Monday, May 21, 2007

வாட்டி வதைக்கும் வெயில்! என்னதான் தீர்வு?

சென்னையில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்றைய வெயில் நிலவரம் 106 டிகிரிக்கு மேலே. பொதுவாக, கடுமையான வேலையைச் செய்தால் உடம்பில் வேர்வை கொட்டும். ஆனால், நேற்றெல்லாம் அதிவேகமாக சுழலும் ஃபேனுக்குக் கீழே சும்மா உட்கார்ந்தாலும் வேர்வை ஊத்திக் கொட்டியது.

அடிக்கிற வெயிலைப் பார்த்தால் மே மாதம் முழுக்க ஏதாவது ஒரு மலைப்பகுதியை நோக்கி ஓடிவிடலாமா என்று படுகிறது. இந்த ஆண்டே இப்படி இருக்கிறது. அடுத்த ஆண்டை நினைத்தால் எப்படி இருக்குமோ என்கிற கவலை வேறு மனதை அரிக்கிறது.

இந்த அக்னி வெயில் பிறந்த குழந்தைகளை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது? சுட்டெரிக்கும் வெயில் பஞ்சு போன்ற அந்த உடல் என்ன பாடுபடுகிறது தெரியுமா? பெரியவர்களாவது உடல்சூட்டைத் தணிக்க ஒரு நாளைக்கு 5 முறை குளிக்கிறார்கள். அந்தப் பச்சிளம் குழந்தைகள்? புதிதாகத் திருமணம் ஆனவர்கள், புதுப் பெண்டாட்டியை ஆடி மாதம் ஏன் ஆத்தா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்பதை இனிமேலாவது புரிந்து கொள்ளட்டும்.


இந்த கோடை காலத்தில் அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் வந்துவிட்டது. கத்தரி வெயில் முடிய இன்னும் ஒரு வாரம் உள்ளது. இனிமேலாவது வெயில் குறையுமா, குறையாதா என்கிற கவலை பலரையும் வாட்டி எடுக்கிறது.

இவ்வளவு வெயில் அடித்தாலும், நிறைய மரங்களை வளர்க்க வேண்டும் என்கிற எண்ணம் நம் மக்கள் யாருக்குமே வரவில்லை என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. மரங்கள் நிறைய இருக்கும் பகுதிகளில் வெயில் கொடுமை அவ்வளவாக நமக்குத் தெரிவதில்லை. சென்னை நகரில் அடையாரிலும் மரங்களின் எண்ணிக்கை அதிகம். அந்தப் பகுதிகளில் வெயில் அவ்வளவாகத் தெரிவதில்லை. ஆனால், வடசென்னையில் மரங்கள் ஏறக்குறைய இல்லை என்றே சொல்லிவிடலாம். எனவே, அந்தப் பகுதிகளில் வெயில் மண்டையைப் பிளக்கிறது.

மனிதன் இயற்கையை விட்டு என்று ஒதுங்க ஆரம்பித்தானோ அன்றிலிருந்த பல இன்னல்களுக்கு ஆட்பட ஆரம்பித்துவிட்டான். ஏசி தரும் செயற்கைத் தீர்வை ஒதுக்கிவிட்டு, இயற்கைக்கு மீண்டும் மனிதன் எப்போது திரும்புகிறோனோ அப்போதுதான் பல பிரச்னைகளுக்கு விடிவுகாலம் பிறக்கும். இதற்கு முதல்படியாக, தமிழகம் முழுக்க இன்னும் பல கோடி மரங்கள் நடப்பட வேண்டும்.

5 comments:

Guru Prasath said...

மிகவும் சரி. மற்ற மாநில மக்கள் சென்னையை வெறுக்க முதல் காரணம், வெயில்...வெயில்...வெயில்.

ZuuBeeDuuBee said...

//இவ்வளவு வெயில் அடித்தாலும், நிறைய மரங்களை வளர்க்க வேண்டும் என்கிற எண்ணம் நம் மக்கள் யாருக்குமே வரவில்லை என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.//

good question ...

வடுவூர் குமார் said...

முடிந்த இடங்களில் மரம் வளர்கலாம்,இல்லாத இடங்களில் மாடியில் தற்காலிகமாக ஷாமினா போட்டு வீட்டை ஓவன் ஆக்குவதை கொஞ்சம் குறைக்கலாம்.
ஏதோ என்னால் முடிந்தது.
சிங்கையில் நல்ல மழை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பெய்கிறது.
எப்போதும் இப்படி இருக்காது,கடந்த சில ஆண்டுகளாக பருவம் சிறிது சிறிதாக மாறி வருகிறது.

சம்சாரி said...

குரு,

மற்ற மாநில மக்கள் தமிழகத்தை மிகவும் விரும்பக் காரணம், இங்கு நிலவும் அமைதியான சூழல். திறமையான, ஏமாற்றும் குணம் இல்லாத நல்ல மக்கள். கூடவே நல்ல சீதோஷ்ண நிலையும் நம்மிடம் இருக்கும் பட்சத்தில் தென்னகத்திலேயே அனைவரும் விரும்பும் மாநிலமாக தமிழகத்தை ஆக்கமுடியும். நம் மக்கள் சுற்றுச்சூழல் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இருக்கிறார்களே என்று நினைக்கும்போதுதான் வருத்தமாக இருக்கிறது.


வடூவாரின் ஷாமியானா யோசனையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மாடியில் இடம் இருந்தால் அருமையாக தோட்டம் அமைக்கலாம். உங்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை நீங்களே வளர்த்துக் கொள்ளலாம். காய்கறி செலவும் மிச்சம். சத்தான காய்கறியும் கிடைக்கும்.

anbu said...

Ennadhu ...Adayaaraa ??

Angudhaan Sardar patel roadu muzhuvadhum azhagaai nizhal thandha ATTHUNAI marangalaiyum vetti thallivittaargale

Oru chinna ethirppo munumunuppo illai ...indhu pathirigai kooda oru photo photu atleast adayaala edhirppai kaattavillai