Monday, April 16, 2007

தமிழகத்தின் நம்பர் 1 விவசாயி!

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
- சாதனை செய்யும் நம்பர் ஒன் விவசாயி


``விவசாயத்துக்கு இது போறாத காலம்! முன்ன மாதிரி வானம் என்ன, மும்மாரி மழை பொழிஞ்சுகிட்டா இருக்கு! தண்ணியில்லாம எப்படி விவசாயம் செய்ய முடியும்?ஒஒ என்று புலம்பும் கிராமத்துப் பெருசுகள் பலர்.

வகை தொகை இல்லாமல் மரங்கள் வெட்டப்பட்டதினால் மழையின் அளவு கடுமையாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மை. அதற்காக, மழையே இல்லை என்று நிலத்தை மூட்டை கட்டி, தூக்கி எறிந்துவிட வேண்டிய கட்டாயம் நமக்கு இன்னும் ஏறபட்டுவிடவில்லை. தண்ணீர் பற்றாக்குறை என்கிற தீர்க்க முடியாத பிரச்னை ஒரு பக்கமிருக்க, கணக்கு வழக்கில்லாமல் தண்ணீரை ஊற்றி, விலை மதிப்பற்ற செல்வத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இன்றைய தேதியில் தண்ணீர் சிக்கனத்திற்கு வழி சொல்கிறவர்களைத் தாராளமாக தலைவர்களாக ஏற்றுக் கொள்ளலாம். திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள புளியங்குடி விவசாயி அந்தோணிசாமி, கரும்பு சாகுபடியில் தண்ணீர் சிக்கனத்திற்காக பல ஆராய்ச்சிகளைச் செய்தவர்.

``காவிரியாற்றுப் பாசன விவசாயிகள் வேண்டுமானால் தண்ணீரை இளக்காரமாக நினைக்கலாம். நெல்லுக்கும் வாழைக்கும் கரும்புக்கும் மடை திறந்து வெள்ளத்தைப் பாய்ச்சலாம். ஆனால், நாங்களோ வானம் பார்த்த பூமிக்குச் சொந்தக்காரர்கள். எங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு மழைத்துளியும் வருண பகவான் எங்களுக்கு அளிக்கும் உயிர்மூச்சு. ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட வீணடிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். அதனாலதான் தண்ணீர் சிக்கனத்திற்காகப் பல வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம்ஒஒ என்கிறார் அந்தோணிசாமி.

``தண்ணீர் சிக்கனத்திற்காக நீங்கள் கடைபிடிக்கும் வழிமுறைகள் என்ன?ஒஒ என்று அந்தோணிசாமியிடம் கேட்டோ ம்.

``சொல்றேன். அதுக்கு முன்னால உங்ககிட்ட ஒரு கேள்வி. என் தோட்டத்தை அப்படியே ஒரு பொடி நடை நடந்து போய் சுத்திப் பார்த்துகிட்டே பேசலாமா?'' என்று கேட்கிறார். அன்போடு நம்மை அழைத்துச் சென்ற அந்தோணிசாமி அண்ணாச்சியைப் பற்றிய அறிமுகத்தை இங்கேயே செய்துவிடுவது நல்லது.

புளியங்குடி பக்கத்தில் உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த இவர், பாரம்பரியமான விவசாயி. பள்ளிக்கூடத்தில் எட்டாவது வரை மட்டுமே படித்தவர். மத்திய அமைச்சராக இருந்த அமரர் கிருஷ்ணசாமி இவரது பள்ளித் தோழர்.

இளைஞர் பருவம் தொட்டே விவசாயத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என்று வெறி கொண்டவர். செயற்கை உரங்களை நம்பி இவர் தீவிரமாக விவசாயம் செய்யப் போக கிட்டத்தட்ட 50 லட்ச ரூபாய் கடனாளியாக மாறிவிட்டாராம் அண்ணாச்சி. பிறகு செயற்கை உரத்தைத் தூர எறிந்துவிட்டு, இயற்கை விவசாயத்துக்கு மாறினார். பட்ட கடன் 50 லட்சத்தையும் மொத்தமாக துடைத்து எறிந்ததோடு, இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கருக்கு சொந்தக்காரர் அண்ணாச்சி. அறுபது ஏக்கருக்கும் மேலே எலுமிச்சையும் இன்னுமொரு அறுபது ஏக்கருக்கு மேலே கரும்பும் வளர்க்கிறார்.

``கரும்பு வளர்க்க மிக அதிகமான தண்ணீரைத் தமிழகத்து விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். ஒரு கிலோ சர்க்கரை உருவாக்க 20 முதல் 22 ஆயிரம் லிட்டர் தண்ணீரச் செலவழிக்கிறார்கள். ஆனால், நான் ஒரு கிலோ சர்க்கரையை உருவாக்க 1500 லிட்டர் முதல் 1800 லிட்டர் தண்ணீர் மட்டுமே செலவழிக்கிறேன். அதாவது, மற்ற விவசாயிகளுடன் ஒப்பிடும் போது 10 சதவிகிதத்துக்கும் குறைவான தண்ணீரையே பயன்படுத்துகிறேன்!''

``அப்படியா! ஆச்சரியமாக இருக்கிறதே! உங்களால் மட்டும் எப்படி இவ்வளவு குறைவான நீரைக் கொண்டு கரும்பை வளர்க்க முடிகிறது?'' என்று கேட்டவுடன், அதற்கான பதிலை கொஞ்சமும் தயக்கமில்லாமல் தெள்ளத் தெளிவாக சொல்ல ஆரம்பித்தார்.

``கால்வாய் பாசனக்காரர்கள் மடையைத் திறந்து வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிற மாதிரி நான் கால்வாயைத் திறந்து தண்ணீரைக் கொட்ட மாட்டேன். சொட்டு நீர் பாசனம்தான் எனக்கு அடிப்படை.
நிலத்தை நன்றாக உழுதபின் ஆறு அடி, மூன்று அடி என்று இடைவெளி விட்டு அடி மடுக்கிறேன். முதலில் மூன்று அடி பார், அடுத்து ஆறு அடி பார். மீண்டும் மூன்று அடி பார், அடுத்து ஆறு அடி பார். இப்படி மாற்றி, மாற்றி அடி மடுக்குறேன். ஆறு அடி பாரில் பயறு வகைப் பயிர்களை விதைத்து வளர்க்கிறேன். அடுத்த மூன்றடி பாரில் இரண்டு வரிசையாக கரும்பை நட்டேன். கரும்புக்கு இடையில் பயறு வகைகளாகப் பிடுங்கி மூடாக்காக வைத்தேன்.

இதன் பின்னர், பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஏதாவது ஒரு பயறு வகைப் பயிரை ஊன்றிவிடுகிறேன். அது வளர்ந்து மூடாக்கிற்குப் பயன்படும். குறிப்பாக, 45 நாட்கள் மூடாக்குப் பயிர்களை வளர விட்டும் பின்பு பிடுங்கி மூடாக்காக பயன்படுத்துகிறேன்.

பின்னர் தொண்ணூறாம் நாள் அடுத்த மூடாக்கு செய்ய வேண்டும். அதற்கு அடுத்ததாக பயிர் ஊக்கியான மீன் அமினோ அமிலத்தை இரண்டாம் மூடாகு செய்த பிறகு ஒரு லிட்டருக்கு நூறு லிட்டர் நீர் என்ற அளவில் சேர்த்துத் தெளிக்க வேண்டும். 120-ஆம் நாள் பஞ்சகாவ்யா கரைசலைத் தெளிக்க வேண்டும்.

இப்படிச் செய்வதன் மூலம் பத்து டன் உரத்தை நிலத்தில் கொட்டியதர்கு சமமாக ஆகிவிடுகிறது. 160-ஆம் நாள் முதல் சோகையை உறிக்க வேண்டும். உரித்து கரும்புக்கு அடியில் வைத்து மீண்டும் மண்ணால் மூடிவிட வேண்டும். இது முடிந்த பிறகு மீன் அமினோ அமிலம் தெளிக்க வேண்டும்.
210-ஆம் நாள் இரண்டாவது முறை சோகை உரிக்க வேண்டும். முன்பு சொன்னது போலவே, இதையும் மூடாக்கு செய்ய வேண்டும். மீண்டும் மீன் அமினோ அமிலம் அல்லது பஞ்சகாவ்யதைத் தெளிக்க வேண்டும்.
250-ஆம் நாள் கடைசி சோகையை உரிப்பு செய்ய வேண்டும். அது அடுத்த பயறு வகைப் பயிருக்கான உரமாக மாறும். இப்படித் தொடர்ந்து நிலத்தைப் பண்படுத்துவதன் மூலம் நிலத்தில் உள்ள மண்புழுக்கள், பூச்சிகள் என பல உயிரினங்கள் கோடிக் கணக்கில் பெருகுகின்றன.இதனால் நிலம் குளுகுளுவென இருக்கும். வெளியே முப்பது டிகிரி செல்சியஸ் வெயில் அடித்தால் என் தோட்டத்துக்குள்ளே 25 டிகிரி செல்சியஸ்தான வெப்பம் இருக்கும். வெப்பம் அதிகம் இல்லாததால் தண்ணீரின் தேவையும் கணிசமாகக் குறைந்துவிடுகிறது. இதுதான் நான் செய்யும் தொழில்நுட்பம்தான்!'' என்று ஒரு விவசாயக் கல்லூரிப் பேராசிரியர் மாதிரி பேசுகிறார் அந்தோணிசாமி.

தமிழகத்தின் சராசரி கரும்பு விளைச்சல் ஏக்கருக்கு முப்பது டன். இது இந்திய சராசரியை விட கொஞ்சம் அதிகம். ஆனால், அந்தோணிசாமியோ ஒரு ஏக்கருக்கு சராசரியாக அறுபது டன் கரும்பை சாகுபடி செய்கிறார். இத்தனைக்கும் இந்த உரம், அந்த உரம், மருந்துச் செலவு என்று பத்து ரூபாய்கூட செலவழிப்பதில்லை. செலவும் இல்லை; அதே நேரத்தில் விளைச்சலும் அதிகம். தமிழ்நாட்டில் உள்ள மற்ற விவசாயிகளும் அந்தோணிசாமியைப் பின்பற்றினால் லட்சம் லட்சமாகப் பணத்தைக் குவிக்கலாம்.

இது மட்டுமல்ல, அந்தோணிசாமியின் தோட்டத்தில் வளரும் கரும்பில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கணக்கிட்டார்கள். கிட்டத்தட்ட 80 சதவிகிதம் குளுக்கோஸ் இருப்பதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஆர்வமுள்ள விவசாயிகள் அவரது தோட்டத்துக்கு ஒருமுறை நேரடியாகச் சென்று பார்த்து விட்டு வரலாம்!

அண்ணாச்சிக்கு நல்லதாக நாலு வார்த்தை சொல்லி பாராட்ட நினைப்பவர்கள் இந்த முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். xavierukr@yahoo.com

4 comments:

வடுவூர் குமார் said...

அப்பாடி இப்பவாது பின்னூட்ட பெட்டி திறக்கிறது.
முதலில்,கை கூப்பி வணங்குகிறேன்.பல அருமையான தகவல்களை கொடுத்துள்ளீர்கள்.
தாங்கள் கொடுத்துள்ள திரு சேவியருக்கும் மின்மடல் அனுப்பியுள்ளேன்.
மேலும் தகவல்களை எதிர்பார்க்கிறேன்.
இனிமேல் களம் இறங்கி வேலை பார்க்கமுடியாவிட்டாலும் யாராவது கேட்டால் உங்கள் பக்கம் கை காட்டவாது முடியுமல்லவா?

உண்மைத்தமிழன் said...

ஆசிரியர் என்ற பொறுப்புக்கு ஏற்றாற்போல் கனகச்சிதமான, பொருத்தமானத் துறையைத் தேர்வு செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். நன்றிகள்.. நானும் இதுவரை அறிந்திராத விஷயங்களை தெரிந்து கொள்ள விருப்பமில்லாமல் இருந்த விஷயங்களை உங்களால் தெரிந்து கொண்டேன்.. ஆசிரியரின் பணி தொடரட்டும்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

சம்சாரி,

அருமையான வலைப்பதிவைத் தொடங்கியிருக்கிறீர்கள். நன்றி.

பல விதயங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

உங்களுடைய இந்த இடுகை மற்றும் பெல்ஜியத்திலிருந்து வந்து தரிசுநிலங்களை வளப்படுத்தியவரைப்பற்றிய இடுகை - இரண்டையும் Global Voice Onlineஇல் சுட்டியிருக்கிறேன்.

http://www.globalvoicesonline.org/2007/04/25/tamil-blogs-agriculture-street-threatre-and-children

நன்றி!

-மதி

K.J.J.Thangaraj said...

K.J.Justin Thangarajan.
PUliangudi.....

very very nice person..... i like