Saturday, March 22, 2008

ஜி.எம். கத்திரிக்காய் - தகவல்களை சொன்னாக் கொறஞ்சு போயிடுவீங்களோ!

இந்தியா என்றாலே வெளிநாட்டு கம்பெனிகளுக்கு கிள்ளுக்கீரையாகப் போய்விட்டது.

அதிலும் விவசாயிகள் என்றால் பிரச்னையே இல்லை. இந்தியா என்கிற மெகா விவசாயப் பண்ணையில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்கிற நினைப்பே பல வெளிநாட்டு கம்பெனிகளுக்கும் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் ஆகியிருக்கிற ஒரு வழக்கின் மூலம் வெளிநாட்டு கம்பெனிகளின் இந்த மனப்போக்கு தெள்ளத் தெளிவாக நமக்குத் தெரிகிறது.

வழக்கின் விபரத்தை முதலில் பார்ப்போம்.

மகாராஷ்ட்ரா ஹைபிரீட் சீட்ஸ் கம்பெனி லிமிடெட் என்பது மரபணு மாற்றப்பட்ட (Genetically modified) விதைகளைத் தயாரிக்கும் கம்பெனி. அகில உலக ஜி.எம். விதை புகழ் மான்சாண்ட்டோ நிறுவனத்தின் இந்தியக் கூட்டாளி நிறுவனம் இது.

இந்த மகாராஷ்ட்ரா கம்பெனி உருவாக்கிய புதிய ஜி.எம். கத்திரிக்காய் விரைவில் இந்திய விவசாயிகளுக்கு விற்கப்படும் என்று செய்தி வெளியானது.

இந்த ஜி.எம். கத்திரிக்காயின் ஆதி அந்தம் பற்றிய தகவல்கள் எங்களுக்கு வேண்டும் என்று இந்திய உயிரிதொழில்நுட்பத் துறையிடம் மிக்க பணிவன்போடு விண்ணப்பம் செய்தது கிரின்பீஸ் என்கிற அமைப்பு.

(உலக அளவில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வுக்காகப் பாடுபட்டு வரும் அமைப்பு கிரின்பீஸ்.)

அரசு இலாகா என்றால் சாதாரணமா, அரசரைவிட அதிக விசுவாசம் காட்டுகிறவர்கள் ஆச்சே! கிரின்பீஸ் கேட்ட தகவல்களைக் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டது.

இந்தத் தகவல்களை வெளியே சொன்னால் இதில் இருக்கிற வியாபார ரகசியம் அம்பலமாகிவிடும். இதனால் எதிரிகள் சுதாரித்துவிடுவார்கள். மேற்படி மகாராஷ்ட்ரா கம்பெனிக்கு பெரிய நஷ்டம் வரும். பாவம் என்று உச்சு கொட்டியது அரசு இலாகா.

இந்தத் தகவல்கள் முக்கியமானவை. எங்களுக்கு அவசியம் வேண்டும். எனவே நீங்களாவது எங்களுக்கு வாங்கித் தாருங்கள் என்று மத்திய தகவல் ஆணையத்தின் உதவியை நாடியது கிரீன்பீஸ்.

மத்திய தகவல் ஆணையம் அரசு இலாகா இல்லை. எனவே, கிரின்பீஸ் கேட்கும் தகவல்களைக் கொடுக்கும்படி நேர்மையாக உத்தரவிட்டது.

இந்த உத்தரவால் மூக்கு வேர்த்துப் போன மகாராஷ்ட்ரா நிறுவனம் இப்போது டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு ஓடி வந்திருக்கிறது. இந்த மாதிரியான தகவல்களைக் கேட்பதெல்லாம் அபாண்டம். நீங்கள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்திருக்கிறது.

இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் இப்போது விசாரித்து வருவது ஒரு பக்கம் இருக்கட்டும். இதில் உள்ள நியாய, அநியாயங்களை நாம் கொஞ்சம் அலசிப் பார்ப்போம்.

புதிதாக ஒரு பொருளை சந்தைக்குக் கொண்டு வரும் போது அந்தப் பொருள் பற்றி சில கேள்விகளைக் கேட்டால் பதிலே சொல்ல மாட்டேன் என்றால் அது எந்த விதத்தில் நியாயம்?


கடைக்குப் போகிறோம். புதிதாக வந்த ஒரு பொருளை வாங்குகிறோம். நல்ல பொருள் சார், பாஸ்ட் மூவிங் என்று கடைக்காரர் சொன்னவுடன் நாம் வாங்கிவிடுவதில்லை. அந்தப் பொருளில் என்ன விஷயங்கள் கலந்திருக்கிறது என்பதைத் துருவித் துருவிப் பார்க்கிறோம்.

இப்படிச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. காசு கொடுத்து வாங்குபவர் என்கிற முறையில் நமக்கு இருக்கும் உரிமை இது.

ஆனால்,இந்த உரிமையை அங்கிகரிக்க மறுக்கின்றன வெளிநாட்டு கம்பெனிகள்.

சரி, போய்த் தொலையட்டும். நாளைக்கே நாம் அமெரிக்காவுக்கோ அல்லது ஐரோப்பாவுக்கோ போகிறோம். அற்புதமான சுவை கொண்ட ஒரு பானத்தை அங்கே விற்பனை செய்ய ஆரம்பிக்கிறோம். ஒகே, வித்துட்டு போ என்று கதவைத் திறந்து விட்டுவிடுவார்களா?

என்ன பானம்? எப்படித் தயாரித்தீர்கள்? மூலப் பொருட்கள் என்னென்ன? இதனால் என்ன நன்மை கிடைக்கும்? இதைக் குடித்தால் தீமையே ஏற்படாது என்று எப்படிச் சொல்கிறீர்கள்? அப்படி ஏதாவது தீமை ஏற்பட்டால் பொறுப்பேற்றுக் கொள்வீர்களா?

இப்படி ஆயிரத்தெட்டு கேள்விகளைக் கேட்டு நம்மைக் குடைவார்கள் இல்லையா?

நிச்சயம் குடைவார்கள். மக்கள் மீது அக்கறை கொண்ட எந்த அரசாங்கமும் இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டுக் குடைவதில் எந்தத் தவறும் இல்லை.

நம் அரசு இலாகாகளும் மேற்படி கம்பெனிகளை இந்த மாதிரி கேள்வி கேட்டு குடைந்திருக்கலாம்.அப்படி எல்லாம் செய்திருக்கவே மாட்டார்கள் என்று சொல்ல வரவே இல்லை.

அப்படிக் குடைந்த போது சம்பந்தப்பட்ட கம்பெனி அளித்த தகவல்களை நம் மக்களில் யாராவது கேட்டால் அவர்களுக்குக் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?

இத்தனைக்கும் கிரின்பீஸ் நிறுவனம் வர்த்தக நிறுவனம் அல்ல. தகவல்களை வாங்கிக் கொண்டு ஜி.எம். கத்திரிக்காய் விதைகளை அவர்களே உற்பத்தி செய்து விற்க ஆரம்பித்துவிட மாட்டார்கள்.

அல்லது, அந்தத் தகவல்களை வேறு எந்த நிறுவனத்துக்கும் கொடுக்க மாட்டார்கள். காரணம், அவர்களுக்கே ஜி.எம். விதை உற்பத்தியில் ஒப்புதல் இல்லை என்கிற போது அதை ஏன் அவர்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கப் போகிறார்கள்?

இதெல்லாம் குறைந்தபட்ச வாக்குறுதிகளாக இருக்கும்போது கிரின்பீஸ் நிறுவனத்தின் மீது ஏன் தேவையில்லாமல் சந்தேகப்பட வேண்டும்?

இத்தனைக்கும் மான்சாண்ட்டோ கம்பெனி குறித்து கிரீன்பீஸ் நிறுவனத்துக்கு கசப்பான அனுபவம் ஒன்றுண்டு.

சில ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சில் மான்சாண்ட்டோ நிறுவனம் ஒரு ஜி.எம். விதையை வெளியிட்டது. இந்த விதை பற்றிய தகவல்களை போராடி வாங்கியது கிரின்பீஸ் நிறுவனம். மான்சாண்ட்டோ சொல்கிறபடிதான் அந்த விதை இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்து பார்த்ததில், நேருக்கு மாறான பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிப்பட்டன.

இந்தியாவில் இப்போது அறிமுகமாகிற ஜி.எம். கத்திரிக்காயிலும் இந்த மாதிரி குளறுபடிகள் நடந்துவிடக் கூடாது என்பதுதான் கிரின்பீஸ் அமைப்பின் அக்கறை.

மகாராஷ்ட்ரா கம்பெனி பயப்படுவதை பார்த்தால் மீண்டும் மாட்டிக் கொள்வோமோ என்கிற பயம்தான் அப்பட்டமாகத் தெரிகிறது.

அய்யா வெளிநாட்டுக் கம்பெனிமார்களே, இந்திய மாறிடுச்சுங்கய்யா. இது யூனியன் கார்பைட் காலம் இல்லைங்கய்யா. இதைக் கொஞ்சம் மண்டையில ஏத்திக்கங்கய்யா!

Wednesday, March 19, 2008

தமிழனுக்கு எதிராக மீண்டும் கிளம்பும் கர்நாடக பூதம்!

இத்தனை நாளும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிக் கொண்டிருந்த கர்நாடக அரசியல்வாதிகள், இப்போது ஒரு லாரி நிறைய ஆசிட்டைக் கொண்டு வந்து தமிழ் நாட்டு மக்களின் தலையில் கொட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.


தர்மபுரி கூட்டுக் குடிநீர் திட்டத்தைத் தான் குறிப்பிடுகிறோம்.


தர்மபுரி கூட்டுக் குடிநீர் திட்டம் முறையற்றது. இந்தத் திட்டத்தின் மூலம் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை மத்திய அரசுக்கு வெள்ளை அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் - முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கிருஷ்ணாவின் கோரிக்கை இது.


இந்தத் திட்டத்துக்காகத் தண்ணீர் எடுக்கப்படும் இடம் எங்கள் எல்லையில் இருக்கிறது. எங்கள் எல்லையில் எங்களைக் கேட்காமல் தமிழகம் எப்படித் தண்ணீர் எடுக்க முடியும் - தேச ஒற்றுமைக்காகவே(?!) பாடுபட்டு வரும் கர்நாடக பா.ஜ.க. எட்டியூரப்பாவின் கருணை மிக்க கோரிக்கை இது.

வாட்டாள் நாகராஜிலிருந்து பலரும் இதே ரீதியில் ஆளாளுக்குக் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள் கர்நாடகாவில்.


சிலரால் சில பிரச்னைகளை விட்டால் அரசியல் நடத்தவே முடியாது. அமெரிக்காவுக்கு ஈராக் மாதிரி, பாகிஸ்தானுக்கு காஷ்மீர் மாதிரி, பா.ஜ.க.வுக்கு அயோத்தி ராமர் கோயில் மாதிரி,
கேரளாவுக்கு முல்லைப் பெரியார் மாதிரி, கர்நாடகாவுக்கு காவிரிப் பிரச்னை.


காவிரி பற்றி பேசாமல் கர்நாடகாவில் அரசியல் காசு பார்க்க முடியாது என்பதை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் அந்த ஊர் அரசியல்வாதிகள்.


தமிழ்நாட்டில் நீங்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராகவும் இருந்துவிட்டுப் போங்கள். ஆனால், உங்கள் விருப்பு வெறுப்பைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துப் பாருங்கள். இந்தத் திட்டம் எவ்வளவு நியாயமானது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வீர்கள்.

கர்நாடகாவிலிருந்து வரும் காவிரி தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்துக்குள் இருக்கும் ஒகனேக்க்ல் என்கிற இடத்தில் உள்ளே நுழைகிறது.


குண்டும் குழியுமான இருக்கிறது இந்த இடம். மலைகள், பாறைகள் என்று குவிந்து கிடக்கிறது. தலை தெறிக்க ஓடிவரும் காவிரி இந்த இடத்துக்கு வந்தவடன், தர்மபுரியை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறது.

இதன் காரணமாக மேட்டுப் பகுதியில் இருக்கும் தர்மபுரி மக்களுக்கு காவிரியால் எந்த நன்மையும் கிடைக்காமலே போகிறது.


ஒரு நிமிஷம் யோசித்துப் பாருங்கள். தமிழகத்துக்கே சோறும் போடும் காவிரி ஆறு தர்மபுரி மாவட்டத்தின் வழியாகத்தான் உள்ளே நுழைகிறது. எனினும் அதனால் அந்த மாவட்டத்துக்கு ஒரு பயனும் இல்லை. எனில் அந்த மாவட்ட மக்களுக்கு ஆத்திரம் வருமா, வராதா?


அய்யா, நாங்கள் காவிரி நீரைக் கொண்டு விவசாயம் செய்ய வேண்டாம். ரெண்டு போகம், மூன்று போகம் என்று நெல்லறுக்க வேண்டாம். அட, குடிப்பதற்குக்கூடவா எங்களுக்கு வக்கில்லாமல் போய்விட்டது. மேடான நிலத்தில் நாங்கள் பிறந்ததுதான் நாங்கள் செய்த பாவமா? என்று நினைத்து அந்த மாவட்ட மக்கள் எவ்வளவு தூரம் கவலைப்பட்டு கலங்கிப் போயிருப்பார்கள்.


இந்தக் கவலையப் போக்க வந்ததுதான் தர்மபுரி கூட்டுக் குடிநீர் திட்டம்.


இன்றல்ல நேற்றல்ல, 1965-ஆம் ஆண்டே இந்தத் திட்டத்துக்கான யோசனை பிறந்துவிட்டது. வீராணம் திட்டம் பெரிய அளவில் பேசப்படாத காலம் அது. ஒகனேக்கலில் இருந்து குழாய் மூலமாக சென்னைக்குத் தண்ணீர் கொண்டு வரலாமா என்றுதான் முதலில் யோசிக்க ஆரம்பித்தார்கள்.


பிற்பாடு இந்த யோசனை அவ்வளவு சாத்தியமில்லை என்றவுடன் மேற்கொண்டு யோசிக்காமல் விட்டுவிட்டார்கள். ஆனாலும் இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் தர்மபுரி மக்களின் தாகம் தீரும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்கவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்ட இந்தத் திட்டம் நிறைவேறாமல் தள்ளிக் கொண்டே போனது. இதற்கு முக்கியமான காரணம், நிதி. பல நூறு கோடி ரூபாய் தேவையாக இருந்தது இந்தத் திட்டத்தை நிறைவேற்ற.

அகில உலக கடன் புகழ் ஐ.எம்.எப். இந்தத் திட்டத்துக்குத் தேவையான நிதி உதவி அளிக்கவில்லை. இன்னோரு அகில உலக கடன் புகழான உலக வங்கியும் இந்த்த் திட்டத்துக்கு கடன் கொடுக்கவில்லை.

தண்ணீரின் அவசியத்தை நன்கு உணர்ந்த ஜப்பான் இந்தத் திட்டத்துக்குத் தேவையான பணத்தை கடனாகக் கொடுக்க முன்வந்தது. கடன் என்றால் சும்மா அல்ல. வட்டிக்குத்தான். என்றாலும் இந்தப் பணத்தைப் பெற ஜப்பானிய அதிகாரிகளுடன் பல முறை தொடர்ந்து பேச வேண்டியிருந்தது.


ஒரு வழியாக எல்லாம் நல்லபடியாக முடிந்து, இப்போது திட்டத்தை ஆரம்பிக்கலாம். இத்தனை நாளும் தாகத்தால் தவித்த தர்மபுரி மக்களுக்குத் தண்ணீர் கொடுக்கலாம் என்றால் பிரச்னை பண்ணக் கிளம்பிவிட்டார்கள் கர்நாடக அரசியல்வாதிகள்.


இந்தத் திட்டத்துக்காக காவிரியிலிருந்து குடிப்பதற்காக கொஞ்சம் தண்ணீரைத்தான் எடுக்கப் போகிறது தமிழக அரசாங்கம். சில லட்சம் மக்கள் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் எவ்வளவு தண்ணீர் தேவைப்படப் போகிறது?

இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்றால் அது போல முட்டாள்தனமான வாதம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

அப்படியே மிகச் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும்கூட அது பற்றி தஞ்சை விவசாயிகள்தான் கவலைப்பட வேண்டுமே ஒழிய கர்நாடகாவுக்கு அந்தக் கவலையே தேவை இல்லை.


இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் கர்நாடக அரசியல்வாதிகளை இஷ்டத்துக்கு பேச வைத்திருக்கிறது.


மற்ற அரசியல்வாதிகள் இப்படிப் பேசினால்கூட புரிந்து கொள்ள முடியும். காரணம், அப்படிப் பேசினால்தான் அவர்களால் அரசியல் பிழைப்பு நடத்த முடியும். ஆனால், முன்னாள் முதல்வராக இருந்த கிருஷ்ணாவுக்கு என்ன குறைந்து போய்விட்டது?

இனிமேல் முதல்வர் பதவி கிடைக்காது என்று தெரிந்தவுடன் கவர்னர் பதவி தேடி ஓடினார் கிருஷ்ணா. இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்ககலாம் என்று தெரிந்தவுடன் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

(கிருஷ்ணாவைத் தொடர்ந்து அண்மையில் புதுச்சேரி கவர்னரும் பதவியை ராஜினாமா செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.)

கவர்னர் பதவி என்பது எந்தக் கட்சிக்கும் சார்பில்லாமல் உண்மையாக நடந்து கொள்ள வேண்டிய பதவி. உள்ளதை உள்ளபடி மத்திய அரசாங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டிய பதவி.

கண்ணியம் மிக்க இந்தப் பதவியில் இருப்பவர்கள் பதவிக் காலம் முடிந்த பிறகு அரசியலை விட்டு ஒதுங்கிவிடுவது நல்லது, இந்திய ஜனாதிபதிகள் செய்கிற மாதிரி.

ஆனால் இப்போதுள்ள சில கவர்னர்கள் அந்தப் பதவியை ஒரு சொகுசாகத்தான் பார்க்கிறார்களே ஒழிய, பொறுப்பான பதவி என்று பார்ப்பதாகத் தெரியவில்லை.

மனம் நிறைய முதல்வர் பதவி ஆசையை வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர், கட்சி பேதம் பார்க்காமல் ஒரு மாநிலத்தின் உண்மையான நிலைமையை மத்திய அரசுக்கு எப்படித் தெரிவித்திருக்க முடியும்?


மத்திய அரசாங்கம் ஒன்று கவர்னர் பதவியை ஒழிப்பது நல்லது. அல்லது பதவி ஆசை கொண்டவர்களை அந்தப் பதவியில் உட்கார வைக்காமல் இருப்பது நல்லது.


காவிரி சம்பந்தமாக கர்நாடககாரர்கள் மீண்டும் கடை விரித்துவிட்டார்கள். இந்த முறை தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு அல்ல, தருமபுரி மாவட்ட மக்களுக்குத்தான்.


இந்திய நதிகள் அனைத்தும் தேசியச் சொத்து ஆகும் வரை கர்நாடக, கேரள மாநில அரசியல்வாதிகளின் காட்டில் செம மழைதான் போங்கள்!

ஆனால், பாவம் தமிழ்நாட்டு மக்கள்!

Saturday, March 1, 2008

கடன் ரத்து செய்துவிட்டால் விவசாயிகளின் பிரச்னை தீர்ந்துவிடுமா?

இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் இந்தியா முழுக்க உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது.

விவசாயிகளுக்கு மத்திய அரசாங்கம் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று பா.ஜ.க.வும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் பங்குக்குக் கோரிக்கைகளை எழுப்பின. நாடாளுமன்றத்தில் சபையே நடத்த முடியாதபடிக்கு குரல் கொடுத்தது பா.ஜ.க.


எல்லா அரசியல் கட்சிகளின் வாயை அடைக்கிற மாதிரி சிறு விவசாயிகள் வாங்கிய கடன் தொகையை ரத்து செய்திருக்கிறது மத்திய அரசாங்கம். இதற்காக அரசாங்கத்துக்குக் கூடுதலாக 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இதனால் இந்தியாவில் உள்ள 4 கோடி விவசாயிகள் நன்மை அடைவார்களாம்.

விவசாயிகளின் கடனை ரத்து செய்தது வரவேற்கத்தக்க விஷயம்தான். கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கும் சுறுக்குக் கயிற்றைக் கொஞ்சம் பின்னுக்கு இழுத்துவிட்ட மாதிரி விவசாயிகள் நினைக்கிறார்கள். ஆனால் சுறுக்குக் கயிறு இன்னும் கழுத்தை விட்டு முழுவதுமாக நீங்கிவிடவில்லை என்பது சில விவசாயிகளுக்கு மட்டுமே தெரியும்.

இந்தக் கடன் ரத்தானாலும் நாளை மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலையே விவசாயிகளுக்கு ஏற்படும். அந்தக் கடனையும் விவசாயிகளால் கட்ட முடியாது. மீண்டும் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழும். பல விவசாயிகள் சாவார்கள். மீண்டும் ஒரு 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் ரத்து செய்ய வேண்டியிருக்கும்.

எனவே, கடன் ரத்து என்கிற விஷயத்தோடு அரசாங்கம் நிறுத்திக் கொள்ளாமல், விவசாயிகள் ஏன் மீண்டும் மீண்டும் கடனில் போய் மாட்டிக் கொள்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

இன்றைய தேதியில், விவசாயம் என்பது செலவு மிகுந்ததாக இருக்கிறது. விதைச் செலவு அதிகம். உரச் செலவு அதைவிட அதிகம்.பூச்சி மருந்துச் செலவு எல்லாவற்றையும் விட அதிகம். இத்தனையும் செய்துவிட்டு, தண்ணீர் கிடைக்க வேண்டும். இயற்கை ஏமாற்றாமல் இருந்தால் நல்ல விளைச்சல் கிடைக்கலாம்.

நிறைய விளைச்சல் மட்டும் கிடைத்துவிட்டால் போதுமா? அதை விற்கிற விவசாயிக்கு நல்ல விலையும் கிடைக்க வேண்டும்.

இப்படிப் பல பிரச்னைகள் இருக்கிறது. இதற்கெல்லாம் எந்தத் தீர்வு மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப் போகின்றன?

கடன் ரத்து தற்காலிகமான ஒரு தீர்வுதான். விவசாயிகளின் பிரச்னைகளுக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டுமெனில் அனைவரும் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கான முயற்சிகளில் மத்திய, மாநில அரசாங்கங்கள் இறங்க வேண்டும்.