப்போது பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்.

Thursday, August 21, 2008

நாடாளுமன்றத் தேர்தல் - கூட்டணி எப்படி அமையும்?

நாடாளுமன்றத் தேர்தல் - கூட்டணி எப்படி அமையும்?
- ஒரு ’வெகுமுன்’ கணிப்பு

2009-ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் தேர்தல் ஆண்டு. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஐந்து ஆண்டு காலத்தை நிறைவு செய்து, மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்கப் போகிறது.

இப்போதுள்ள சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து தேர்தலை நடத்துவார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது. எனவே 2008-ஆம் ஆண்டுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்பது உறுதி.

2009-ஆம் ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தேர்தல் நடக்கலாம். மார்ச், ஏப்ரலில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு ஆரம்பித்துவிடும் என்பதால் மே மாதம்தான் தேர்தல் நடக்க அனைத்துக் கட்சிகளும் ஒப்புக் கொள்ளும் என்று நம்புவோமாக.

சரி, எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடக்கட்டும். அப்படி நடந்தால், தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட அரசியல் கூட்டணி ஏற்படும்?

இந்தக் கேள்விக்கான மிகச் சரியான பதிலை இப்போதே சொல்வது கொஞ்சம் கடினம் என்றாலும், இப்போதுள்ள சூழ்நிலை மனதில் வைத்துப் பார்க்கும் போது சில போக்குகள் தெளிவாகத் தென்படுவதை தினசரி ஒழுங்காக செய்தித்தாள் படிக்கிற யாரும் எளிதில் பார்க்க முடியும்.

எதிர்வரும் காலத்தில் எந்தெந்தக் கட்சி எந்தக் கூட்டணியில் இடம் பெறும் என்று கணிப்பது நூற்றுக்கு நூறு சதவிகிதம் சாத்தியமில்லை என்றாலும், எந்தக் கட்சி எந்தக் கட்சியோடு கூட்டணி அமைப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து பார்க்கலாம்.

நாடாளுமன்றத் தேர்தல் ஆனாலும் சரி, சட்டமன்றத் தேர்தல் ஆனாலும் சரி, தமிழகத்தைப் பொருத்த வரை இரண்டே இரண்டு கட்சிகள் தலைமை ஏற்று அணி வகுத்து நிற்கும். அவற்றில் ஒன்று, தி.மு.க. இன்னொன்று அ.தி.மு.க.

தேசியக் கட்சியோ, மாநிலக் கட்சியோ, சின்னக் கட்சியோ, பெரிய கட்சியோ இந்த இரண்டு கட்சிகளுடன் சேர்ந்து கொண்டுதான் கூட்டு அமைக்கும். இந்த இரண்டு கட்சிகளுடன் சேராமல் தனியாகப் போட்டு தர்மஅடி வாங்கும் கட்சிகளும் உண்டு. (சமீபத்தில் இதற்கு ஒரே விதிவிலக்காக இருந்தவர் விஜய்காந்த் மட்டுமே!)

இன்றைய தேதியில் தி.மு.க.வும், காங்கிரஸும் பிரிக்க முடியாதபடிக்கு கை கோர்த்துக் கொண்டு நிற்கின்றன. தேசிய அளவில் பா.ஜ.க.வை விட காங்கிரசையே அதிகம் விரும்புகிறது தி.மு.க. காரணம், தி.மு.க.வின் எந்தக் கோரிக்கையையும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் இதுவரை வெளிப்படையாக நிராகரித்ததில்லை. சேது சமுத்திர திட்டத்தில் மட்டும் காங்கிரஸுக்கும் தி.மு.க.வுக்கு சிறு பிணக்கு ஏற்பட்டாலும் அதற்காக தி.மு.க. போராடுவதற்கு காங்கிரஸ் தடை விதிக்கவில்லை. எனவே, காங்கிரஸிடம் கிடைக்காத எதுவும் பா.ஜ.க.விடம் கிடைத்துவிடாது என்பதால் கூட்டணியில் மாற்றம் எதையும் தி.மு.க. கொண்டு வராது என்றே தோன்றுகிறது.

காங்கிரஸைப் பொருத்த வரை இந்தத் தேர்தலை வாழ்வா, சாவா என்றுதான் பார்க்கிறது. ஐந்து ஆண்டுகள் ஆண்டாகிவிட்டது. மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி கொண்டு வந்தாகிவிட்டது. விவசாயிகளுக்கு வரலாறு காணாத கடன் தள்ளுபடி, மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்று எவ்வளவோ செய்தாலும் கடைசி நேரத்தில், கச்சா எண்ணெய் விலை ஏகத்துக்கு எகிறி, பணவீக்கம் என்கிற பிரச்னை வந்து காங்கிரஸின் கனவில் புளியைக் கரைத்துவிட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வால் சாமானிய இந்தியனும் பாதிக்கப்பட்டிருக்கிறான். இந்த நிலையில் அவன் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடுவானா என்கிற சந்தேகம் அத்தனை காங்கிரஸ்காரர்களுக்கும் இருக்கும். எனவே எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்றுதான் காங்கிரஸ் துடித்துக் கொண்டிருக்கிறதே ஒழிய, தமிழகத்தில் கூட்டணியை மாற்றி அமைக்கும் யோசனை அதற்கு இல்லவே இல்லை.

அப்போதைக்கப்போது காமராஜர் ஆட்சி என்று தமிழ்நாட்டு காங்கிரஸ்காரர்கள் பேசினாலும், அது ஒரு கொள்கை முடிவுதான் என்பதை தெள்ளத் தெளிவாக அறிவித்துவிட்டார் தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தங்கபாலு. கொள்கையின் படிதான் அரசியல் கட்சிகள் நடந்து கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை என்பதை அவர் வெளிப்படையாக உணர்த்திவிட்டார். தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு எல்லாம் என்றெல்லாம் பேச, இப்போதைக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்குக் கூட அனுமதி கிடையாது.

தவிர, அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைப்பதில் காங்கிரஸுக்குப் பல சங்கடங்கள். முதலில் அதற்கு அம்மாவும், அன்னையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. தவிர, காங்கிரஸ் கட்சியின் முக்கிய திட்டமான அணு ஒப்பந்தத்துக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தவர் அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா. எனவே, காங்கிரஸ் - அ.தி.மு.க. கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை.

தி.மு.க.வுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அந்தக் கட்சியோடு இருந்த உறவை அறுத்துக் கொண்ட பா.ம.க., எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படிப்பட்ட முடிவை எடுக்கும் என்று யாரும் உறுதியாகச் சொல்ல முடியாது. அதிக சீட்டு, பா.ம.க.வின் எதிர்காலம், அமைச்சர் பதவி என பல விஷயங்களை மனதில் கொண்டே அந்தக் கட்சி ஒரு முடிவெடுக்கும்.

இப்போதுள்ள சூழ்நிலையில், தி.மு.க.வோடு கூட்டு என்றில்லாமல் காங்கிரஸுடன் கூட்டு என்று சொல்லிக் கொண்டு, ஏற்கெனவே இருந்தது மாதிரி இருந்துவிட பா.ம.க.வுக்கு ஒரு வாய்ப்புண்டு. தி.மு.க. தரப்பிலிருந்து இதற்கு பெரிய எதிர்ப்பு எதுவும் இருக்காது என்றே தோன்றுகிறது. காரணம், தி.மு.க.வுடன் மோதல் ஏற்பட்ட பிறகும் மத்திய அமைச்சரவையில் இன்னும் அன்புமணி அமைச்சராக இருக்கத்தான் செய்கிறார். அவரை நீக்க வேண்டும் என்று தி.மு.க. கோரிக்கை வைக்கவே இல்லை. தவிர, பா.ம.க. - அ.தி.மு.க. கூட்டணி வரும் பட்சத்தில் அதனால் தி.மு.க.வுக்குத்தான் பெரிய இழப்பு ஏற்படும். இது தி.மு.க.வுக்கு நன்றாகவே தெரியும்.

தி.மு.க.வுடன் மோதல் ஏற்பட்ட பிறகும் தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க.வுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் பட்சத்தில் தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று சொல்லி இருக்கிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். அப்படி ஒரு விஷயம் நடப்பதற்கு எந்த வாய்ப்புமே இல்லாத இந்த நேரத்தில், அவரே இப்படி ஒரு கருத்தை வெளியிடுவதன் காரணம், தி.மு.க. - பா.ம.க. உறவு இன்னும் முழுவதுமாக அறுந்துவிடவில்லை என்பதை சொல்லாமல் சொல்லத்தான்.

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் இப்போது இருக்கும் திருமாவளவனும் தொடர்ந்து அதில் இருக்கவே வாய்ப்பு அதிகம்.

காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. இடம் பெறாத பட்சத்தில், விஜய்காந்த் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புண்டு. காரணம், அந்தக் கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ் என்கிற இரண்டு பெரிய கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. மூன்றவதாக ஒரு பலம் பொருந்திய அமைப்பு வேண்டும் என்பதால் விஜயகாந்தைக் கூட்டணியில் சேர்த்துக் கொள்வதில் தி.மு.க. உள்பட யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். அணு ஒப்பந்தம் உள்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்துக் கொள்கைகளையும் வெளிப்படையாக ஆதரிப்பவர் விஜயகாந்த் என்பதால், காங்கிரஸும் அவரை எளிதாகவே ஏற்றுக் கொள்ளும்.

சரி, தி.மு.க.வோடு கூட்டு சேர விஜயகாந்த் தயாராக இருப்பாரா? ஏன் மாட்டார், நடக்கப் போவது நாடாளுமன்றத் தேர்தல். மத்திய அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஆதரித்துத்தான் விஜயகாந்த் ஓட்டு கேட்கப் போகிறாரே ஒழிய, தமிழக அரசாங்கத்து ஆதரவாக அல்ல. நாங்கள் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறோம். காங்கிரஸோடு தி.மு.க. கூட்டு வைத்திருக்கிறது என்று சொல்லி சமாளிக்க விஜயகாந்துக்கு நிறையவே வாய்ப்புண்டு.

ஆக, ஒரு அணியில் தி.மு.க., காங்கிரஸ் நிச்சயம் இருக்கும். விஜய்காந்த் அல்லது பா.ம.க. இருவரில் ஒருவர் இருக்கலாம். அவ்வளவுதான்.

சரி, அடுத்த அணி , அதி.மு.க. தலையிலான அணி. இந்த அணியில் எந்தெந்தக் கட்சிகள் இடம் பெறலாம் என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

மேட்டூர் அணைக்கு இன்று 74-வது பிறந்த நாள்!

இன்று நேற்றல்ல, மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் ரத்தத்தோடு கலந்துவிட்டது காவிரி ஆறு. ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் என்று பல மாவட்டங்களில் இருக்கும் விவசாயப் பெருமக்களை வாழ வைத்துக் கொண்டிருப்பதும் காவிரி ஆறுதான்.

அப்படிப்பட்ட காவிரி ஆறு கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து வரும்போது, தன் மடியில் தேக்கி வைத்துக் கொண்டு, அமைதிப்படுத்தி, சீராட்டி, தேவைப்பட்ட போது தேவைப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கும் மிக முக்கியமான வேலையைச் செய்கிறது மேட்டூர் அணை. காவிரி ஆற்றுப் பாசன விவசாயிகள் காவிரி ஆற்றோடு மேட்டூர் அணையையும் கரிகாலன் கட்டிய கல்லணையையும் மறப்பதே இல்லை.

அத்தகைய சிறப்பு கொண்ட மேட்டூர் அணைக்கு இன்று 75-வது பிறந்த நாள். கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1934-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி அன்றுதான் மேட்டூர் அணை பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

சேலத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் இருக்கும் மேட்டூர் என்கிற ஊர். இரு பக்கம் மலைக் குன்றுகள். நடுவே உள்ள பள்ளத்தில் கரை புரண்டு ஓடுகிறது காவிரி ஆறு. வெள்ள காலத்தில் பெருக்கெடுத்து ஓடி, நாடு முழுக்க இருக்கும் கழனிகளை நாசம் செய்தது. தடுத்து நிறுத்துவதற்கு வழி இல்லாததால், மழை இல்லாத காலத்தில் காவிரி ஆற்றுத் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

இதன் காரணமாக, காவிரி ஆற்றுக்குக் குறுக்கே ஒரு அணை கட்ட வேண்டும் என்கிற யோசனை 1801-ஆம் ஆண்டே பிரிட்டிஷ் கிழக்கிந்திய சபையினருக்கு வந்தது. அதற்கான முயற்சிகளில் இறங்கியவுடன் மைசூர் சமஸ்தானம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அணையைக் கட்டும் முயற்சியைக் கைவிட்டது கிழந்திந்திய சபை.

1835-ஆம் ஆண்டில், சர் ஆர்தர் காட்டன் என்கிற பொறியாளரை மீண்டும் மைசூருக்கு அனுப்பி மேட்டூரில் அணை கட்டுவதற்கான அனுமதியைப் பெற்று வர அனுப்பியது. அணை கட்ட மைசூர் சமஸ்தானம் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால், இரண்டாவது முறையாகவும் திட்டம் கைவிடப்பட்டது.

1923-ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவான் பகதூர் சி.பி. ராமசாமி அய்யரிடம், தஞ்சை விவசாயிகள் ஒன்று திரண்டு ஒரு கோரிக்கையை வைத்தனர். மேட்டூர் அணை கட்ட நிச்சயம் அனுமதி பெற்றுத் தரவேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. கோரிக்கையை நிறைவேற்றித் தர சம்மதித்தார் சி.பி.ராமசாமி அய்யர். காரணம், இவரது முன்னோர்கள் தஞ்சைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதே.

திவான் பகதூர் சி.பி. ராமசாமி, மைசூர் சம்ஸ்தானத்தினரை அணுகி, திவான் பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்துப் பேசினார். வழக்கம் போல மைசூர் சம்ஸ்தானத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தஞ்சை விவசாயிகள் வேறு ஒரு கோரிக்கை வைத்தனர்.

ஆண்டு தோறும் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தினால், பல நூறு கிலோ மீட்டர்களுக்கு பலத்த சேதம் ஏற்படுகிறது. இந்த சேதத்துக்கு நஷ்ட ஈடாக ஆண்டு 30 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தஞ்சமை மாவட்ட கலெக்டர் மூலமாக ஒரு கோரிக்கை மைசூர் சமஸ்தானத்துக்கு அனுப்பினர்.

ஒவ்வொரு ஆண்டும் 30 லட்ச ரூபாயைக் கொடுப்பதைவிட, மேட்டூரில் அணை கட்டிக் கொள்ள சம்மதிப்பதே புத்திசாலித்தனம் என்று சி.பி.ராமசாமி அய்யர் மைசூர் சமஸ்தானத்திடம் எடுத்துச் சொல்லி மேட்டூரில் அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி வாங்கிக் கொடுத்தார். (மேட்டு அணை வரலாறு - நன்றி தமிழ் விக்கிபிடியா) நம் எல்லைக்குட்பட்ட பகுதியில் நாம் அணை கட்ட எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம் பார்த்தீர்களா?

அணை கட்ட அனுமதி வாங்கும் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போதே, அதற்கான ஆய்வுப்பணிகளை தொடர்ந்து செய்து வந்தது பிரிட்டிஷ் அரசாங்கம். 1905 முதல் 1910-ஆம் ஆண்டு வரை ஆய்வுப் பணிகள் நடந்தன. ஆய்வுப் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு 1924-ஆம் ஆண்டு 31-ஆம் தேதி இந்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அதே ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி அனுமதியும் வழங்கப்பட்டது. 1925-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி மேட்டூர் அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

தலைமை மற்றும் வடிவமைப்பு என்ஜினியர் எல்லிஸ், நிர்வாக என்ஜினியர் வெங்கட்ராமைய்யர், முதன்மை தலைமை முல்லிங்க்ஸ் தலைமையில் 24 என்ஜினியர்கள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஓய்வின்றி உழைத்து மேட்டூர் அணையைக் கட்டி முடித்தனர்.


1934-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி கடைசிக்கல் வைத்து அணை கட்டும் பணி முடிந்தது. அதற்கடுத்த மாதம், அதாவது ஆகஸ்ட் 21-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றுப் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட்டார் அப்போதைய சென்னை மாகாணத்தின் கவர்னராக இருந்த ஜான் பெடரிக் ஸ்டான்லி. அவரது நினைவாகவே, மேட்டூர் அணை ஸ்டான்லி அணை என்று அழைக்கப்படுகிறது.

அந்த காலகட்டத்தில் மேட்டும் அணையைக் கட்டி முடிக்க ஆன செலவு 4.80 கோடி ரூபாய். மேட்டூர் அணையின் உயரம் 124 அடி. 120 அடி தண்ணீர் தேக்கி வைக்க அனுமதி உண்டு. அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர். இரண்டு சிறிய மலைகளுக்கு நடுவே உயரமான, நீளமான சுவரை எழுப்பி இந்த அணை கட்டப்பட்டிருக்கிறது. இந்த அணையின் கொள்ளளவு 93.4 டி.எம்.சி. அணையிலிருலிருந்து ஒரு டி.எம்.சி. தண்ணீர் வெளியேறும் எனில், அணையின் உயரத்தில் 1.25 அடி குறையும்.

கர்நாடக எல்லையைத் தாண்டி ஒக்கனேக்கல் எல்லைக்குள் நுழைந்தவுடன், கரடுமுரடான மலைகளில் ஓடி, மேட்டூர் அணைக்குள் தஞ்சமடைந்துவிடுகிறது காவிரி ஆறு.

மேட்டூர் அணை பற்றிய பல வரலாற்றுச் செய்திகள் நமக்கு வந்து சேரவில்லை என்பது வருந்தத்தக்க உண்மை. ஒரு பெரிய அணை கட்டும் போது மிகப் பெரிய அளவில் மக்களை வெளியேற்ற வேண்டியிருக்கும். மேட்டூர் அணை கட்டும் போது எத்தனை கிராமங்கள் அப்புறப்படுத்தப்பட்டன? அணை கட்டும் பகுதியில் என்னன்ன இருந்தன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.

அணை கட்டுவதற்கு 10 ஆண்டுகளுக்கு காவிரி அணை தடுத்து வைப்பட்டிருந்ததா? அப்படியெனில், அந்த 10 ஆண்டுகளுக்கு காவிரி ஆற்றுத் தண்ணீரை நம்பியிருந்த விவசாயிகள் எப்படிச் சாமளித்தனர்? என்பதெல்லாம் சுவாரஸ்யமான கேள்விகள்.

நடந்தாய் வாழி காவேரியைக் கட்டுப் போடும் மேட்டூர் அணை இன்னும் பல நூறு ஆண்டு காலம் சீறும் சிறப்போடும் இருக்கட்டும் என்று வாழ்த்துவோம்!

Monday, August 18, 2008

மரம் வளர்த்தார்; குரோர்பதி ஆனார்!

ஒரு சாமானிய விவசாயி கோடிசுவரரான வெற்றிக் கதை!

உங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது? அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்” என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல், தொடர்ந்து மா மரங்களை நடுபவர்களால்தான் இந்த உலகம் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுள் ஒருவர், மரம் தங்கசாமி!


தனது பெயருடன் மரத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கும் த ங்கசாமி, காடு வளர்ப்பில் உலகு க்கே இன்று ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். உல கின் பல பகுதி களில் இருந்தும் வேளாண் ஆராய் ச்சியாளர்கள் தங் கசாமியின் தோட் டத்துக்கு வந்து பார்வையிடுகிறார்க ள். தனி மனிதனாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்த மங்கலத்துக்கு அருகே சேந்தன்குடி என்னும் கிராமத்தில், இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடு போல் இருக்கும் அவரது தோட்டத்துக்கு மாணவர்கள் பயிற்சிக்காக வருகிறார்கள். மரம் வளர்க்கும் தங்கசாமியின் பணி மற்றும் மக்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது சேவை ஆகியவற்றைப் பாராட்டி ஜனாதிபதி விருது தங்கசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று பலராலும் மலைப்பாக பார்க்கப்படும், கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் மரம் தங்கசாமி, ஒரு காலத்தில் கடன்காரராகி, கடனை அடைக்க சொத்தை விற்றுவிட்டு எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குப் போகலாமா என யோசித்துக் கொண்டிருந்தவர் என்பதுதான் உண்மை. அவர் வெற்றி பெற்றது எப்படி? அவரது கதையை அவரே சொல்கிறார்...

“எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத, உழைப்பில் நம்பிக்கை உள்ள விவசாயி நான். எனக்கு இரண்டு மனைவிகள், இரண்டு குழந்தைகள். எங்கள் குடும்பத்தார் அனைவரும் தினமும் பத்து முதல் பதினைந்து மணி நேரம் உழைத்தோம். ஆனாலும் நான் கடன்காரனானேன். 1975இல் வந்த கடுமையான வறட்சியின் போது, உற்பத்தி செய்த எந்த விவசாயப் பொருளுக்கும் கட்டுப்படியாகிற விலை இல்லை. இதனால் சாகுபடி செலவைக்கூட திரும்பி எடுக்கமுடியாத நிலை. விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ததால், ரசாயண உரங்களுக்குச் செய்த செலவே என்னைப் பெரிய கடன்காரனாக ஆக்கிவிட்டது. என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினேன். சொத்தை எல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டு, எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தையாவது காப்பாற்றுவோம் என்று தோன்றியது. வேறு வழி இல்லை.

அப்போது பேராசிரியர் சீனிவாசன், 'மரப்பயிரும் பணப்பயிரே' என்னும் தலைப்பில் அகில இந்திய வானொலியில் பேசியதைக் கேட்டேன். அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. அன்றே நான் செய்துவந்த விவசாய முறைகள் அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, மரம் வளர்ப்பது என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு நாற்பத்தைந்து வயது. நூறு தேக்கு மரங்களை நட்டேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொன்றாக அவற்றை வெட்டி விற்று வயதான காலத்தை ஓட்டுவதுதான் அப்போதைய என் திட்டம். ஆனால், ஒரு வருடத்திலேயே இருபது அடி உயரம் அவைகள் வளர்ந்தன. அது தந்த உற்சாகத்தில் நூறு மாங்கன்றுகளை நட்டேன். அப்புறம் அது அப்படியே நூறு முந்திரி, நூறு புளி என்று வளர்ந்துக் கொண்டே போனது.

மர வகைகளைத் தேடி பயணம் செய்த போது நம்மாழ்வார் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்தது என் வாழ்வின் இரண்டாவது திருப்புமுனை. அன்றே அவரை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். தேசிய நிகழ்ச்சிகள், தேர்தல், தலைவர்களின் பிறந்த தினம் உட்பட எல்லா விஷேச நாட்களிலும் மரங்கள் நடுவேன். வீரப்பன் சுடப்பட்ட அன்று ஒரு சந்தன மரத்தை எங்கள் தோட்டத்தில் நட்டேன். எனக்கு மரம் நட ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நான் சம்பவங்களையும் பண்டிகைகளையும் பயன்படுத்திக் கொள்கிறேன். அவ்வளவுதான். இப்போது என் தோட்டத்தில் நூற்றி தொன்னூறு சாதிகளைச் சேர்ந்த ஐயாயிரம் மரங்கள் இருக்கின்றன.

ஏன் ஒரே வகை மரங்களை வைக்காமல் பல்வேறு மரங்களை கலந்து நடுகிறேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம் வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பலவேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். எல்லா மர வகைகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது எல்லா மரங்களுக்கும் சரிசதமாக சத்து பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதனால், நானும் ஒரே வகையாக இல்லாமல், காடு போல் பல்வேறு வகை மரங்களை கலந்து வைத்திருக்கிறேன். வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், மகோகனி, நெல்லி, புளி என்று பல்வேறு மர வகைகளுடன் இப்போது என் பண்ணை ஒரு மாதிரி பண்ணையாக இருக்கிறது. கலப்பு பண்ணையின் மூலமே தன்னிறவு அடைய முடியும் என்பதுதான் என் அனுபவம். கடன் இல்லாத விவசாயம், நோய் இல்லாத வாழ்க்கை, நஞ்சில்லா உணவு இதன் மூலம்தான் சாத்தியம்.

திருமண வைபவங்களுக்கு செல்லும் போது மணமக்களுக்கு மரக் கன்றுகளைப் பரிசாகத் தருவேன். தலைவர்களை அழைத்து என் தோட்டத்திலும் எங்கள் கிராமத்திலும் மரம் நடும் விழாக்களை நடத்துகிறேன். என் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக கொடுத்து அனுப்புவேன். பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகள் மத்தியில் மரம் நடுவதன் தேவையை வலியுறுத்திப் பேசுவேன். பள்ளிக்கூட வளாகத்திலேயே மரங்கள் நடுவேன். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் மரம் நடாத பள்ளிக்கூடமே இல்லை எனலாம். மேலும் தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்து பத்தாயிரம் வேப்பம் விதைகளை விதைத்திருக்கிறேன். அதில் ஆயிரமாவது மரமாகியிருக்கும். மரங்கள் என்னுடன் பேசுகின்றன, நான் அவைகளுடன் பேசுகிறேன். மரம் நடக்கும் என்பதையும் என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன்.

இதையெல்லாம் சொன்ன போதும், ஆரம்பத்தில் நான் ஊர் ஊராகச் சென்று மரம் நடுவதைப் பார்த்து விட்டும் எங்கள் கிராமத்தவர்களும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர் களும் என்னைக் கிண்டலும் கேலியும் செய்தார்கள். “தங்க சாமிக்கு கிறுக்குப் பிடித்து விட்டது”, “கிறுக்குப் போகிறது பார்” என்று என் காது படவே பேசினார்கள். அப்போது, “யார் கிறுக்கன் என்பதை காலம் தீர்மானிக்கும்” என்று மட்டும் அவர்களுக்குப் பதில் சொன்னேன். இப்போது அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள், “உங்களைக் கிறுக்கன் என்று சொல்லி, கடைசியில் நாங்கள்தான் கிறுக்கன் ஆகிவிட்டோம்” என்று சொல்லுவதுடன், என்னைப் பின்பற்றவும் செய்கிறார்கள்.

இப்போது நான் தினமும் ஆறு மணி நேரம் உழைக்கிறேன். ஒரு மனைவி வீட்டுச் சமையலைப் பார்த்துக் கொள்கிறாள். இன்னொரு மனைவி கால்நடைகளைப் பராமறிக்கிறாள். அவள் ஏ. எம். டி. பயிற்சி முடித்திருக்கிறாள். நாங்கள் இருவரும் கலந்து பேசி பயிர் முறையை அமைக்கிறோம்.

எங்கள் தோட்டத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. முதலில் கவலையைப் போட்டு இறைத்தோம். அப்புறம் தண்ணீர் மட்டம் கிழே போய்விட்டது. அப்போது ஸ்லோஸ்பீட் மோட்டார் இஞ்சினை உபயோகித்து நூற்றைம்பது அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்தோம். அதன்பிறகு தண்ணீர் மட்டம் அதற்கும் கிழே போய்விட்டது. இப்போது, எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து முன்னூறு அடி ஆழ்குழாய் கிணறு போட்டு, நீர் மூழ்கி பம்புசெட்டை உபயோகித்துத் தண்ணீர் எடுக்கிறேன்.

நான் ரசாயண உரங்களை உபயோகிப்பதில்லை. விவசாயிகளுக்குத் தங்கம் குப்பைதான். “எருக்குழி இல்லாம ஏர் கட்டாதே. குப்பை உயர்ந்தால் குடி உயரம்” என்று அந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். என் தோட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட கம்போஸ்ட் குழிகளைப் பராமரித்து வருகிறேன். பண்ணைக் கழிவுகளை அதில் நிரப்பி விடுவேன். என் தோட்டத்தில் நிறைய ஆடு, மாடுகள் இருக்கின்றன. சூபா புல், என்.பி.21 கொழுக்கட்டைப் புல், கிளேரி செரியா போன்றவற்றைப் பண்ணையில் பயிரிட்டிருக்கிறேன். எனவே ஆடு, மாடுகளுக்குத் தீவன பிரச்னை இல்லை. ஆடு, மாடுகள் போடும் சாணத்தை கம்போஸ்ட் குழிகளில் போட்டு நிரப்புவேன். மரங்களுக்கு இடையே வரிசை வரிசையாக குழிகளை வெட்டி, பண்ணைக் கழிவுகளை அதில் போடுகிறேன். மரங்களுக்கும் பயிர்களுக்கும் அடியுரமாக வேப்பம் புண்ணாக்கைப் போடுகிறேன். மண் வளம் பிரசினையே இல்லை.

எங்கள் தோட்டத்தில் களை எடுப்பதில்லை, உழுவதில்லை. கழிவுகளை அப்படியே விட்டுவிடுவோம். அவைகள் மக்கி உரமாகிவிடுகின்றன. மேலும் இந்தக் கழிவுகள் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன. இப்படி கழிவுகளை அப்படியே விடும்போது, அதில் பல நுண்ணியிர்கள் உருவாகும். இந்த நுண்ணியிர்கள் மண்வளத்தைப் பாதுகாப்பதுடன், மண்ணைக் கிளறி உழ வேண்டிய தேவை இல்லாமல் செய்கின்றன. இப்போது என் தோட்டத்துக்கு மயில்கள் உட்பட பல்வேறு வகை பறவைகள் வருகின்றன. அவற்றில் பல நமது ஊர்களுக்கு முற்றிலும் புதியவை என்பது குறிப்பிடத்தக்கது.

பூச்சிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு, வேப்பம் எண்ணெய், பீஞ்சுருவி இலை எல்லாம் போட்டு இடிச்சி ஊறவைச்சு தெளிக்கிறேன். பூச்சி கட்டுப்படுகிறது.

விதைகளைப் பொறுத்தவரைக்கும் உயர் விளைச்சல் தரும் சில விதைகளைத் தவிர வேறந்த வெளியிடு பொருள்களையும் நான் வாங்குவதில்லை. என்னைக் கேட்டால் விவசாயிகள், விஞ்ஞானிகளிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் முனைவர்களிடமும் கொஞ்சம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவங்க ஆராய்ச்சியில் நல்லதும் வரலாம், கெட்டதும் வரலாம். சில வருடங்களுக்கு முன்னால் “ராஜ ராஜ”ன்னு ஒரு நெல் ரகத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்தார்கள். அதனைப் பயிரிட்ட எங்கள் கிராமம் மொத்தமும் நஷ்டமடைந்தது.

மரங்களுக்கு இடையே காய்கறிச் செடிகளைப் பயிரிட்டிருக்கிறேன். இதிலிருந்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கின்றன. அன் றாட பால் தேவைக்கு வீட்டிலுள்ள மாடு கறக்கிறது. திடீரென்று பணம் தேவைப்பட்டால், நாலைந்து ஆட் டை பிடித்து விற்றுவிடுவேன். என் னிடமுள்ள ஆடுகளையெல்லாம் நடமாடும் வங்கி என்றுதான் நான் சொல்வது.

நான் பத்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறேன். ஆனால், இப்போது என்னால் ஆங்கிலத்தில் வாசிக்க முடியும். அறிவியல் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பது எனக்குப் பிடிக்கும். இப்பொழும் தொடர்ந்து வாசிக்கிறேன்.

உலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், “ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை” என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்கள் வளர்ப்பதுதான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழி.

செஞ்சந்தன மரத்துக்கு அணு உலை கதிர் வீச்சைத் தடுக்கும் சக்தி இருக்கிறது. எனவே, ஜப்பானில் செஞ்சந்தனத்துக்கு தனி மவுசு. ஒரு டன் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புக்குப் போகிறது. எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது செஞ்சந்தனம். எனவே எல்லோரும் செஞ்சந்தனம் வளர்க்கலாம். முக்கியமாக கதிர் வீச்சு பாதிப்பு உள்ள பகுதிகளில் செஞ்சந்தனம் வளர்ப்பது மிக நல்லது.”

விடைபெறும் போது தங்கசாமி சொன்னார். “நான் எதுவும் புதியதாக செய்யவில்லை. நமது முன்னோர்களின் வழிமுறைக்கு, நமது பாரியம்பரியத்தை நோக்கித் திரும்பியிருக்கிறேன், அவ்வளவுதான். நாடெங்கும் மரம் வளர்ப்போம். சுற்றுச் சூழலை அழகுபடுத்துவோம். அதை விடாது பாதுகாப்போம்.”

(குமுதம் நிறுவனத்தில் இருந்து வெளிவருவதாக இருந்த 'மண்வாசனை' (விவசாய இதழ்) பத்திரிகைக்காக மரம் தங்கசாமியை அவரது தோட்டத்தில் சந்தித்தேன். மூன்று இலவச இதழ்களுக்குப் பிறகு மண்வாசனை நின்றுவிட்டது.)

நன்றி: தளவாய் சுந்தரம் http://dhalavaisundaram.blogspot.com

மருத்துவர் அய்யாவின் கவலை உண்மைதானா?

''விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வு காண மத்தியிலும் மாநிலத்திலும் யாரும் தயாராக இல்லை'' என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கவலை சொல்லி இருக்கிறார். தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் திருச்சியில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் தன் கவலையைக் கொட்டி இருக்கிறார்.

மருத்துவர் அய்யாவின் கவலை உண்மைதானா? விவசாயிகள் மீது அவருக்கு உண்மையிலேயே அக்கறை உண்டா? என்றெல்லாம் சிலர் கேள்வி கேட்கின்றனர்.

இந்த சந்தேகத்துக்கு அவர்கள் சொல்லும் காரணம், சமீப காலமாக மருத்துவருக்கும் தி.மு.க. அரசாங்கத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல்தான்.

''தி.மு.க. - பா.ம.க. கூட்டணி முறிவுக்குப் பிறகு தி.மு.க. மீது படிப்படியாகக் குற்றங்களைச் சுமத்தி வந்தார் மருத்துவர் ராமதாஸ். மருத்துவரின் கேள்விகளுக்கு முதலில் பதில் சொன்னார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. பிறகு தனது அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை விட்டு மருத்துவரின் கேள்விகளுக்கு பதில் தந்தார். தி.மு.க. அரசை மருத்துவர் ராமதாஸ் குறை சொல்லத் தேவையில்லை என்று காரசாரமாக பதிலடி கொடுத்தார் அமைச்சர் வீரப்பாண்டி.

இந்த அறிக்கையின் காரணமாக, விவசாயத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது காட்ட ஆரம்பித்திருக்கிறார் மருத்துவர். எனவேதான், இப்போது விவசாயிகள் கருணை மழை பொழிய ஆரம்பித்திருக்கிறார்'' என்று சொல்கிறார்கள் சிலர்.

எம்மைப் பொருத்தவரை, விவசாயிகள் மீது மருத்துவர் ராமதாஸுக்கு இருக்கும் அக்கறை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. இன்றைக்கு இருக்கும் அரசியல் தலைவர்களில் விவசாயிகளின் பிரச்னையை உண்மையாக புரிந்து கொள்ள முயற்சி செய்பவர்களின் முதன்மையானவர் அவர். சுற்றுச்சூழலுக்காக இவரும் பா.ம.க.வின் ஒரு அங்கமான பசுமைத் தாயகமும் செய்து வரும் பணிகளை தமிழகத்தில் இன்றுள்ள வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வன்னியர் சங்கம் என்கிற அமைப்பைத் தொடங்கிய போது ஏராளமான மரங்களை வெட்டிப் போட்டிருக்கலாம். ஆனால், இப்போது வட தமிழகத்தில் பல ஏரிகளை தூர் வாரிக் கொண்டிருக்கிற வேலையைச் செய்கிறார் மருத்துவர் ராமதாஸ். ஏராளமான மரங்களையும் வைத்திருக்கிறார். எல்லாவற்றையும்விட, இயற்கை விவசாயத்தில் நேரடியாகவே அக்கறை காட்டி வருகிறார். மருத்துவரின் வீட்டில் இயற்கை முறையில் மரம், செடி கொடிகளை வளர்ப்பதாகத் தகவல். எனவே, மருத்துவரின் கவலையை யாரும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

தவிர, கரும்பு விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க சென்னையில் இரண்டு நாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருக்கிறாராம் அவர். இதில் அனைத்து விவசாயிகள் சங்கமும் கலந்து கொண்டு, கரும்பு விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காண வழிவகை செய்யும் என்று அவர் சொல்லி இருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.

மருத்துவர் ராமதாஸைப் போல ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவரும் போட்டி போட்டுக் கொண்டு விவசாயிகளைப் பற்றி கவலைப்பட்டால் மட்டுமே விவசாயிகள் இனி பிழைக்க முடியும்

Thursday, August 14, 2008

விளைச்சலைப் பெருக்க நினைக்கும் வீரபாண்டியார் கவனத்துக்கு!

பள்ளிக்கூடம் போய் படிக்காமலே அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகவும் மாமேதையாகயும் விளங்குகிற மண்ணாங்கட்டிக்கு கடந்த பல ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லை.

அவனுக்கு இது கேடு காலம். அதனால் அவன் விளங்காமல் போய்க் கொண்டிருக்கிறான் என்று சொன்னார்கள் சிலர். அளவுக்கதிகமாக வெயிலும் மழையும் மாறி மாறி அடிப்பதால்தான் அவன் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக சொன்னார்கள் வேறு சிலர்.

மண்ணாங்கட்டியின் உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு உண்மையான காரணம், சமீப காலமாக தனக்குக் கொஞ்சமும் ஒவ்வாத, தன் உடல்நலத்தைக் கெடுக்கக்கூடிய சாப்பிட்டு வருவதுதான்.

இந்த உண்மையை உணர்ந்து மண்ணாங்கட்டிக்கு மருத்துவம் செய்ய யாருமே தயாராக இல்லை. பல மருத்துவர்களும் தப்பும் தவறுமாக மருத்துவம் செய்த பிறகு ஒரு நன்னாளில் ஊர்ப் பெரியவரின் இளைய மகன் சொன்னான்.

‘'இனி மண்ணாங்கட்டி உடுத்தும் உடைகள் ஆற்றுப்படுகையில் துவைத்து கழுதை மீது கொண்டு வரவேண்டாம். கழுதைக்கு பதிலாகக் குதிரைகளின் மீது ஏற்றி வருவோம்''.

இந்தத் தீர்ப்பைக் கேட்டு பதினெட்டு பட்டியும் பலத்த கரகோஷம் செய்தது. ஆனால், மண்ணாங்கட்டியோ தன் வேதனையை யாருமே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே என்று மெளனமாக அழுது கொண்டிருந்தது.

இது ஏதோ ஒரு குட்டிக்கதை அல்ல. இந்திய விவசாயத்துக்கு ஏற்பட்டிருக்கும் இழிநிலை. மண்ணாங்கட்டி என்பது வேறு யாரும் அல்ல, இந்திய விவசாயமும் விவசாயிகளும்தான்.
சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடந்த விவசாய விளைபொருட்கள் உற்பத்தி தொடர்பாக நடந்த கூட்டத்தின் முடிவுகளைப் பார்க்கிற போது மண்ணாங்கட்டிக்கு நேர்ந்த கதி நினைவுக்கு வருகிறது.

செம்மை செல் சாகுபடி மற்றும் விவசாயத் திட்டங்களை தீவிரப்படுத்தி உணவு உற்பத்தியைப் பெருக்க தமிழக விவசாயத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மதுரைச் சுற்றி இருக்கும் 15 மாவட்ட ஆட்சித் தலைவர்களை அழைத்து நடத்தி இருக்கிறார். இந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்திலேயே நடந்திருக்க வேண்டிய இந்தக் கூட்டம் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. மூன்றாவது முறையாக இந்தக் கூட்டத்தை நடத்தியே தீருவது என்கிற கங்கணத்தில் இந்தக் கூட்டத்தை நடத்தி இருக்கும் அமைச்சருக்கு நம் பாராட்டுகள்.

பெருகி மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவு உற்பத்தியையும் நாம் அதிகரித்துத்தான் ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தை இந்த அரசாங்கம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. மக்கள் தொகை பெருக்கம் என்கிற மாபெரும் பிரச்னை ஒரு பக்கமிருக்க, விளைநிலங்கள் வீட்டடிமனைகளாக மாறிவரும் கொடுமையும் இன்னொரு பக்கம் வேகமாக நடந்து வருகிறது. அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் படுத்துவிட்டாலும் (சப்-பிரைமின் கைங்கர்யம்) தமிழ்நாட்டில் மரமேறிய பேயாக அரற்றிக் கொண்டுதான் இருக்கிறது. பச்சைப் பசேல் என விளைந்த நிலங்கள் எல்லாம் கட்டம் கட்டி விற்பனையாகும் பண்டமாக ஆகிக் கொண்டிருக்கின்றன. சென்னையில் வளரும் ஒரு குழந்தைக்கு நெல் வயலைக் காட்ட வேண்டுமென்றால் குறைந்தது 25 கி.மி. தூரமாவது பயணம் செய்தாக வேண்டிய நிலை. இப்படி ஒரு சூழ்நிலையில்தான் இந்தக் கூட்டம் நடந்திருக்கிறது.

பொதுவாக ஒரு மாவட்டத்தில் மிகப் பெரிய அதிகாரம் கொண்டவர் மாவட்ட ஆட்சித் தலைவர். மத்திய, மாநில அரசாங்கங்களின் திட்டங்களை சரியாக நடைபெறுகிறதா என்று கண்காணிக்கிற வேலை மாவட்ட ஆட்சித் தலைவரையே சாரும். எல்லாத் துறைகளின் நடவடிக்கைகளையும் கவனிக்கிற மாதிரி விவசாய உற்பத்தியையும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இதுநாள் வரை கவனித்தே வந்திருக்கிறார்கள். இந்தக் கண்காணிப்பு போதாது, இன்னும் கவனம் தேவை என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்துக்கு அழைத்து சொல்லப்பட்டிருக்கிறார்கள். இதற்கான அதிகாரத்தையும் வழங்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் சொல்லி இருக்கிறார்.

இப்படிச் செய்வதால் எல்லாம் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்துவிட முடியுமா? விவசாயிகளின் துயரைத் துடைத்துவிட முடியுமா?

நிச்சயம் முடியாது. உடம்புக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள உடம்பை பல விதமான சோதனைகளுக்கு உட்படுத்தித்தான் ஆக வேண்டுமே ஒழிய, பெண் நர்ஸுக்கு பதிலாக ஆண் நர்ஸைக் கொண்டு வந்தால் சரியாகிவிடாது.

இன்றைய தேதியில், விவசாய உற்பத்தி மிகப் பெரிய அளவில் குறைந்து வருவதற்குக் காரணம், செயற்கை உரங்களை மானாவாரியாக அள்ளித் தெளித்து விளைநிலங்களை சுடுகாடுகளாக்கும் மாடர்ன் விவசாய முறைகளினால்தான். செயற்கை உரங்களை பெருமளவில் பயன்படுத்தும் போது செலவும் ஏகத்துக்கு எகிறுகிறது. விளைநிலங்களும் தன் சக்தியை இழக்கிறது.

இந்த செயற்கை விவசாயத்தை விட்டொழித்து விட்டு, இயற்கை விவசாயத்து நாம் மாறுவோம் எனில், சத்தான, சுவையான உணவை நம் மக்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்க முடியும். “இயற்கை விவசாயத்தில் விளைச்சல் இருக்காது. அனைத்து இந்திய மக்களுக்கு சோறு போட முடியாது” என்று சிலர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தப் பிரச்சார பீரங்கிகள் வாய் கிழிய கத்துவதோடு சரி, புளியங்குடி விவசாயி அந்தோணிசாமி அண்ணாச்சியின் சவாலை நேருக்கு நேர் சந்திக்கத் துணிவதே இல்லை.

அரசாங்க அதிகாரிகள் பலரும் 'இயற்கை விவசாயம்தான் சரி. ஆனால், சில பல காரணங்களுக்காக செயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் நிலத்தில் கொட்டச் சொல்ல வேண்டியிருக்கிறதே!' என்று புலம்புகின்றனர். என்ன புண்ணியம் செய்து தங்கள் பாவத்தைக் கழுவிக் கொள்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.

உணவுப் பொருட்களின் உற்பத்தி பெருக வேண்டுமெனில், இயற்கை விவசாயம் ஒன்றுதான் தீர்வு என்றுதான் என்பதை நம் அரசாங்கம் எப்போதுதான் உணரப் போகிறதோ!

Saturday, August 9, 2008

அக்ரி இன்சூரன்ஸ் என்பது ஏமாற்றா?

இன்சூரன்ஸின் அருமை பெருமைகளை நீங்கள் நன்றாகவே உணர்ந்திருப்பீர்கள். இன்சூரன்ஸ் என்பது கடவுள் மாதிரி. இக்கட்டான காலத்தில் ஆபத்பாந்தகன் மாதிரி வந்த நம்மைக் காப்பாற்றும் இன்சூரன்ஸுக்கு ஈடு இணை எதுவும் இல்லை.
எத்தனை இழப்புகளுக்கு இழப்பீட்டைக் கொடுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளை மட்டும் அதிகம் அக்கறைப்படுவதே இல்லை. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் இந்தத் தொழிலைப் பாதுகாக்க பல விதமான இன்சூரன்ஸ் திட்டங்களை உருவாக்கி, விவசாயிகளுக்குத் தோள் கொடுக்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மறுத்து வருவது ஏனோ தெரியவில்லை.
விவசாய உற்பத்தி என்பது சூதாட்டம் மாதிரி ஆகிவிட்டது. அடுத்த ஆண்டில் இவ்வளவு விளைச்சல் கிடைக்கும் அல்லது கிடைக்காது என்பதை அறிவியல்பூர்வமாக தீர்மானிக்க முடியாததால், இந்தத் தொழிலில் இறங்க பயப்படுகின்றன இன்சூரன்ஸ் நிறுவனங்கள். விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் பாலிசிகளைக் கொடுத்து கையைச் சுட்டுக் கொள்ள அதற்கு விருப்பம் இல்லை.
இன்றைய தேதியில் எந்தத் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமும் பயிர் காப்பீட்டுக்கான இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குவதில்லை. மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய வேளாண்மைக் காப்பீட்டுத் திட்டம் என்கிற அமைப்பு மட்டுமே விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தை அளித்து வருகிறது.
இதற்காக விவசாயிகள் கட்டும் பிரிமியம் மிக மிகக் குறைவு. ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு பயிர் இன்சூரன்ஸ் செய்ய வெறும் 855 ரூபாய் கட்டினால் போதும். எனவே, 100 அல்லது 200 ரூபாய்க்குள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துவிடலாம். பிரிமியமாகக் கட்டும் பணத்தில் 50 சதவிகிதம் மானியமாகவும் மத்திய அரசே அளித்துவிடுகிறது.
இந்தத் திட்டம் கேட்பதற்கு இனிப்பாக இருந்தாலும் இது ஒரு ஏமாற்று. வெறும் கண் துடைப்பு என்று சொல்கின்றனர் விவசாயிகள். காரணம், பயிர் காப்பீடு பெற்ற விவசாயிகளுக்கு வறட்சி, வெள்ளம் போன்ற காரணங்களுக்காக உண்மையாகவே விளைச்சல் இல்லாமல் போனால் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீட்டைக் கொடுக்க மிகவும் யோசிப்பதாகச் சொல்கின்றனர் விவசாயிகள். ஒரு விவசாயிக்கு சரியான விளைச்சல் கிடைக்கவில்லை என்றால், அந்த வட்டாரத்திலேயே யாரும் சரியான விளைச்சல் கிடைத்திருக்கக்கூடாது. அப்போதுதான் இழப்பீட்டைக் கொடுக்க முடியும் என்று சொல்கிறதாம் விவசாயத் துறை.
இது என்ன நியாயம்? எனக்குக் காய்ச்சல். மருந்து கொடுங்கள் என்று கேட்டால், ஊரில் எவனுக்குமே வராத காய்ச்சல் உனக்கு மட்டும் எப்படி வரும்? மருந்து கிடையாது போ என்று சொன்னால், அந்த வாதத்தை எப்படி ஏற்றுக் கொள்வது என்று கேட்கின்றனர் விவசாயிகள்.
விவசாயிகளின் வாதம் சரியானது. வெளிநாடுகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எதன் அடிப்படையில் பயிர் இன்சூரன்ஸ் திட்டங்களை அளிக்கின்றன என்று விவரம் தெரிந்தவர்கள் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் சில விவசாயிகளின் மோட்டார் பம்ப் செட்டுகளுக்கும் வண்டிகளுக்கும் இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குகின்றன. எனினும் இந்த பாலிசிகளும் கேட்டவுடன் கிடைப்பதில்லை என்றே விவசாயிகள் சொல்கின்றனர். `அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஏஜெண்ட் என் நண்பர்தான். இருந்தாலும் அந்த பாலிசியை எனக்குக் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்' என்கிறார் ஒரு விவசாயி.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஓரளவுக்குத் தாராளமாக விவசாயிகளுக்கு அளிக்கும் இன்சூரன்ஸ் பாலிசிகள் என்றால், அது ஆடு, மாடுகளுக்கான இன்சூரன்ஸ்தான். காரணம், இதில் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு லாபம் அதிகம்.
விவசாயத் துறையில் உற்பத்தியை முன்கூட்டியே கணிக்க முடிவதில்லை என்கிற காரணம் காட்டி, விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் வழங்க அந்த நிறுவனங்கள் சுணக்கம் காட்டி வருவது வருந்தத்தக்கது. குசேலன் படம் வெற்றியா, தோல்வியா? சீனாவில் நடக்கும் ஒலிம்பிக்கில் நாம் எத்தனை தங்கப்பதக்கம் வாங்குவோம் என்று கவலைப்படும் புண்ணியவான்கள் வயிற்றுக்குச் சோறிடும் விவசாயிகள் பற்றியும் கொஞ்சம் அக்கறைப்பட்டால் நல்லது.

Saturday, March 22, 2008

ஜி.எம். கத்திரிக்காய் - தகவல்களை சொன்னாக் கொறஞ்சு போயிடுவீங்களோ!

இந்தியா என்றாலே வெளிநாட்டு கம்பெனிகளுக்கு கிள்ளுக்கீரையாகப் போய்விட்டது.

அதிலும் விவசாயிகள் என்றால் பிரச்னையே இல்லை. இந்தியா என்கிற மெகா விவசாயப் பண்ணையில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்கிற நினைப்பே பல வெளிநாட்டு கம்பெனிகளுக்கும் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் ஆகியிருக்கிற ஒரு வழக்கின் மூலம் வெளிநாட்டு கம்பெனிகளின் இந்த மனப்போக்கு தெள்ளத் தெளிவாக நமக்குத் தெரிகிறது.

வழக்கின் விபரத்தை முதலில் பார்ப்போம்.

மகாராஷ்ட்ரா ஹைபிரீட் சீட்ஸ் கம்பெனி லிமிடெட் என்பது மரபணு மாற்றப்பட்ட (Genetically modified) விதைகளைத் தயாரிக்கும் கம்பெனி. அகில உலக ஜி.எம். விதை புகழ் மான்சாண்ட்டோ நிறுவனத்தின் இந்தியக் கூட்டாளி நிறுவனம் இது.

இந்த மகாராஷ்ட்ரா கம்பெனி உருவாக்கிய புதிய ஜி.எம். கத்திரிக்காய் விரைவில் இந்திய விவசாயிகளுக்கு விற்கப்படும் என்று செய்தி வெளியானது.

இந்த ஜி.எம். கத்திரிக்காயின் ஆதி அந்தம் பற்றிய தகவல்கள் எங்களுக்கு வேண்டும் என்று இந்திய உயிரிதொழில்நுட்பத் துறையிடம் மிக்க பணிவன்போடு விண்ணப்பம் செய்தது கிரின்பீஸ் என்கிற அமைப்பு.

(உலக அளவில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வுக்காகப் பாடுபட்டு வரும் அமைப்பு கிரின்பீஸ்.)

அரசு இலாகா என்றால் சாதாரணமா, அரசரைவிட அதிக விசுவாசம் காட்டுகிறவர்கள் ஆச்சே! கிரின்பீஸ் கேட்ட தகவல்களைக் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டது.

இந்தத் தகவல்களை வெளியே சொன்னால் இதில் இருக்கிற வியாபார ரகசியம் அம்பலமாகிவிடும். இதனால் எதிரிகள் சுதாரித்துவிடுவார்கள். மேற்படி மகாராஷ்ட்ரா கம்பெனிக்கு பெரிய நஷ்டம் வரும். பாவம் என்று உச்சு கொட்டியது அரசு இலாகா.

இந்தத் தகவல்கள் முக்கியமானவை. எங்களுக்கு அவசியம் வேண்டும். எனவே நீங்களாவது எங்களுக்கு வாங்கித் தாருங்கள் என்று மத்திய தகவல் ஆணையத்தின் உதவியை நாடியது கிரீன்பீஸ்.

மத்திய தகவல் ஆணையம் அரசு இலாகா இல்லை. எனவே, கிரின்பீஸ் கேட்கும் தகவல்களைக் கொடுக்கும்படி நேர்மையாக உத்தரவிட்டது.

இந்த உத்தரவால் மூக்கு வேர்த்துப் போன மகாராஷ்ட்ரா நிறுவனம் இப்போது டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு ஓடி வந்திருக்கிறது. இந்த மாதிரியான தகவல்களைக் கேட்பதெல்லாம் அபாண்டம். நீங்கள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்திருக்கிறது.

இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் இப்போது விசாரித்து வருவது ஒரு பக்கம் இருக்கட்டும். இதில் உள்ள நியாய, அநியாயங்களை நாம் கொஞ்சம் அலசிப் பார்ப்போம்.

புதிதாக ஒரு பொருளை சந்தைக்குக் கொண்டு வரும் போது அந்தப் பொருள் பற்றி சில கேள்விகளைக் கேட்டால் பதிலே சொல்ல மாட்டேன் என்றால் அது எந்த விதத்தில் நியாயம்?


கடைக்குப் போகிறோம். புதிதாக வந்த ஒரு பொருளை வாங்குகிறோம். நல்ல பொருள் சார், பாஸ்ட் மூவிங் என்று கடைக்காரர் சொன்னவுடன் நாம் வாங்கிவிடுவதில்லை. அந்தப் பொருளில் என்ன விஷயங்கள் கலந்திருக்கிறது என்பதைத் துருவித் துருவிப் பார்க்கிறோம்.

இப்படிச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. காசு கொடுத்து வாங்குபவர் என்கிற முறையில் நமக்கு இருக்கும் உரிமை இது.

ஆனால்,இந்த உரிமையை அங்கிகரிக்க மறுக்கின்றன வெளிநாட்டு கம்பெனிகள்.

சரி, போய்த் தொலையட்டும். நாளைக்கே நாம் அமெரிக்காவுக்கோ அல்லது ஐரோப்பாவுக்கோ போகிறோம். அற்புதமான சுவை கொண்ட ஒரு பானத்தை அங்கே விற்பனை செய்ய ஆரம்பிக்கிறோம். ஒகே, வித்துட்டு போ என்று கதவைத் திறந்து விட்டுவிடுவார்களா?

என்ன பானம்? எப்படித் தயாரித்தீர்கள்? மூலப் பொருட்கள் என்னென்ன? இதனால் என்ன நன்மை கிடைக்கும்? இதைக் குடித்தால் தீமையே ஏற்படாது என்று எப்படிச் சொல்கிறீர்கள்? அப்படி ஏதாவது தீமை ஏற்பட்டால் பொறுப்பேற்றுக் கொள்வீர்களா?

இப்படி ஆயிரத்தெட்டு கேள்விகளைக் கேட்டு நம்மைக் குடைவார்கள் இல்லையா?

நிச்சயம் குடைவார்கள். மக்கள் மீது அக்கறை கொண்ட எந்த அரசாங்கமும் இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டுக் குடைவதில் எந்தத் தவறும் இல்லை.

நம் அரசு இலாகாகளும் மேற்படி கம்பெனிகளை இந்த மாதிரி கேள்வி கேட்டு குடைந்திருக்கலாம்.அப்படி எல்லாம் செய்திருக்கவே மாட்டார்கள் என்று சொல்ல வரவே இல்லை.

அப்படிக் குடைந்த போது சம்பந்தப்பட்ட கம்பெனி அளித்த தகவல்களை நம் மக்களில் யாராவது கேட்டால் அவர்களுக்குக் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?

இத்தனைக்கும் கிரின்பீஸ் நிறுவனம் வர்த்தக நிறுவனம் அல்ல. தகவல்களை வாங்கிக் கொண்டு ஜி.எம். கத்திரிக்காய் விதைகளை அவர்களே உற்பத்தி செய்து விற்க ஆரம்பித்துவிட மாட்டார்கள்.

அல்லது, அந்தத் தகவல்களை வேறு எந்த நிறுவனத்துக்கும் கொடுக்க மாட்டார்கள். காரணம், அவர்களுக்கே ஜி.எம். விதை உற்பத்தியில் ஒப்புதல் இல்லை என்கிற போது அதை ஏன் அவர்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கப் போகிறார்கள்?

இதெல்லாம் குறைந்தபட்ச வாக்குறுதிகளாக இருக்கும்போது கிரின்பீஸ் நிறுவனத்தின் மீது ஏன் தேவையில்லாமல் சந்தேகப்பட வேண்டும்?

இத்தனைக்கும் மான்சாண்ட்டோ கம்பெனி குறித்து கிரீன்பீஸ் நிறுவனத்துக்கு கசப்பான அனுபவம் ஒன்றுண்டு.

சில ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சில் மான்சாண்ட்டோ நிறுவனம் ஒரு ஜி.எம். விதையை வெளியிட்டது. இந்த விதை பற்றிய தகவல்களை போராடி வாங்கியது கிரின்பீஸ் நிறுவனம். மான்சாண்ட்டோ சொல்கிறபடிதான் அந்த விதை இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்து பார்த்ததில், நேருக்கு மாறான பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிப்பட்டன.

இந்தியாவில் இப்போது அறிமுகமாகிற ஜி.எம். கத்திரிக்காயிலும் இந்த மாதிரி குளறுபடிகள் நடந்துவிடக் கூடாது என்பதுதான் கிரின்பீஸ் அமைப்பின் அக்கறை.

மகாராஷ்ட்ரா கம்பெனி பயப்படுவதை பார்த்தால் மீண்டும் மாட்டிக் கொள்வோமோ என்கிற பயம்தான் அப்பட்டமாகத் தெரிகிறது.

அய்யா வெளிநாட்டுக் கம்பெனிமார்களே, இந்திய மாறிடுச்சுங்கய்யா. இது யூனியன் கார்பைட் காலம் இல்லைங்கய்யா. இதைக் கொஞ்சம் மண்டையில ஏத்திக்கங்கய்யா!

Wednesday, March 19, 2008

தமிழனுக்கு எதிராக மீண்டும் கிளம்பும் கர்நாடக பூதம்!

இத்தனை நாளும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிக் கொண்டிருந்த கர்நாடக அரசியல்வாதிகள், இப்போது ஒரு லாரி நிறைய ஆசிட்டைக் கொண்டு வந்து தமிழ் நாட்டு மக்களின் தலையில் கொட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.


தர்மபுரி கூட்டுக் குடிநீர் திட்டத்தைத் தான் குறிப்பிடுகிறோம்.


தர்மபுரி கூட்டுக் குடிநீர் திட்டம் முறையற்றது. இந்தத் திட்டத்தின் மூலம் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை மத்திய அரசுக்கு வெள்ளை அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் - முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கிருஷ்ணாவின் கோரிக்கை இது.


இந்தத் திட்டத்துக்காகத் தண்ணீர் எடுக்கப்படும் இடம் எங்கள் எல்லையில் இருக்கிறது. எங்கள் எல்லையில் எங்களைக் கேட்காமல் தமிழகம் எப்படித் தண்ணீர் எடுக்க முடியும் - தேச ஒற்றுமைக்காகவே(?!) பாடுபட்டு வரும் கர்நாடக பா.ஜ.க. எட்டியூரப்பாவின் கருணை மிக்க கோரிக்கை இது.

வாட்டாள் நாகராஜிலிருந்து பலரும் இதே ரீதியில் ஆளாளுக்குக் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள் கர்நாடகாவில்.


சிலரால் சில பிரச்னைகளை விட்டால் அரசியல் நடத்தவே முடியாது. அமெரிக்காவுக்கு ஈராக் மாதிரி, பாகிஸ்தானுக்கு காஷ்மீர் மாதிரி, பா.ஜ.க.வுக்கு அயோத்தி ராமர் கோயில் மாதிரி,
கேரளாவுக்கு முல்லைப் பெரியார் மாதிரி, கர்நாடகாவுக்கு காவிரிப் பிரச்னை.


காவிரி பற்றி பேசாமல் கர்நாடகாவில் அரசியல் காசு பார்க்க முடியாது என்பதை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் அந்த ஊர் அரசியல்வாதிகள்.


தமிழ்நாட்டில் நீங்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராகவும் இருந்துவிட்டுப் போங்கள். ஆனால், உங்கள் விருப்பு வெறுப்பைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துப் பாருங்கள். இந்தத் திட்டம் எவ்வளவு நியாயமானது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வீர்கள்.

கர்நாடகாவிலிருந்து வரும் காவிரி தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்துக்குள் இருக்கும் ஒகனேக்க்ல் என்கிற இடத்தில் உள்ளே நுழைகிறது.


குண்டும் குழியுமான இருக்கிறது இந்த இடம். மலைகள், பாறைகள் என்று குவிந்து கிடக்கிறது. தலை தெறிக்க ஓடிவரும் காவிரி இந்த இடத்துக்கு வந்தவடன், தர்மபுரியை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறது.

இதன் காரணமாக மேட்டுப் பகுதியில் இருக்கும் தர்மபுரி மக்களுக்கு காவிரியால் எந்த நன்மையும் கிடைக்காமலே போகிறது.


ஒரு நிமிஷம் யோசித்துப் பாருங்கள். தமிழகத்துக்கே சோறும் போடும் காவிரி ஆறு தர்மபுரி மாவட்டத்தின் வழியாகத்தான் உள்ளே நுழைகிறது. எனினும் அதனால் அந்த மாவட்டத்துக்கு ஒரு பயனும் இல்லை. எனில் அந்த மாவட்ட மக்களுக்கு ஆத்திரம் வருமா, வராதா?


அய்யா, நாங்கள் காவிரி நீரைக் கொண்டு விவசாயம் செய்ய வேண்டாம். ரெண்டு போகம், மூன்று போகம் என்று நெல்லறுக்க வேண்டாம். அட, குடிப்பதற்குக்கூடவா எங்களுக்கு வக்கில்லாமல் போய்விட்டது. மேடான நிலத்தில் நாங்கள் பிறந்ததுதான் நாங்கள் செய்த பாவமா? என்று நினைத்து அந்த மாவட்ட மக்கள் எவ்வளவு தூரம் கவலைப்பட்டு கலங்கிப் போயிருப்பார்கள்.


இந்தக் கவலையப் போக்க வந்ததுதான் தர்மபுரி கூட்டுக் குடிநீர் திட்டம்.


இன்றல்ல நேற்றல்ல, 1965-ஆம் ஆண்டே இந்தத் திட்டத்துக்கான யோசனை பிறந்துவிட்டது. வீராணம் திட்டம் பெரிய அளவில் பேசப்படாத காலம் அது. ஒகனேக்கலில் இருந்து குழாய் மூலமாக சென்னைக்குத் தண்ணீர் கொண்டு வரலாமா என்றுதான் முதலில் யோசிக்க ஆரம்பித்தார்கள்.


பிற்பாடு இந்த யோசனை அவ்வளவு சாத்தியமில்லை என்றவுடன் மேற்கொண்டு யோசிக்காமல் விட்டுவிட்டார்கள். ஆனாலும் இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் தர்மபுரி மக்களின் தாகம் தீரும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்கவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்ட இந்தத் திட்டம் நிறைவேறாமல் தள்ளிக் கொண்டே போனது. இதற்கு முக்கியமான காரணம், நிதி. பல நூறு கோடி ரூபாய் தேவையாக இருந்தது இந்தத் திட்டத்தை நிறைவேற்ற.

அகில உலக கடன் புகழ் ஐ.எம்.எப். இந்தத் திட்டத்துக்குத் தேவையான நிதி உதவி அளிக்கவில்லை. இன்னோரு அகில உலக கடன் புகழான உலக வங்கியும் இந்த்த் திட்டத்துக்கு கடன் கொடுக்கவில்லை.

தண்ணீரின் அவசியத்தை நன்கு உணர்ந்த ஜப்பான் இந்தத் திட்டத்துக்குத் தேவையான பணத்தை கடனாகக் கொடுக்க முன்வந்தது. கடன் என்றால் சும்மா அல்ல. வட்டிக்குத்தான். என்றாலும் இந்தப் பணத்தைப் பெற ஜப்பானிய அதிகாரிகளுடன் பல முறை தொடர்ந்து பேச வேண்டியிருந்தது.


ஒரு வழியாக எல்லாம் நல்லபடியாக முடிந்து, இப்போது திட்டத்தை ஆரம்பிக்கலாம். இத்தனை நாளும் தாகத்தால் தவித்த தர்மபுரி மக்களுக்குத் தண்ணீர் கொடுக்கலாம் என்றால் பிரச்னை பண்ணக் கிளம்பிவிட்டார்கள் கர்நாடக அரசியல்வாதிகள்.


இந்தத் திட்டத்துக்காக காவிரியிலிருந்து குடிப்பதற்காக கொஞ்சம் தண்ணீரைத்தான் எடுக்கப் போகிறது தமிழக அரசாங்கம். சில லட்சம் மக்கள் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் எவ்வளவு தண்ணீர் தேவைப்படப் போகிறது?

இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்றால் அது போல முட்டாள்தனமான வாதம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

அப்படியே மிகச் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும்கூட அது பற்றி தஞ்சை விவசாயிகள்தான் கவலைப்பட வேண்டுமே ஒழிய கர்நாடகாவுக்கு அந்தக் கவலையே தேவை இல்லை.


இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் கர்நாடக அரசியல்வாதிகளை இஷ்டத்துக்கு பேச வைத்திருக்கிறது.


மற்ற அரசியல்வாதிகள் இப்படிப் பேசினால்கூட புரிந்து கொள்ள முடியும். காரணம், அப்படிப் பேசினால்தான் அவர்களால் அரசியல் பிழைப்பு நடத்த முடியும். ஆனால், முன்னாள் முதல்வராக இருந்த கிருஷ்ணாவுக்கு என்ன குறைந்து போய்விட்டது?

இனிமேல் முதல்வர் பதவி கிடைக்காது என்று தெரிந்தவுடன் கவர்னர் பதவி தேடி ஓடினார் கிருஷ்ணா. இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்ககலாம் என்று தெரிந்தவுடன் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

(கிருஷ்ணாவைத் தொடர்ந்து அண்மையில் புதுச்சேரி கவர்னரும் பதவியை ராஜினாமா செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.)

கவர்னர் பதவி என்பது எந்தக் கட்சிக்கும் சார்பில்லாமல் உண்மையாக நடந்து கொள்ள வேண்டிய பதவி. உள்ளதை உள்ளபடி மத்திய அரசாங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டிய பதவி.

கண்ணியம் மிக்க இந்தப் பதவியில் இருப்பவர்கள் பதவிக் காலம் முடிந்த பிறகு அரசியலை விட்டு ஒதுங்கிவிடுவது நல்லது, இந்திய ஜனாதிபதிகள் செய்கிற மாதிரி.

ஆனால் இப்போதுள்ள சில கவர்னர்கள் அந்தப் பதவியை ஒரு சொகுசாகத்தான் பார்க்கிறார்களே ஒழிய, பொறுப்பான பதவி என்று பார்ப்பதாகத் தெரியவில்லை.

மனம் நிறைய முதல்வர் பதவி ஆசையை வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர், கட்சி பேதம் பார்க்காமல் ஒரு மாநிலத்தின் உண்மையான நிலைமையை மத்திய அரசுக்கு எப்படித் தெரிவித்திருக்க முடியும்?


மத்திய அரசாங்கம் ஒன்று கவர்னர் பதவியை ஒழிப்பது நல்லது. அல்லது பதவி ஆசை கொண்டவர்களை அந்தப் பதவியில் உட்கார வைக்காமல் இருப்பது நல்லது.


காவிரி சம்பந்தமாக கர்நாடககாரர்கள் மீண்டும் கடை விரித்துவிட்டார்கள். இந்த முறை தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு அல்ல, தருமபுரி மாவட்ட மக்களுக்குத்தான்.


இந்திய நதிகள் அனைத்தும் தேசியச் சொத்து ஆகும் வரை கர்நாடக, கேரள மாநில அரசியல்வாதிகளின் காட்டில் செம மழைதான் போங்கள்!

ஆனால், பாவம் தமிழ்நாட்டு மக்கள்!

Saturday, March 1, 2008

கடன் ரத்து செய்துவிட்டால் விவசாயிகளின் பிரச்னை தீர்ந்துவிடுமா?

இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் இந்தியா முழுக்க உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது.

விவசாயிகளுக்கு மத்திய அரசாங்கம் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று பா.ஜ.க.வும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் பங்குக்குக் கோரிக்கைகளை எழுப்பின. நாடாளுமன்றத்தில் சபையே நடத்த முடியாதபடிக்கு குரல் கொடுத்தது பா.ஜ.க.


எல்லா அரசியல் கட்சிகளின் வாயை அடைக்கிற மாதிரி சிறு விவசாயிகள் வாங்கிய கடன் தொகையை ரத்து செய்திருக்கிறது மத்திய அரசாங்கம். இதற்காக அரசாங்கத்துக்குக் கூடுதலாக 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இதனால் இந்தியாவில் உள்ள 4 கோடி விவசாயிகள் நன்மை அடைவார்களாம்.

விவசாயிகளின் கடனை ரத்து செய்தது வரவேற்கத்தக்க விஷயம்தான். கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கும் சுறுக்குக் கயிற்றைக் கொஞ்சம் பின்னுக்கு இழுத்துவிட்ட மாதிரி விவசாயிகள் நினைக்கிறார்கள். ஆனால் சுறுக்குக் கயிறு இன்னும் கழுத்தை விட்டு முழுவதுமாக நீங்கிவிடவில்லை என்பது சில விவசாயிகளுக்கு மட்டுமே தெரியும்.

இந்தக் கடன் ரத்தானாலும் நாளை மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலையே விவசாயிகளுக்கு ஏற்படும். அந்தக் கடனையும் விவசாயிகளால் கட்ட முடியாது. மீண்டும் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழும். பல விவசாயிகள் சாவார்கள். மீண்டும் ஒரு 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் ரத்து செய்ய வேண்டியிருக்கும்.

எனவே, கடன் ரத்து என்கிற விஷயத்தோடு அரசாங்கம் நிறுத்திக் கொள்ளாமல், விவசாயிகள் ஏன் மீண்டும் மீண்டும் கடனில் போய் மாட்டிக் கொள்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

இன்றைய தேதியில், விவசாயம் என்பது செலவு மிகுந்ததாக இருக்கிறது. விதைச் செலவு அதிகம். உரச் செலவு அதைவிட அதிகம்.பூச்சி மருந்துச் செலவு எல்லாவற்றையும் விட அதிகம். இத்தனையும் செய்துவிட்டு, தண்ணீர் கிடைக்க வேண்டும். இயற்கை ஏமாற்றாமல் இருந்தால் நல்ல விளைச்சல் கிடைக்கலாம்.

நிறைய விளைச்சல் மட்டும் கிடைத்துவிட்டால் போதுமா? அதை விற்கிற விவசாயிக்கு நல்ல விலையும் கிடைக்க வேண்டும்.

இப்படிப் பல பிரச்னைகள் இருக்கிறது. இதற்கெல்லாம் எந்தத் தீர்வு மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப் போகின்றன?

கடன் ரத்து தற்காலிகமான ஒரு தீர்வுதான். விவசாயிகளின் பிரச்னைகளுக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டுமெனில் அனைவரும் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கான முயற்சிகளில் மத்திய, மாநில அரசாங்கங்கள் இறங்க வேண்டும்.

Wednesday, February 27, 2008

கேரளத்தின் முயற்சியைத் தடுப்போம்!

இந்தியா ஒரே நாடு என்று சொல்லிக் கொள்வதில் நமக்கெல்லாம் பெருமைதான். ஆனால், பக்கத்தில் இருக்கிற மாநில மக்கள் வாழ்ந்தா என்ன, செத்தா என்ன என்று நினைக்கும் சில் மாநில அரசுகளை நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, தண்ணீர் விஷயத்தில் தமிழகத்தைச் சுற்றி இருக்கிற மூன்று மாநிலங்களும் கொஞ்சமும் நேர்மையாக நடந்து கொள்வதில்லை.

பெரியாறு அணை உடையும் நிலையில் உள்ளது. எனவே, குறிப்பிட்ட அடிக்கு மேலே தண்ணீர் தேக்கக்கூடாது என்று இத்தனை நாளும் பொய்ப் பிரச்சாரம் செய்து வந்தது கேரளம். இப்போது பெரியாறு அணையின் கீழ் பகுதியின் புதிதாக ஒரு அணை கட்ட முடிவெடுத்து இருக்கிறது. இதற்காக ரூ.126 கோடி ரூபாயையும் செலவு செய்யப் போகிறது.

பெரியாறு அணையில் தண்ணீர் வராமல் இருக்க கேரளம் கட்டும் இரண்டாவது அணை இது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இந்த அணையைக் கட்டத் தேவையான மணலை தமிழகத்திலிருந்து எடுத்துக் கொண்டு போகப் போகிறார்களாம். அதாவது, நம் மீது கல்லறை எழுப்ப நாமே செங்கற்களை அடுக்கி வைக்க வேண்டுமாம். எப்படி இருக்கிறது நியாயம்?

கேரளாவின் சில மாவட்டங்களில் வீடு கட்டத் தேவையான மணல் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்துதான் செல்கிறது. கேரள ஆறுகளில் மணல் குறைவு. அப்படியே இருந்தாலும் அதை அள்ளக்கூடாது என்று அரசாங்கம் உத்தரவு போட்டிருக்கிறது.

ஆனால், வீடு கட்ட மணல் தேவை என்றால் தமிழ்நாட்டிலிருந்து ஆற்று மணலை அள்ளிக் கொண்டு போய்விடுகிறார்கள். நம்மவர்களும் காசு கிடைத்தால் ஆற்று மணல் என்ன, ஆற்றையே எடுத்துக் கொண்டு போங்கள் என்கிற மாதிரித்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை நாம் இப்படிச் செய்தது போதும். இனிமேலும் காசுக்கு ஆசைப்பட்டு ஆற்று மணலை கேரளாவுக்குக் கொண்டு போக அனுமதிக்கக் கூடாது. `தமிழகத்திலிருந்து மணல் சப்ளை செய்யாவிட்டால் கேரளா புதிய அணை கட்டவே முடியாது' என்று பொதுப்பணித் துறையின் சிறப்புக் கண்காணிப்பாளர் (ஓய்வு) கோமதிநாயகம் மதுரையில் பேசி இருக்கிறார். (பார்க்க: 27.10.2008 தினமலர் நாளிதழ்)

பெரியாறு அணை விவகாரத்தில் முரண்டு பிடித்த கேரள அரசை வழிக்குக் கொண்டு வர தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கெனவே இது போன்ற ஒரு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியவர். தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு மணல் கொண்டு செல்வதை தமிழக அரசால் எளிதில் தடுக்க முடியும். தமிழக அரசாங்கம் இதை அவசியம் செய்ய வேண்டும். பெரியாறு அணை மீது அக்கறை கொண்ட அனைவரும் இது தொடர்பாக அரசை வற்புறுத்த வேண்டும்.

Monday, February 25, 2008

வழி காட்டும் ஈரோட்டு கிராமம்!

இன்றைய தினம் வெளியான இந்து நாளிதழில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. சிறிய செய்தி என்றாலும் மனத்துக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி செய்தி.

ஈரோட்டுக்குப் பக்கத்தில் உள்ள கொடுமுடியின் எல்லைக்குள் உள்ள ஒரு சிறிய கிராமம் எழுநூற்றிமங்கலம். இந்தக் கிராமத்தில் உள்ள விவசாயிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இனி நாங்கள் செயற்கை உரங்களை பயன்படுத்தவே மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தார்கள். எடுத்தபடி செய்தும் காட்டினார்கள். இன்று அந்தக் கிராமம் செயற்கை உரம் என்கிற அரக்கனிடமிருந்து விடுதலை பெற்றிருக்கிறது.

(செயற்கை) உரத்தை பயன்படுத்தவில்லை எனில் எப்படி பயிர்களைப் பாதுகாப்பார்கள்? இதனால் அவர்களுக்கு நஷ்டம் வராதா என்று நீங்கள் கேட்கலாம்.

நிச்சயமாக ஒரு நயா பைசா நஷ்டம் வராது. காரணம், அவர்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைக் (Integrated Pest Management) கையாள்கிறார்கள். அது என்ன பயிர் பாதுகாப்பு முறை?

சிம்பிள். இயற்கை பல நூறு பூச்சிகளை உருவாக்கி இருக்கிறது. இதில் நல்லவையும் உண்டு. கெட்டவையும் உண்டு. கச்சிதமாகக் கணக்கெடுத்தால் கெட்டவை விட நல்லவையே அதிகம். எனவே பயிர்களுக்கு வில்லன்களாக மாறும் கெட்ட பூச்சிகளை அழிக்க நல்ல பூச்சிகளே போதும். தனியாக உரம் ஏதும் பயன்படுத்த வேண்டியதில்லை. இது ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை.

இந்த உண்மையைத் தெரிந்த கொண்டதால்தான் நம் முன்னோர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளாக எந்த செயற்கையான பூச்சி மருந்தையும் பயன்படுத்தாமல் விவசாயம் செய்தார்கள்.

இன்று நாம் பூச்சிகளைக் கொல்ல செயற்கை உரத்தை பயன்படுத்துகிறோம். அது கெட்ட பூச்சிகளை அழிப்பதோடு நல்ல பூச்சிகளையும் அழித்துவிடுகிறது. இதனால் பயிர்களுக்குத் தேவையான பாதுகாப்பு இல்லாமல் போய்விடுகிறது. செலவுக்குச் செலவு, நஷ்டத்துக்கு நஷ்டம். நம் வயல்களில் செயற்கை உரத்தை பயன்படுத்துவது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு ஒப்பானதாகும்.

ஈரோட்டு விவசாயிகள் இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கின்றனர். இதனால் அவர்கள் ஒரு ஏக்கருக்கு ரூ.1500 மிச்சப்படுத்தப் போகிறார்களாம்.

தமிழ்நாட்டில் உள்ள அத்தனை விவசாயிகளும் இந்தப் பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும். செயற்கை உரங்களை விட்டு ஒழிக்க வேண்டும்.