Wednesday, August 27, 2008

அந்தநாள் ஞாபகம்... முதன் முதலாக எங்கள் வீட்டுக்கு டிவி வந்தபோது!

முதன் முதலாக நம் வீட்டுக்கு டிவி வந்ததை நம்மில் பலரும் மறக்க முடியாது. உங்களுக்கும் அந்த நினைவுகள் பசுமையாகவே இருக்கும். என் நினைவுகளை நான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். (நண்பர் முத்துகுமாரின் டிவி அனுபவங்களைப் படிக்க இங்கே சொடுக்கவும்.)


பள்ளிக்கூடம், பரிட்சை என்று படாதபாடு பட்டுக் கொண்டிருந்த காலம் அது.

அரும்பு மீசை முளைக்கும் வயதிலேயே அரசியல் ஜுரமும் பற்றிக் கொண்டது. எமர்ஜென்ஸி முடிவுக்குக் கொண்டு மூன்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இல்லாத காமெடிகளை எல்லாம் நடத்தி முடித்தி ருந்தார்கள் ஜனதா கட்சியினர்.

அடுத்து அம்மா இந்திராவின் ஆட்சிதான் என்கிற அரசியல் வெறியில் திளைத்துக் கொண்டிருந்தது என் குடும்பம். எனவே நாட்டு நடப்புகள் காதில் வந்து விழுந்து கொண்டே இருந்தன.

அன்றைய தேதியில் நாட்டு நடப்புகளுக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் காலையில் தினத்தந்தி, அதைவிட்டால் ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி. அதற்கடுத்து, இது இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம். செய்திகள் வாசிப்பது .........

தினத்தந்தியும் இலங்கை வானொலி நிலையத்தின் பாடல்களையும் கேட்காமல் எந்த தெற்கத்தித் தமிழனும் வளர்ந்திருக்கவே முடியாது அந்தக் காலத்தில். (ஜெண்டில்மேன்களே, இவன் அந்தக் காலம் என்கிறானே, அப்போது இவனுக்கு என்ன வயதிருக்கும், இப்போது என்ன வயதிருக்கும் என்கிற விவகாரமான சிந்தனை எல்லாம் வேணாம், சொல்லிப்புட்டேன்.)

1981-ஆம் ஆண்டு வாக்கில் மதுரையில் மொட்டை மாடிகளில் நீள நீளமாக கம்பிகள் முளைக்க ஆரம்பித்தன. காக்கைகளும் குருவிகளும் இதில் உட்கார அனுமதி இல்லை. அப்படி என்னடா இந்தக் கம்பி என்று விசாரித்ததில் அதுதான் டிவி ஆண்டனா என்றார்கள். பெரும் பணக்காரர்கள் தங்கள் பகட்டை பறை சாற்றிக் கொள்ள டிவி ஆண்டனாவை மொட்டை மாடிகளில் கொடியாக ஏற்றியிருந்தார்கள். உள்ளே டிவி இருந்ததா, இல்லையா என்று
யாருக்குத் தெரியும்?

சில மாதங்களில் மதுரை தெற்கு மாசி வீதி, வடக்கு மாசி வீதி ஷோரூம்களில் டிவிக்களை வைத்தனர். என் அப்பா அப்பப்ப என்னை டவுனுக்கு அழைத்துச் செல்வார். மேற்படி வீதிகளில் நடந்து செல்லும் போது ஷோரூம்களில் டிவிக்களை பார்த்து விட்டால் நான் அப்படியே நின்றுவிடுவேன். இப்போது
ஷோரூம் டிவிகளில் ஓசியாக கிரிக்கெட் பார்க்கும் கலாச்சாரத்தை உலகில் முதன் முதலாகத் தொடங்கி வைத்தது நானாகத்தான் இருக்க வேண்டும்.

என் அப்பாவும் எனக்காக சில நிமிடங்கள் பொறுமையாக நிற்பார். பிறகு, து ஏடு இப்பி ரா, மீ மொதுரளி கேர் ஜீ சவ்ல தீடி அவ்டுஸ் (நீ இங்கேயே நில், நெய்த சேலைகளை முதலாளி வீட்டில் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன்) என்று சொல்லி விட்டுக் கிளம்பிவிடுவார்.

இப்படி ஒரு முறை என்னை விட்டு விட்டுப் போனார். ஒரு மணி நேரம் ஆச்சு. இரண்டு மணி நேரம் ஆச்சு. அவர் திரும்ப வரவில்லை. ஷோரூமை மூடிவிட்டு, கடைக்காரர்கள் போய்விட்டார்கள். நான் எங்கே போவது, எப்படிப் போவது என்று தெரியாமல் கடை முன்னால் நின்று கொண்டிருந்தேன். அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

என் பயத்தை எக்ஸ்பிரஸ் வேகத்தில் அதிகரிக்கிற மாதிரி, ஒரு போலீஸ்காரர் என்னைப் பிடித்துவிட்டார். அவர் கேட்ட அதட்டலான கேள்விகளால் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஒன்றுக்கு, இரண்டுக்கோடு மூன்றுக்கும் சேர்ந்து வந்துவிடும் போலிருந்தது. கடவுளே வந்த மாதிரி சைக்கிள் ரிக்‌ஷாவில் வந்து இறங்கினார் அப்பா. ”மொதுரளி பராட் ஜேடி ஒதெஸ்பா. தெனு அவி கூலி தேத்தவேள இக்ககெடி ஹொய்ய (“முதலாளி வெளியில போயிட்டார்ப்பா. காத்திருந்து அவர்கிட்ட கூலி வாங்கிட்டு வர்றதுக்குள்ள நாழியாயிட்டுச்சு”) என்று சொல்லி, கடைசி பஸ்ஸில் கடைசிப் படிக்கட்டில் என்னை ஏற்றிவிட்டு அவரும் தொங்கிக் கொண்டு வந்தார்.

இத்தனைக்கும் அந்த நேரத்தில் அந்த டிவியில் தெரிந்தது இலங்கை டிவியின் ரூபவாஹிணி நிகழ்ச்சிகள்தான். இழவு, அதில் தமிழ் சுத்தமாக இருக்காது. ஐரோப்பிய நாட்டில் தயாரான நிகழ்ச்சிகளையே அதிகம் காட்டிக் கொண்டு இருப்பார்கள். ஆனால், அதைப் பார்க்கவே எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

இந்த நேரத்தில்தான் தினத்தந்தியில் ஒரு செய்தி. கொடைக்கான லில் புதிதாக ஒரு டிவி கோபுரத்தை அமைப்பதாகவும் சென்னை யிலிருந்து ஒளிபரப்பாகும் அத்தனை நிகழ்ச்சிகளும் அந்தக் கோபுரம் வழியாக தென் மாவட்டங்கள் முழுக்க ஒளிபரப்பாகும் என்றார்கள்.

இந்த செய்தியைப் படித்த மக்கள் சந்தோஷத்தில் கூத்தாட ஆரம்பித்தனர். இனி தினமும் சினிமாச் செலவு மிச்சம். லட்சுமி தியேட்டர்காரனுக்கு இந்த செய்தி மிகுந்த எரிச்சலைத் தந்தது. ‘நாய்ப்பளுக, பெரிய ஆஸ்பத்திரியை ஒழுங்கா நடத்த இந்த நாய்ங்களுக்கு துப்பில்ல. டிவி காட்றானாம் டிவி’ என்று பொரிந்து தள்ள ஆரம்பித்தார். ஆனால், தியேட்டர்காரனின் வீட்டில் மட்டும் 12 அடி ஆண்டனா காற்றில் அழகாக ஆடிக் கொண்டிருந்தது.

ஒளிபரப்பு ஆரம்பமான சில மாதங்களில் எங்கள் வீட்டில் ஒரு சிறிய கறுப்பு வெள்ளை டிவி பெட்டியைக் கொண்டு வந்துவிட்டார் அப்பா. கெல்ட்ரான் கம்பெனி, கணீரென்று கிருஷ்ணா... முகுந்தா பாடியது. அப்பா, பாகவதரின் பரமரசிகர். ரேடியோவில் பாகவரின் பாடல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டால், நெசவடிப்பதை நிறுத்தி விட்டு பாட்டைக் கேட்க ஆரம்பித்துவிடுவார். (இப்போதும் அப்பாவின் ஞாபகம் எனக்கு வரும்போது பாகவதரின் பாடல்களைத்தான் நான் கேட்பேன்)

எங்கள் காலனியில் முதன் முதலில் டிவி வாங்கியது என் வீட்டில் தான். நாலு தறியை மிதித்து வாழும் ஏழைக் குடும்பம் எங்களுடை யது. மற்றவர்கள் நிலைமை இன்னும் கொடுமை. எனவே, முக்கியமான விஷயம் ஏதாவது வேண்டுமெனில் எங்கள் வீட்டைத் தட்ட யாரும் கூச்சப்பட மாட்டார்கள். எங்கள் வீட்டில் ஒரு ஏணி இருந்தது. ஒரு அகலம், 11 அடி நீளம். என் வீட்டைச் சுற்றி இருந்த நூற்றுக்கணக்கான வீடுகளுக்கும் அந்த ஏணி பயன்பட்டது. கல்யாண வீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்க, மராமத்து செய்ய, இழவு வீட்டுக்கு கொட்டைகை போட என அந்த ஏணி ஏறக்குறைய ஒரு மனிதப்பிறவி
போல இருந்து பல நல்ல கெட்ட விஷயங்களைப் பார்த்திருக்கிறது.

முதல் நாள் தொடங்கி, யார் டிவி பார்க்க வந்தாலும் உடனடியாக அனுமதிப்பார் என் அப்பா. இதனால் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியின் போதும், ஞாயிற்றுக்கிழமை சினிமா படத்தையும் பார்க்க 4 மணி தொடங்கி மக்கள் துண்டு போட்டு இடத்தைப் பிடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

என் குடும்பத்தினர் அனைவரும் சிவாஜி வெறியர்கள். எனவே சிவாஜி படம் என்றால் அன்றைக்குப் படம் பார்க்க வருகிறவர்களுக்கு சுக்கு காப்பி கொடுக்க ஏற்பாடு செய்துவிடுவார் என் அண்ணன். கூடவே கொஞ்சம் காரபூந்தியையும் கொடுப்பார். ஒசிப்படம், காப்பி, காரபூந்தி சமாச்சாரங்கள் அதிக மக்களை என் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தது. எனவே, 20 உட்காரக்கூடிய அறையிலி ருந்து (உண்மையில் அங்கே 10 பேர்தான் உட்கார முடியும்) பெரிய ஹாலுக்கு டிவியைக் கொண்டு வந்து வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால் எம்ஜிஆர் படமென்றால் என் குடும்பத்தார் டிவி பக்கமே வரமாட்டார்கள். அன்று ரேடியோ அலறும். எப்போதையும்விட வேகமாகத் தறி அடிப்பார்கள். டிவி நிலையம் ஒழிக என்று சிவானந்த சாலைக்குக் கடிதம் எழுதிப் போடுவார்கள்.

நாம் டிவி பார்க்கவில்லை என்றாலும் விரும்புகிறவர்கள் பார்க்கட் டும் என்று என் அப்பா டிவியைப் போட்டுவிடுவார். சில எம்ஜிஆர் ரசிகர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து படம் பார்ப்பார்கள். சிலருக்கு சுயமரியாதை உதைக்கும்.

‘அந்த வீட்ல அம்புட்டுப் பேரும் தொந்தியோட ரசிகருங்கெ. வாத்தியாரை சொட்டத் தலையன்னுதான் சொல்லுவாங்கெ. செத்தாலும் நான் அந்த வீட்டுக்குப் போயி தலைவரோட பணத்தை பார்க்க மாட்டேன்’ என்று கரித்துக் கொட்டுவார்கள்.

நான் பள்ளிக்கூடத்தை முடித்து விட்டு கல்லூரிக்குள் நுழைந்திருந்த சமயம். அடிக்கடி கல்லூரி விடுமுறை விட்டு விடுவார்கள். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அடிக்கடி மூத்த மாணவர்கள் கல்லூரிப் புறக்கணிப்பை நிகழ்த்துவார்கள். இந்த நேரத்தில் பலருக்கும் கிரிக்கெட் போதை மெல்ல மெல்ல ஏற ஆரம்பித்திருந்தது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காகவே பலரும் டிவி வாங்கினார்கள்.

என் வீட்டில் விளையாட்டு என்றாலே முகம் சுளிப்பார்கள். நல்ல வேளையாக நான் படித்த கல்லூரியில் ஒரு கலர் டிவி இருந்ததால் நான் அங்கேயே கிரிக்கெட் பார்த்து விடுவேன்.

102 டிகிரி காய்ச்சலில் கவாஸ்கர் 100 ரன் எடுத்தது, அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்த கபில், கொஞ்சம்கூட அலட்டாமல் பக்கத்தில் பரிதாபமாக நின்று கொண்டிருக்கும் கென்யா நாட்டு பேட்ஸ்மேனின் கழுத்தில் கையைப் போட்டு என்ன, ரொம்ப படுத்துறேனா என்று விசாரித்ததையும் மறக்க முடியாத காட்சிகள்.

தேர்தல் வந்துவிட்டால் என் வீட்டு டிவி பொதுச் சொத்தாகிவிடும். தூர்தர்ஷனில் தேர்தல் முடிவுகள் இரண்டு, மூன்று நாட்களுக்கு என விடிய விடிய வரும். குடியிருப்பின் விளையாட்டு மைதானத்தில் ஒரு பந்தலைப் போட்டு எங்கள் வீட்டு டிவியைக் கொண்டு போய் வைத்துவிடுவார்கள்.

காங்கிரஸ் கட்சி ஜெயிச்சாச்சு என்கிற தகவல் வந்தவுடன் வெடி வெடித்துக் கொண்டாடுவார்கள். இதில் வெடி நிகழ்ச்சியில் முக்கியமான பங்கு என் குடும்பத்தினருக்கு உண்டு. சாலையின் நாலு மூலையில் வெடி வெடிப்பதல்ல நோக்கம். எதிர்க்கட்சிக் காரர்களின் வீட்டைத் தேடிப் போய் அவர்களின் வீட்டு வாசலுக்கு முன்பு ஆயிரம் வாலாவை வைப்பார்கள். சிலர் கதவை சாத்திக் கொள்வார்கள். சிலர் சண்டைக்கு வருவார்கள்.

வெற்றி உச்சத்தில் ஒருமுறை எல்லோரும் வெடி வெடிக்கச் சென்று விட, எங்கள் வீட்டு டிவியை அப்படியே போட்டு விட்டுப் போய் விட்டார்கள். என் வீட்டின் மீது ஏண்டா நாயே வெடி வெடிச்சே என்று எதிர்க்கட்சிக்காரர் ஆக்ரோஷமாகசண்டை நடந்து கொண்டிருந்த சமயத்தில் யாரோ ஒருவன் சாமர்த்திய மாக என் வீட்டு டிவியை அடித்து நொறுக்கிவிட்டான். தகவல் தெரிந்ததும் ஆடிப் போய்விட்டார் அப்பா. ’எவனோ ஜெயிக்கப் போறான். அதுக்காக நாம இப்பிடி அடிச்சுக்கணுமா?’ என்கிற முதிர்ச்சி அவரிடம் வர ஆரம்பித்திருந்தது.

பதிலாக என்னிடம் வெறி கூடியிருந்தது. ஜனநாயக வாலிபர் சங்க தொடர்புகள் எனக்கு ஏற்பட்டிருந்தன. ரஷ்ய இலக்கியம், சுத்த இலக்கியம், கவிதைத் தொகுப்புகள், பிரெஞ்சு, ஜெர்மன் சினிமாக்கள் என மாறிக் கொண்டிருந்தேன் நான்.

டிவியில் வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பாகும் சப்டைட்டில் படத்தை சுத்துப்பட்டில் நான் மட்டுமே முழித்திருந்து பார்ப்பேன்.

ஞாயிற்றுக்கிழமை ராமாயணத்தைப் போடுவார்கள். எனக்கு வெறுப்பாக இருக்கும். பிஜேபி கட்சி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருந்ததற்கு ஒரு அறிகுறிதான் ராமாயணம் தொடர். அந்த நிகழ்ச்சி மட்டும் வராமல் போயிருந்தால் அயோத்தியில் பாபர் மசூதியை உடைக்க நாகர்கோவிலில் இருந்தெல்லாம் மக்கள் போயிருக்க மாட்டார்கள் என்று தோழர்கள் சொன்னது எனக்கு சரியாகவே பட்டது.ராமாயணத்துக்கு அடுத்த வந்த சாப்ளின் படங்களே எனக்குப் பிடித்ததாக இருந்தன.

அடுத்து, ஒன்றிரண்டு ஆண்டுகள்தான். டிவியை மறந்து தோழர்களுடன் முழுமையாக ஐக்கியமாகிவிட்டேன். புத்தகம் படிப்பதே பிரதானமானது. டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது முட்டாள்தனமாகப்பட்டது.

வெகுஜன வாழ்விலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகி விலகி, சென்னைக்கு வந்துவிட்டேன். நான் திரும்ப மதுரைக்கு செல்லும் போது தூர்தர்ஷன் இல்லை. எல்லோர் வீட்டிலும் சன் டிவி ஓடிக் கொண்டிருந்தது. காலை, மாலை, இரவு என எல்லா நேரத்திலும் பாட்டு, சினிமா படம். டிவி பார்ப்பதை முற்றிலுமாக ஒதுக்க ஆரம்பித்துவிட்டேன்.

இப்போது நான் விரும்பிப் பார்க்கும் சேனல்கள் மக்கள் தொலைக்காட்சி, ஏசியாநெட், டிவி5 சேனல்கள்தான். பாவம், தூர்தர்ஷன்...? பொதிகையில் செய்திகளை பார்ப்பதோடு சரி.

No comments: