Wednesday, February 27, 2008

கேரளத்தின் முயற்சியைத் தடுப்போம்!

இந்தியா ஒரே நாடு என்று சொல்லிக் கொள்வதில் நமக்கெல்லாம் பெருமைதான். ஆனால், பக்கத்தில் இருக்கிற மாநில மக்கள் வாழ்ந்தா என்ன, செத்தா என்ன என்று நினைக்கும் சில் மாநில அரசுகளை நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, தண்ணீர் விஷயத்தில் தமிழகத்தைச் சுற்றி இருக்கிற மூன்று மாநிலங்களும் கொஞ்சமும் நேர்மையாக நடந்து கொள்வதில்லை.

பெரியாறு அணை உடையும் நிலையில் உள்ளது. எனவே, குறிப்பிட்ட அடிக்கு மேலே தண்ணீர் தேக்கக்கூடாது என்று இத்தனை நாளும் பொய்ப் பிரச்சாரம் செய்து வந்தது கேரளம். இப்போது பெரியாறு அணையின் கீழ் பகுதியின் புதிதாக ஒரு அணை கட்ட முடிவெடுத்து இருக்கிறது. இதற்காக ரூ.126 கோடி ரூபாயையும் செலவு செய்யப் போகிறது.

பெரியாறு அணையில் தண்ணீர் வராமல் இருக்க கேரளம் கட்டும் இரண்டாவது அணை இது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இந்த அணையைக் கட்டத் தேவையான மணலை தமிழகத்திலிருந்து எடுத்துக் கொண்டு போகப் போகிறார்களாம். அதாவது, நம் மீது கல்லறை எழுப்ப நாமே செங்கற்களை அடுக்கி வைக்க வேண்டுமாம். எப்படி இருக்கிறது நியாயம்?

கேரளாவின் சில மாவட்டங்களில் வீடு கட்டத் தேவையான மணல் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்துதான் செல்கிறது. கேரள ஆறுகளில் மணல் குறைவு. அப்படியே இருந்தாலும் அதை அள்ளக்கூடாது என்று அரசாங்கம் உத்தரவு போட்டிருக்கிறது.

ஆனால், வீடு கட்ட மணல் தேவை என்றால் தமிழ்நாட்டிலிருந்து ஆற்று மணலை அள்ளிக் கொண்டு போய்விடுகிறார்கள். நம்மவர்களும் காசு கிடைத்தால் ஆற்று மணல் என்ன, ஆற்றையே எடுத்துக் கொண்டு போங்கள் என்கிற மாதிரித்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை நாம் இப்படிச் செய்தது போதும். இனிமேலும் காசுக்கு ஆசைப்பட்டு ஆற்று மணலை கேரளாவுக்குக் கொண்டு போக அனுமதிக்கக் கூடாது. `தமிழகத்திலிருந்து மணல் சப்ளை செய்யாவிட்டால் கேரளா புதிய அணை கட்டவே முடியாது' என்று பொதுப்பணித் துறையின் சிறப்புக் கண்காணிப்பாளர் (ஓய்வு) கோமதிநாயகம் மதுரையில் பேசி இருக்கிறார். (பார்க்க: 27.10.2008 தினமலர் நாளிதழ்)

பெரியாறு அணை விவகாரத்தில் முரண்டு பிடித்த கேரள அரசை வழிக்குக் கொண்டு வர தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கெனவே இது போன்ற ஒரு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியவர். தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு மணல் கொண்டு செல்வதை தமிழக அரசால் எளிதில் தடுக்க முடியும். தமிழக அரசாங்கம் இதை அவசியம் செய்ய வேண்டும். பெரியாறு அணை மீது அக்கறை கொண்ட அனைவரும் இது தொடர்பாக அரசை வற்புறுத்த வேண்டும்.

2 comments:

ம சி இராஜன் said...

Well written in a humourous vein. Carry on samsari....

உண்மைத்தமிழன் said...

உள்ளூர்ல நியாயமான விலை கொடுத்தா, நம்ம மக்கள் ஏன் அடுத்த மாநிலத்துக்குப் போயி பொருளை விக்கிறாங்க..

உலகம் முழுக்கவே பணம், பணம்னு அலையும்போது மாநில பக்தி கொண்டு அமைதியா இருக்கச் சொல்றீங்க..?

இரண்டு அரசியல் கட்சிகள் தங்களது சுயலாபத்துக்காக நாடகம் ஆடும்போது மக்களை மட்டும் போராடச் சொன்னா எப்படீங்கண்ணா..?