Monday, April 23, 2007

கி.ராஜநாராயணன் என்கிற எழுத்தாள விவசாயி!


கி.ராஜநாராயணனுக்கு அறிமுகம் அநாவசியம். கரிசல் இலக்கியம் என்னும் அரிய இலக்கிய வகையைத் தோற்றுவித்தவர். சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர். கோயில்பட்டிக்கு அருகில் உள்ள இடைச்செவலில் பிறந்து, இன்று பாண்டிச்சேரியில் வாழ்ந்து வருகிறார். கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், கருசக்காட்டு கடிதாசி, வேட்டி (சிறுகதைத் தொகுப்பு), கிடை (குறுநாவல்), வயது வந்தவர்களுக்கு மட்டும் (விடலைகளுக்கான கிளுகிளு கதைகள்) என்று கி.ராஜநாராயணன் எழுதிய அத்தனை படைப்புகளும் என்றென்றும் ரசித்து படிக்கத் தக்கவை.

கி.ராஜநாராயணன் எழுதிய கோபல்ல கிராமத்து மக்கள், கருசக்காட்டு கடுதாசி ஆகியவற்றிலிருந்து சில முக்கியமான பகுதிகளைத் தொகுத்து `உயிர்க்கோடுகள்' என்கிற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் புதுவை இளவேனில். (உயிர்க்கோடுகள் புத்தகம் வாங்கிப் படிக்க நினைப்பவர்கள் பின்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம். அகரம்.
மனை எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் - 613 007. புத்தகத்தின் விலை : ரூ. 250.)

ராஜநாராயணின் படைப்புகளுக்கு ஆதிமூலம் வரைந்த ஓவியம் ஒவ்வொன்றும் அற்புதம். தமிழகத்தில் இன்று விவசாயிகள் எப்படி இருக்கிறார்கள்? அரசு அதிகாரிகள் விவசாயிகளை எப்படி நடத்துகிறார்கள் என்பதைச் சொல்ல உயிர்கோடுகள் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை இங்கே தருகிறேன்.


தீர்க்கமாக மூன்று ஆண்டுகள் நிறைந்து, நாலாவது ஆண்டில் 31.10.85-ல் சமூகவனக் கோட்ட அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதினேன். நீங்கள் கொடுத்த கன்றுகளெல்லாம் மரங்களாகிவிட்டன; வந்து பாருங்கள் என்று.

அதற்குக் கோட்டவன அலுவலகத்திலிருந்து பதில் வந்தது இப்படி:

`கன்றுகள் நடவு செய்துள்ள நிலத்தின் சர்வே எண், நிலம் அமைந்துள்ள கிராமத்தின் பெயர், பரப்பளவு மற்றும் விண்ணப்பதாரரின் பொறுப்பிலுள்ள நிலங்களின் அளவு, சர்வே எண் வாரியாகத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.'

ஏற்கனவே நான் அவர்களுக்குத் தெரிவித்துவிட்ட தகவல்களோடு, இப்போது புதிதாகச் சில அதிகப்படி தகவல்கள் கேட்டார்கள்.

கொடுக்கிற கை எப்பவும் மேலேதான் இருக்கும்; வாங்குகிற கை எப்பவும் கீழேதானே..? அதோடு, அதிகாரியின் வீட்டுக் கோழி முட்டை குடியானவனின் வீட்டு அம்மியின்மேல் பட்டு அம்மிக்கல் உடைந்ததாகத்தான் `சாஸ்திரங்களில்'(!) சொல்லப்பட்டிருக்கிறது.

கோட்டவன அதிகாரியின் கேள்விகளுக்கு ஒழுங்காக, மரியாதையாக உரிய காலத்தில் பதில் எழுதித் தபாலில் சேர்த்தேன். எழுபத்தைந்து நாட்கள் கழித்துத் திரும்பவும் ஒரு நினைவூட்டுக் கடிதம் எழுதினேன். கோட்டவன அதிகாரியிடமிருந்து, ந.எண்:1210/85 தி.நாள்.19.5.86. மாசி மாதம் 7 குரோதன திருவள்ளுவராண்டு 2017.. பதில் வந்தது. தமிழில் தேதியிட்டு பதில் வந்தது இந்தப் பைத்தியக்கார மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்த்து.


(ஓ-ம்) மு. அமனுல்லாகான்

கோட்டவன அலுவலர்


வனச்சரக் அலுவலகத்திலிருந்து ஒரு நாள் மரங்களைப் பார்க்க ஆட்கள் வந்தார்கள். எண்ணிப் பார்த்தார்கள். குறித்துக் கொண்டார்கள். ஆபீஸில் வந்து வனச்சரகரைப் பார்க்கும்படி சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.


கோவில்பட்டியிலுள்ள ஜோதிநகர் வனச்சரக அலுவலகத்தை விசாரித்து, வனச்சரக அலுவலரைப் போய்ச் சந்தித்தேன். நல்லவேளை அவர் ஆபிஸில் இருந்தார்.


ஒரு வரியில் அவர் சொல்லிவிட்டார்: நீங்க சிறு விவசாயி இல்லை. அதனால் மரத்துக்கு நாற்பது ரூபாய் என்கிற போனஸைப் பெற முடியாது என்று! அதிர்ச்சியாகத்தான் இருந்தது என்றாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல், சிறு விவசாயி என்றால் என்ன? என்று கேட்டேன். ``ஐந்து ஏக்கர் நிலமோ அல்லது அதற்குக் குறைவாகவோ வைத்திருப்பவரே சிறு விவசாயி'' என்றார். ``ஐந்து ஏக்கர் மானாவாரிப் புஞ்சை நிலம் வைத்திருப்பவன்.. அதில் ஜீவனத்துக்காக மகசூல் பண்ணுவானா, மரங்களாக நடுவானா..?'' என்று கேட்டேன்.1 comment:

உண்மைத் தமிழன் said...

குறைந்தபட்சம் பத்து லட்சம் செலவழிக்கும் தகுதி உள்ளவன்தான் வட்டச் செயலாளர். இருபத்தைந்து லட்சம் செலவழிக்கும் அளவு செல்வாக்கானவன்தான் நகரச் செயலாளர்.. ஒரு கோடியைத் தொட்டுவிடுபவன்தான் மாவட்டச் செயலாளர். இந்த மூவரையும் ஒரு நொடியில் விலைக்கு வாங்கிவிடக் கூடியவர்தான் ஒரு சட்டமன்ற உறுப்பினர். இதுபோல் பத்து சட்டமன்ற உறுப்பினரை தன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் சேர் போட்டு உட்கார வைப்பவர்தான் மந்திரி. இது போல் 25 மந்திரிகளைக் கொண்டவர்தான் ஒரு முதல் அமைச்சர். இவர்களது அகராதியில் ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் கண்டிப்பாக பணக்காரன்தான்.. சந்தேகமே இல்லை..