Friday, April 20, 2007

டிராக்டர் சாணி போடுமா? - ராஜாஜி கேட்ட கிடுக்கிப்பிடி கேள்வி

காசுதான் கடவுள். பணத்தை செலவழிக்காமல் உங்களால் ஒரு சின்னப் பொருளைக்கூட வாங்க முடியாது என்கிற இந்தக் காலத்தில் இலவசமாக மாடு கொடுக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

தாம்பரம் சேலையூரில் உள்ள கோவர்தன் அறக்கட்டளை ஒரு நயா பைசாகூட வாங்காமல் நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கும் மாடுகளை இலவசமாகத் தருகிறது. தமிழ்நாடு முழுக்க பல ஏழை விவசாயிகள் இதனால் பயனடைந்திருக்கிறார்கள்.

``அட, ஆச்சரியமா இருக்கே!'' என்று கோவர்தன் அறக்கட்டளையின் தலைவர் நடேசனை சந்திக்கச் சென்றோம். மாட்டுத் தொழுவத்தில் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார் நடேசன். முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியரான இவர், பசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறார். இத்தனை காலம் இவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்ததன் விளைவு, தமிழகம் முழுக்க ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பசு பாதுகாப்பு மையங்கள் (கோசாலைகளை) அமைக்கப்பட்டு அங்கே மாடுகள் அருமையாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பசுக்களைப் பாதுகாக்க கோவர்தன் அறக்கட்டளை செய்து வரும் பணிகளைப் பற்றி நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார் நடேசன்.

``பசுக்கள் நமக்கு சாதாரண விலங்குகள் அல்ல. நம்மைப் பெற்றெடுத்து, பாலூட்டி வளர்த்த அன்னைக்கு இணையாக பசுக்களை மதிப்பவர்கள் நாம். இறைவனுக்கு இணையாக பசுக்களை கும்பிடுபவர்கள் நாம். மனித குலத்துக்கு பசுக்கள் அளிக்கும் பயன் காரணமாகவே அதை தெய்வ நிலைக்குக் கொண்டு சென்றார்கள் நம்முடைய மூதாதையர்கள்.
பசு பால் தருகிறது. அது வெண்ணெய் ஆகிறது. தயிராகிறது என்கிறதோடு பசுவின் பயன் முடிந்துவிடுவதில்லை. அது கொடுக்கும் சாணத்தை வைத்துத்தான் நம்முடைய முன்னோர்கள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்திருக்கிறார்கள்.

இப்படி நாம் போற்றி வழிபட்டு வந்த பசுக்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தபிறகு கிடுகிடுவெனக் குறைய ஆரம்பித்தது. ஒரு முறை ஒரு வெள்ளைக்காரர் மூதறிஞர் ராஜாஜியிடம் கேட்டாராம். `போயும் போயும் ஒரு மாட்டை வணங்குபவர்கள் நீங்கள். உங்களிடம் நாகரீக வளர்ச்சி இல்லை' என்று குற்றம் சாட்டினாராம். இதற்கு ராஜாஜி என்ன பதில் சொன்னார் தெரியுமா? `நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்ளும் நீங்கள் டிராக்டர்களை வணங்குகிறீர்கள். மகத்தான சத்து கொண்ட சாணத்தையும், கோமியத்தையும் (மாட்டின் சிறுநீர்) மாடு நமக்குத் தருகிறது. நீங்கள் கும்பிடும் டிராக்டர் சாணி போடுமா?' என்று கேட்டாராம் ராஜாஜி. அந்த வெள்ளைக்காரரால் பதில் சொல்ல முடியவில்லை.

இன்றைக்கு நாம் விவசாயத்தில் பின்தங்க ஆரம்பித்ததற்கு முக்கியமான காரணம், மாடுகளை நாம் காக்க மறந்ததுதான். மாடு என்கிற மிகப் பெரிய செல்வம் நம்மிடமிருந்து பறி போனதால், பைசா காசு செலவில்லாமல் நமக்குக் கிடைத்த எரு உரம் நமக்குக் கிடைக்காமலே போனது. வயல்களில் எரு உரங்களைப் போடுவதற்குப் பதிலாக ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொடுத்து செயற்கையான உரங்களை வாங்கி வயலில் போட்டோம். முதலில் அதிக விளைச்சலைக் கொடுத்த அந்த உரங்கள் இப்போது விளைச்சலின் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக மாறிவிட்டது. இனி விவசாயத்தில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டு வரவேண்டும் என்றால், விவசாயப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்றால், நிலத்துக்கும் நமக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத ஒரு வேளாண்மையை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு இயற்கை விவசாயம்தான் ஒரே தீர்வு.
`இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் மாடுகள் வேண்டும். எங்களிடம் மாடு இல்லை. அதனால்தான் நாங்கள் இயற்கை விவசாயம் செய்வதில்லை' என்று வருத்தப்படுகிற விவசாயிகள் பலர். அப்படிப்பட்ட விவசாயிகளில் நல்லவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவசமாக மாடுகளைத் தந்து வருகிறோம்'' என்கிறார் நடேசன்.

மாட்டுக் கொட்டிலில் மா என்று மாடுகள் கத்த, ``கொஞ்சம் இருங்க! எங்க குழந்தைகளுக்கு இது டீ டைம். நீங்க காப்பி சாப்பிடுங்க. குழந்தைங்களுக்கு தண்ணி காட்டியிட்டு வந்துர்றேன்'' என்று ஓடினார். சில நிமிடங்களுக்குக் பிறகு வந்தவரிடம் ஒரு கேள்வி கேட்டோம்.

``ஒரு மாடு வாங்க வேண்டும் என்றால் ஐந்தாயிரம் ரூபாயாவது செலவாகும் என்கிறார்கள். உங்களால் மட்டும் மாடுகளை எப்படி இலவசமாகத் தர முடிகிறது?'' - நடேசனிடம் கேட்டோம்.

``கறவை நின்று போன மாடுகள், வயதான மாடுகள், நோய்வாய்ப்பட்ட மாடுகளால் பயன் இல்லை என்று நினைத்து, அவற்றைத் தொடர்ந்து பராமரிக்க யாரும் விரும்புவதில்லை. இப்படிப்பட்ட மாடுகளை கிடைத்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள். இந்த மாடுகள் பெரும்பாலும் கேரளாவுக்குத்தான் செல்கிறது. அங்கு அந்த மாடுகள் வெட்டப்பட்டு இறைச்சியாக விற்கப்படுகிறது. அரசின் முறையான அனுமதி எதுவும் இல்லாமல் இப்படிக் கடத்திச் செல்லப்படும் மாடுகளை பிராணி வதை தடுப்புச் சங்கத்தின் உதவியுடன் பிடித்து, அந்த மாடுகளை மீட்டு வருகிறோம். அந்த மாடுகளை எங்கள் பசு பாதுகாப்பு மையத்தில் வைத்து பராமரிக்கிறோம்.

பயனற்ற மாடுகளை விற்று, அறுப்புக்கு அனுப்பத் தயாரில்லாத கருணையுள்ளம் கொண்ட சிலர், அந்த மாடுகளைக் கோயில்களுக்குத் தானமாக கொடுத்து விடுகிறார்கள். தமிழகம் முழுக்க உள்ள நூற்றுக்கணக்கான கோயில்களில் ஆயிரக்கணக்கான மாடுகள் தானமாக வழங்கப்படுகிறது. இந்த மாடுகளை ஒரு சில ஆண்டுகள வரை வைத்துப் பராமரிக்கிறது கோயில் நிர்வாகம். பின்பு, ஏலமுறையின் மூலம் யாருக்கு வேண்டுமானாலும் விற்றுவிடுகிறது. இந்த மாடுகளை வெட்டி கறியாக்கி கேரளாவில் விற்க நினைக்கும் சிலர்தான் மீண்டும் மீண்டும் வேறுவேறு ரூபகங்களில் வந்து இந்த மாடுகளை வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்.
இதனை எதிர்ந்து நாங்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு போட்டோ ம். கோயிலுக்கு நேர்ந்து விடப்படும் மாடுகள் ஏலம் மூலமாக யாருக்கும் விற்கக்கூடாது. அதற்கு எங்களிடம் கொடுத்தால் நாங்கள் அதை பராமரிக்கத் தயாராக இருக்கிறோம் என்று சொன்னோம். வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவே, கோயில்களிலிருந்து பல நூற்றுக்கணக்கான மாடுகள் இப்போது எங்களுக்குக் கிடைக்கின்றன. இவைகளைத்தான் ஏழை விவசாயிகளுக்கு இலவசமாகத் தருகிறோம். நாங்கள் தரும் மாடுகள் பால் கொடுக்காது. குட்டி போடாது. வண்டி இழுக்காது. ஆனால் விலை மதிப்பற்ற சாணத்தையும், கோமியத்தையும் உங்களுக்குக் கொடுக்கும்!'' - கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார் நடேசன்.

`யார் கேட்டாலும் மாடுகளைக் கொடுப்பீர்களா?' - இது நம்முடைய அடுத்த கேள்வி.

``நிச்சயமாகக் கொடுப்போம். ஆனால் நாங்கள் சொல்லும் நிபந்தனைகளை அவர்கள் நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டும். மாடு வேண்டும் என்று எங்களிடம் கேட்டு வருகிறவர்கள் ஒரு ஏக்கரோ அல்லது இரண்டு ஏக்கரோ நிலம் வைத்திருக்க வேண்டும். மாடுகள் கொடுக்கும் சாணத்தையும், கோமியத்தையும் பயன்படுத்தி, இயற்கை விவசாயம் செய்பவராக இருக்க வேண்டும். செயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்பவர்களுக்கு நாங்கள் மாடுகளைக் கொடுப்பதில்லை.

இந்த கண்டிஷன்கள் அடிப்படையானவை. இதை விட முக்கியமான இன்னொரு கண்டிஷன் இருக்கிறது. மாடு வேண்டும் என்று கேட்டு வந்தவுடன் யாருக்கு வேண்டுமானாலும் மாடுகளைக் கொடுத்துவிட மாட்டோம். மாடு வேண்டும் என்று கேட்கிறவர் யார், எப்படிப்பட்டவர், பசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அக்கறை அவருக்கு இருக்கிறதா அல்லது மாடுகளை இலவசமாக வாங்கி, கிடைத்த விலைக்கு விற்க வேண்டும் என்று நினைக்கிறாரா என்கிற மாதிரி பல கோணங்களில் அவர் பற்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் விசாரிப்போம். தீர விசாரித்த பிறகு அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால்தான் மாடுகளைக் கொடுப்போம். மாடுகளை நிச்சயம் பாதுகாப்பார் என்கிற நம்பிக்கை அவர் மீது எங்களுக்கு வந்துவிட்டால் ஒரு மாடு அல்ல, இரண்டு மாடு அல்ல, நூறு மாடுகளைக்கூட கொடுப்போம்.

மாடுகளைக் கொடுத்த பிறகு எப்போது வேண்டுமானாலும் உங்கள் வீட்டுக்கு நாங்கள் வருவோம். நாங்கள் கொடுத்த மாட்டை நீங்கள் நன்றாக வைத்திருக்கிறீர்கள் என்கிற திருப்தி எங்களுக்கு ஏற்பட்டால்தான் மாடு உங்களிடம் தொடர்ந்து இருக்கும். மாட்டுக்கு சரியான தினி கொடுக்காமல் காயப் போட்டால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டோம்.
பொதுவாக ஒரு தனிப்பட்ட நபர் வந்து எங்களிடம் மாடு கேட்பதைவிட, மூன்று, நான்கு பேர் சேர்ந்து, கூட்டாக வந்து மாடுகளைக் கேட்டால், அவர்களுக்கு மாடு வழங்க முன்னுரிமை அளிப்போம். இப்படி மாடுகளைக் கொடுப்பதன் மூலம் அடிக்கடி வந்து மாடுகளைக் கண்காணிக்கவும் எங்களுக்கு வசதியாக இருக்கும்'' என்கிறார் நடேசன். கோவர்தன் அறக்கட்டளையிலிருந்து மாடுகளைப் பெற்றதன் மூலம் பலருடைய வாழ்க்கைப் பாதையே மாறி இருக்கிறது. இதற்கு ஒரே ஒரு உதாரணம், கூத்தம்பாக்கத்தில் உள்ள அன்னை இந்திரா மகளிர் சுயஉதவிக் குழு. இந்தக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு ஆளுக்கொரு மாட்டை கொடுத்திருக்கிறது இந்த அமைப்பு. அந்த மாடுகளை வைத்துக் கொண்டு அவர்கள் காய்கறி வளர்த்தார்கள். முன்பு வீட்டில் உள்ள வேலைகளை மட்டுமே செய்து வந்த அந்தப் பெண்கள் இன்று கை நிறைய சம்பாதிக்கிறார்கள். இப்படித் தமிழகம் முழுக்க நூற்றுக்கணக்கான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகிறார் நடேசன்.

கோவர்தன் அறக்கட்டளையைப் பொருத்த வரை முக்கியமான இன்னொரு விஷயம், இந்த அமைப்பு கொடுத்த மாடுகளை வைத்துக் கொண்டு, இயற்கையான முறையில் பயிர்களை விளைவித்தால் அதை விற்றுத் தரவும் உதவி செய்கிறது. ``தாம்பரத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தினமும் இயற்கையாக விளையும் அரிசி ஒரு மூட்டை வேண்டும் என்று கேட்டார்கள். எங்களால் கொடுக்க முடியவில்லை. நூறு லிட்டர் பால் வேண்டும் என்று கேட்டார்கள். எங்களால் கொடுக்க முடியவில்லை. இயற்கையாக விளைவிக்கப்படும் பொருட்களுக்கு நிறைய டிமாண்ட் இருக்கிறது. சப்ளைதான் இல்லை'' என்கிறார் நடேசன்.

நடேசனின் முகவரியும் தொலைபேசி எண்ணும்:

கோவர்த்தன் அறக்கட்டளை,
6, வடக்கு ஆஞ்சனேயர் கோவில் தெரு,
மாருதி நகர்,
ராஜகீழ்ப்பாக்கம்,
சோலையூர்,
சென்னை-600073.

044-22272618.

3 comments:

Rajagopal said...

நண்பரே,

மிகவும் பயனுள்ள பதிவு. வெளி நாட்டினர் மிகவும் அச்சப்படும் e-coli பசுவின் மூலமாக கிடைக்கும் எருவில் உள்ளது என்பது உண்மையா?.

அன்புடன்
இராசகோபால்.

சம்சாரி said...

இராசகோபால்,

நன்றி.இந்தப் பதிவைத் தொடர்ந்து படியுங்கள். தமிழகத்தில் உங்களுக்குத் தெரிந்த விவசாயிகள் யாராவது இருப்பின் அறிமுகப்படுத்துங்கள். நீங்கள் கேட்டுள்ள கேள்வி குறித்து google-ல் நிறைய சங்கதிகள் உள்ளன. இந்த விஷயம் அமெரிக்காவுக்கே புதிது என்பதால் இந்தியாவில் இது பற்றி யாருக்கும் அவ்வளவாகத் தெரியவில்லை. எனவே உங்கள் கேள்விக்கு என்னால் பதில் கூற இயலவில்லை.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

ரொம்பவே பயனுள்ள பதிவுங்க..

ஆனா இத ப்ளாகுல போடறதவிட ஒரு தினசரி பத்திரிகையில வர ஏற்பாடு செஞ்சீங்கன்னா இன்னும் அதிகம் வாசகர்களை சென்றடைய வாய்ப்புள்ளது.

அத்துடன் இத்தகைய மாடுகளை பராமரிக்க தினம் ஒன்றுக்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் வெளியிட்டால் நல்லது.

அன்புடன்,
ஜோசஃப்