Monday, August 18, 2008

மருத்துவர் அய்யாவின் கவலை உண்மைதானா?

''விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வு காண மத்தியிலும் மாநிலத்திலும் யாரும் தயாராக இல்லை'' என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கவலை சொல்லி இருக்கிறார். தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் திருச்சியில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் தன் கவலையைக் கொட்டி இருக்கிறார்.

மருத்துவர் அய்யாவின் கவலை உண்மைதானா? விவசாயிகள் மீது அவருக்கு உண்மையிலேயே அக்கறை உண்டா? என்றெல்லாம் சிலர் கேள்வி கேட்கின்றனர்.

இந்த சந்தேகத்துக்கு அவர்கள் சொல்லும் காரணம், சமீப காலமாக மருத்துவருக்கும் தி.மு.க. அரசாங்கத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல்தான்.

''தி.மு.க. - பா.ம.க. கூட்டணி முறிவுக்குப் பிறகு தி.மு.க. மீது படிப்படியாகக் குற்றங்களைச் சுமத்தி வந்தார் மருத்துவர் ராமதாஸ். மருத்துவரின் கேள்விகளுக்கு முதலில் பதில் சொன்னார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. பிறகு தனது அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை விட்டு மருத்துவரின் கேள்விகளுக்கு பதில் தந்தார். தி.மு.க. அரசை மருத்துவர் ராமதாஸ் குறை சொல்லத் தேவையில்லை என்று காரசாரமாக பதிலடி கொடுத்தார் அமைச்சர் வீரப்பாண்டி.

இந்த அறிக்கையின் காரணமாக, விவசாயத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது காட்ட ஆரம்பித்திருக்கிறார் மருத்துவர். எனவேதான், இப்போது விவசாயிகள் கருணை மழை பொழிய ஆரம்பித்திருக்கிறார்'' என்று சொல்கிறார்கள் சிலர்.

எம்மைப் பொருத்தவரை, விவசாயிகள் மீது மருத்துவர் ராமதாஸுக்கு இருக்கும் அக்கறை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. இன்றைக்கு இருக்கும் அரசியல் தலைவர்களில் விவசாயிகளின் பிரச்னையை உண்மையாக புரிந்து கொள்ள முயற்சி செய்பவர்களின் முதன்மையானவர் அவர். சுற்றுச்சூழலுக்காக இவரும் பா.ம.க.வின் ஒரு அங்கமான பசுமைத் தாயகமும் செய்து வரும் பணிகளை தமிழகத்தில் இன்றுள்ள வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வன்னியர் சங்கம் என்கிற அமைப்பைத் தொடங்கிய போது ஏராளமான மரங்களை வெட்டிப் போட்டிருக்கலாம். ஆனால், இப்போது வட தமிழகத்தில் பல ஏரிகளை தூர் வாரிக் கொண்டிருக்கிற வேலையைச் செய்கிறார் மருத்துவர் ராமதாஸ். ஏராளமான மரங்களையும் வைத்திருக்கிறார். எல்லாவற்றையும்விட, இயற்கை விவசாயத்தில் நேரடியாகவே அக்கறை காட்டி வருகிறார். மருத்துவரின் வீட்டில் இயற்கை முறையில் மரம், செடி கொடிகளை வளர்ப்பதாகத் தகவல். எனவே, மருத்துவரின் கவலையை யாரும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

தவிர, கரும்பு விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க சென்னையில் இரண்டு நாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருக்கிறாராம் அவர். இதில் அனைத்து விவசாயிகள் சங்கமும் கலந்து கொண்டு, கரும்பு விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காண வழிவகை செய்யும் என்று அவர் சொல்லி இருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.

மருத்துவர் ராமதாஸைப் போல ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவரும் போட்டி போட்டுக் கொண்டு விவசாயிகளைப் பற்றி கவலைப்பட்டால் மட்டுமே விவசாயிகள் இனி பிழைக்க முடியும்

1 comment:

கரிகாலன் said...

மக்களின் அடிப்படைத் தேவையான உணவு உற்பத்தியை பொருட்படுத்தாத, அதை பாதுகாக்காத, வளர்க்காத அரசோ, தலைவர்களோ, கட்சிகளோ, அமைப்புகளோ இவை எதுவும் மக்களுக்கானது அல்ல. மாறாக மக்களை சுரண்டுவதற்காக வேடம் தறித்தவர்கள்.

இன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் நிறுவுனரும் எடுத்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் காலத்தின் கட்டாயம் வரலாற்றுக் கடமை. கட்சி, அரசியல், கொள்கை வேறுபாடுகள் அனைத்தையும் தள்ளிவைத்துவிட்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதும், விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுக்காக்க அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் கலந்துகொள்வதும் பொறுப்புள்ள ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.