Thursday, August 21, 2008

நாடாளுமன்றத் தேர்தல் - கூட்டணி எப்படி அமையும்?

நாடாளுமன்றத் தேர்தல் - கூட்டணி எப்படி அமையும்?
- ஒரு ’வெகுமுன்’ கணிப்பு

2009-ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் தேர்தல் ஆண்டு. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஐந்து ஆண்டு காலத்தை நிறைவு செய்து, மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்கப் போகிறது.

இப்போதுள்ள சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து தேர்தலை நடத்துவார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது. எனவே 2008-ஆம் ஆண்டுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்பது உறுதி.

2009-ஆம் ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தேர்தல் நடக்கலாம். மார்ச், ஏப்ரலில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு ஆரம்பித்துவிடும் என்பதால் மே மாதம்தான் தேர்தல் நடக்க அனைத்துக் கட்சிகளும் ஒப்புக் கொள்ளும் என்று நம்புவோமாக.

சரி, எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடக்கட்டும். அப்படி நடந்தால், தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட அரசியல் கூட்டணி ஏற்படும்?

இந்தக் கேள்விக்கான மிகச் சரியான பதிலை இப்போதே சொல்வது கொஞ்சம் கடினம் என்றாலும், இப்போதுள்ள சூழ்நிலை மனதில் வைத்துப் பார்க்கும் போது சில போக்குகள் தெளிவாகத் தென்படுவதை தினசரி ஒழுங்காக செய்தித்தாள் படிக்கிற யாரும் எளிதில் பார்க்க முடியும்.

எதிர்வரும் காலத்தில் எந்தெந்தக் கட்சி எந்தக் கூட்டணியில் இடம் பெறும் என்று கணிப்பது நூற்றுக்கு நூறு சதவிகிதம் சாத்தியமில்லை என்றாலும், எந்தக் கட்சி எந்தக் கட்சியோடு கூட்டணி அமைப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து பார்க்கலாம்.

நாடாளுமன்றத் தேர்தல் ஆனாலும் சரி, சட்டமன்றத் தேர்தல் ஆனாலும் சரி, தமிழகத்தைப் பொருத்த வரை இரண்டே இரண்டு கட்சிகள் தலைமை ஏற்று அணி வகுத்து நிற்கும். அவற்றில் ஒன்று, தி.மு.க. இன்னொன்று அ.தி.மு.க.

தேசியக் கட்சியோ, மாநிலக் கட்சியோ, சின்னக் கட்சியோ, பெரிய கட்சியோ இந்த இரண்டு கட்சிகளுடன் சேர்ந்து கொண்டுதான் கூட்டு அமைக்கும். இந்த இரண்டு கட்சிகளுடன் சேராமல் தனியாகப் போட்டு தர்மஅடி வாங்கும் கட்சிகளும் உண்டு. (சமீபத்தில் இதற்கு ஒரே விதிவிலக்காக இருந்தவர் விஜய்காந்த் மட்டுமே!)

இன்றைய தேதியில் தி.மு.க.வும், காங்கிரஸும் பிரிக்க முடியாதபடிக்கு கை கோர்த்துக் கொண்டு நிற்கின்றன. தேசிய அளவில் பா.ஜ.க.வை விட காங்கிரசையே அதிகம் விரும்புகிறது தி.மு.க. காரணம், தி.மு.க.வின் எந்தக் கோரிக்கையையும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் இதுவரை வெளிப்படையாக நிராகரித்ததில்லை. சேது சமுத்திர திட்டத்தில் மட்டும் காங்கிரஸுக்கும் தி.மு.க.வுக்கு சிறு பிணக்கு ஏற்பட்டாலும் அதற்காக தி.மு.க. போராடுவதற்கு காங்கிரஸ் தடை விதிக்கவில்லை. எனவே, காங்கிரஸிடம் கிடைக்காத எதுவும் பா.ஜ.க.விடம் கிடைத்துவிடாது என்பதால் கூட்டணியில் மாற்றம் எதையும் தி.மு.க. கொண்டு வராது என்றே தோன்றுகிறது.

காங்கிரஸைப் பொருத்த வரை இந்தத் தேர்தலை வாழ்வா, சாவா என்றுதான் பார்க்கிறது. ஐந்து ஆண்டுகள் ஆண்டாகிவிட்டது. மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி கொண்டு வந்தாகிவிட்டது. விவசாயிகளுக்கு வரலாறு காணாத கடன் தள்ளுபடி, மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்று எவ்வளவோ செய்தாலும் கடைசி நேரத்தில், கச்சா எண்ணெய் விலை ஏகத்துக்கு எகிறி, பணவீக்கம் என்கிற பிரச்னை வந்து காங்கிரஸின் கனவில் புளியைக் கரைத்துவிட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வால் சாமானிய இந்தியனும் பாதிக்கப்பட்டிருக்கிறான். இந்த நிலையில் அவன் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடுவானா என்கிற சந்தேகம் அத்தனை காங்கிரஸ்காரர்களுக்கும் இருக்கும். எனவே எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்றுதான் காங்கிரஸ் துடித்துக் கொண்டிருக்கிறதே ஒழிய, தமிழகத்தில் கூட்டணியை மாற்றி அமைக்கும் யோசனை அதற்கு இல்லவே இல்லை.

அப்போதைக்கப்போது காமராஜர் ஆட்சி என்று தமிழ்நாட்டு காங்கிரஸ்காரர்கள் பேசினாலும், அது ஒரு கொள்கை முடிவுதான் என்பதை தெள்ளத் தெளிவாக அறிவித்துவிட்டார் தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தங்கபாலு. கொள்கையின் படிதான் அரசியல் கட்சிகள் நடந்து கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை என்பதை அவர் வெளிப்படையாக உணர்த்திவிட்டார். தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு எல்லாம் என்றெல்லாம் பேச, இப்போதைக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்குக் கூட அனுமதி கிடையாது.

தவிர, அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைப்பதில் காங்கிரஸுக்குப் பல சங்கடங்கள். முதலில் அதற்கு அம்மாவும், அன்னையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. தவிர, காங்கிரஸ் கட்சியின் முக்கிய திட்டமான அணு ஒப்பந்தத்துக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தவர் அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா. எனவே, காங்கிரஸ் - அ.தி.மு.க. கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை.

தி.மு.க.வுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அந்தக் கட்சியோடு இருந்த உறவை அறுத்துக் கொண்ட பா.ம.க., எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படிப்பட்ட முடிவை எடுக்கும் என்று யாரும் உறுதியாகச் சொல்ல முடியாது. அதிக சீட்டு, பா.ம.க.வின் எதிர்காலம், அமைச்சர் பதவி என பல விஷயங்களை மனதில் கொண்டே அந்தக் கட்சி ஒரு முடிவெடுக்கும்.

இப்போதுள்ள சூழ்நிலையில், தி.மு.க.வோடு கூட்டு என்றில்லாமல் காங்கிரஸுடன் கூட்டு என்று சொல்லிக் கொண்டு, ஏற்கெனவே இருந்தது மாதிரி இருந்துவிட பா.ம.க.வுக்கு ஒரு வாய்ப்புண்டு. தி.மு.க. தரப்பிலிருந்து இதற்கு பெரிய எதிர்ப்பு எதுவும் இருக்காது என்றே தோன்றுகிறது. காரணம், தி.மு.க.வுடன் மோதல் ஏற்பட்ட பிறகும் மத்திய அமைச்சரவையில் இன்னும் அன்புமணி அமைச்சராக இருக்கத்தான் செய்கிறார். அவரை நீக்க வேண்டும் என்று தி.மு.க. கோரிக்கை வைக்கவே இல்லை. தவிர, பா.ம.க. - அ.தி.மு.க. கூட்டணி வரும் பட்சத்தில் அதனால் தி.மு.க.வுக்குத்தான் பெரிய இழப்பு ஏற்படும். இது தி.மு.க.வுக்கு நன்றாகவே தெரியும்.

தி.மு.க.வுடன் மோதல் ஏற்பட்ட பிறகும் தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க.வுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் பட்சத்தில் தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று சொல்லி இருக்கிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். அப்படி ஒரு விஷயம் நடப்பதற்கு எந்த வாய்ப்புமே இல்லாத இந்த நேரத்தில், அவரே இப்படி ஒரு கருத்தை வெளியிடுவதன் காரணம், தி.மு.க. - பா.ம.க. உறவு இன்னும் முழுவதுமாக அறுந்துவிடவில்லை என்பதை சொல்லாமல் சொல்லத்தான்.

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் இப்போது இருக்கும் திருமாவளவனும் தொடர்ந்து அதில் இருக்கவே வாய்ப்பு அதிகம்.

காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. இடம் பெறாத பட்சத்தில், விஜய்காந்த் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புண்டு. காரணம், அந்தக் கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ் என்கிற இரண்டு பெரிய கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. மூன்றவதாக ஒரு பலம் பொருந்திய அமைப்பு வேண்டும் என்பதால் விஜயகாந்தைக் கூட்டணியில் சேர்த்துக் கொள்வதில் தி.மு.க. உள்பட யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். அணு ஒப்பந்தம் உள்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்துக் கொள்கைகளையும் வெளிப்படையாக ஆதரிப்பவர் விஜயகாந்த் என்பதால், காங்கிரஸும் அவரை எளிதாகவே ஏற்றுக் கொள்ளும்.

சரி, தி.மு.க.வோடு கூட்டு சேர விஜயகாந்த் தயாராக இருப்பாரா? ஏன் மாட்டார், நடக்கப் போவது நாடாளுமன்றத் தேர்தல். மத்திய அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஆதரித்துத்தான் விஜயகாந்த் ஓட்டு கேட்கப் போகிறாரே ஒழிய, தமிழக அரசாங்கத்து ஆதரவாக அல்ல. நாங்கள் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறோம். காங்கிரஸோடு தி.மு.க. கூட்டு வைத்திருக்கிறது என்று சொல்லி சமாளிக்க விஜயகாந்துக்கு நிறையவே வாய்ப்புண்டு.

ஆக, ஒரு அணியில் தி.மு.க., காங்கிரஸ் நிச்சயம் இருக்கும். விஜய்காந்த் அல்லது பா.ம.க. இருவரில் ஒருவர் இருக்கலாம். அவ்வளவுதான்.

சரி, அடுத்த அணி , அதி.மு.க. தலையிலான அணி. இந்த அணியில் எந்தெந்தக் கட்சிகள் இடம் பெறலாம் என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

No comments: