மு.சுயம்புலிங்கத்தைத் தெரியுமா உங்களுக்கு?
கி.ராஜநாராயணன் கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்றால் சுயம்புலிங்கம் தலைமகன். நீரற்று வெளிறிப் போன கரிசல் காட்டு விவசாயிகளின் வாழ்க்கையை பச்சை பச்சையாகப் படம் பிடித்துக் காட்டியவர். சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமைசுயம்புவின் எழுத்தைப் படிக்கிற்போது நம் முகத்தில் தெறிக்கும். பாளம் பாளமாகப் பிளந்து போன அந்த நிலத்தைக் காண்கிற போது நமக்கு தாகம் வந்து தவிக்கும். அந்தப் பாழ் நிலத்தை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறும் அகதி மக்களின் வாழ்க்கைக் காண்கிற போது கண்களில் ரத்தம் கொட்டும்.
நிறைய எழுதியவர்தான் சுயம்புலிங்கம். இன்று ஏகத்துக்கும் குறைத்துக் கொண்டுவிட்டார். பல ஆண்டுகளுக்கு முன்பே கோயில்பட்டியை விட்டு வெளியேறு, சென்னைக்கு அடுத்துள்ள பெருங்களத்தூரில் ஒரு சிறுகடை வைத்து நடத்தி வருகிறார்.
1990 வாக்கில் சுயம்புவின் கதைகளையும் கவிதைகளையும் ஒன்று திரட்டி ஊர்கூட்டம் என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் வந்தது. கோணங்கி தன்னுடைய கல்குதிரையில் சுயம்புவின் படைப்புகளை வெளியிடுவதற்காகவே ஒரு இதழை ஒதுக்கினார். சமீபத்தில் உயிர்மை பதிப்பகம் ஒரு பனங்காட்டு கிராமம் என்கிற தலைப்பில் அவர் சிறுகதைகளை வெளியிட்டிருக்கிறது.
கருசக் காட்டு விவசாயிகளின் மனநிலை எடுத்துச் சொல்ல, ஊர்கூட்டத்திலிருந்து ஒரு கதை இங்கே உங்களுக்குத் தருகிறேன்.
சமுசாரியின் கதை.
பட்டவத்தலை நெருப்பில் சுகிற காரநெடி.தொண்டை புகைந்து இருமல் வருகிறது.
கண்களைத் துடைத்துக் கொண்டு திண்ணையில் வந்து உட்காருகிறேன்.
தாத்தா வருகிறா.
சொயம்பு.. பாத்தியா, பய்யன் விளையாட்ட..
தெருவில் மணல்கட்டி, மோண்டு புட்டுச் செய்து விளையாடுகிறான் பய்யன்.
எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. தாத்தாவும் குலுங்கக் குலுங்க சிரித்தார். தெருவில் மழத்தண்ணி புரளவேண்டிய காலம்.
அயிப்பசி பிறந்து எழு தேதி ஆகிறது. தாத்தா மழை பெய்யுமா?
கைகளைத் தலைக்குக் கொடுத்து உடம்பை சுவரோடு சாய்த்துக் கொண்டு தாத்தா சொன்னார்.
ரேடியோக்காரன் நாப்பத்தெட்டு மணிநேரம் கெடு சொல்லுதான்.
ஜோசியக்காரன் கனத்தநால் கட்டங்களை சொல்லுதான்.
ஒருபயல் கய்யிலும் மழை பிடிபடவில்லை.
நீர்மேல் குமிழி. மழை பெய்தால்தான் எல்லாம்.
பூமாதேவி கொடுக்காமல் ஒரு பயலாலும் ஆவதில்லை.
சமுசாரி குடி கெட்டுக்கிடக்கு. விவசாயி நெம்பலப்பட்டுப் போன ஒரு நாட்டின் அரசன் நீடித்து அரசாள முடியாது.
முதல்மந்திரி விவசாயிகளுக்கு அவர் கஜானாவில் இருந்து அள்ளிக்குடுக்காராம்.
என்னத்தக் கொடுப்பார்? எத்தனை நாளைக்கு கொடுப்பார்?
சுவரோடு சாய்ந்த முதுகை நிமிர்த்தி மெள்ளத் தவழ்ந்து வந்து கால்களைத் தொங்கப் போட்டு உட்கார்ந்தார் தாத்தா. அவர் கைகள் பொடிமட்டையை கவனமாய் தட்டிக் கொண்டிருந்தது.
இதை நல்லாக் கேள்.
ரொம்ப செயலாக வாழ்ந்த குடும்பம். பெரிய்யசுத்துக்கெட்டு வீடு.
அந்த வீடு பொம்பளைகளப் பார்த்தால் முகத்தில் அருள் இருக்கும்.
ஏழூஏர் சமுசார். ஆடுகள் என்ன.. மாடுகள் என்ன.. எவ்வளவு வேலையாள்..
எந்த நாடு தீய்ந்து போனாலும் அந்தவீட்டுப் பட்டறையில் தவசம் இருக்கும்.
அந்த வீட்டுக்கு மாதம் ஒருவண்டி கருப்பட்டி கொடுத்திருக்கேன்.
என்ன மாதிரியாக வாழ்ந்த வீடு..
அந்த மனிதன் மதுரை வீதியில் குரங்குக்குட்டிக்கு சட்டை போட்டு தோள்மேல் உட்கார வைத்துக் கொண்டு கடைகடையாய் அலைகிறார்.
அந்த மனுசனுக்கே அந்தக்கதி.மற்றவர் கெதி என்ன ஆகிறது?
சொயம்பு-பூமி அதே இடத்தில்தான் இருக்கு.
விளையாவிட்டால்..?
தாத்தா தெருவில் நடந்துபோகிறதை பார்க்கிற என் கண்கள் மதுரை வீதியில் குரங்குக்குட்டிக்கு சட்டை போட்டு தோள்மேல் உட்கார வைத்துக் கொண்டு கடைகடையாய், அலைகிற அந்த சமுசாரியையே பார்க்கிறது.
Friday, May 4, 2007
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
arumai! thodarnthu padikkathuundum seythikal
அருமை மிக அருமை. நானும் ஒரு விவசாயிதான். எனக்கும் ராஜநாராயணன் பிடிக்கும்.சுயம்புலிங்கமும் படித்திருக்கிறேன்.தொடர்ந்து எழுதுங்கள்
சுயம்புலிங்கம் பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப் படித்தேன். பெருங்களத்தூரைச் சேர்ந்தவன் என்ற முறையில் ஒரு ஸ்வீட்காரராக எனக்கு அவரைத் தெரியும். வெள்ளை அல்லது சாம்பல் நிற சபாரியில் அவரைப் பார்த்ததாக ஞாபகம். அப்போது நான் பள்ளி மாணவன் என்பதால் அவ்வளவாக நினைவில் இல்லை. பின்னாளில் ஆனந்த விகடனில் எஸ்.ராமகிருஷ்ணன் சுயம்பு பற்றி எழுதியதைப் படித்த போதுதான் அவரைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது. அதைப் பகிர்ந்து கொள்ள அவரைத் தேடிப்போனேன். அவரும் இல்லை. ஸ்வீட் ஸ்டாலும் இல்லை. எங்கேயோ வண்டலூர் பக்கம் போய் விட்டதாகக் கேள்விப்பட்டேன். அங்கேயும் ஸ்வீட் ஸ்டால்தானாம். ஆனால் எழுதுகிறாரா எனத் தெரியவில்லை.
Post a Comment