Wednesday, April 11, 2007

காந்தி கடலை உங்களுக்கு வேண்டுமா?

விவசாயத்தை ஒரு தொழிலாக அல்ல, ஒரு வாழ்வியல் லட்சியமாகவே நினைத்து செயல்படுகிறவர் தக்கோலம் விவசாயி நீலசம்பத். இவர் வளர்க்கும் காந்திக் கடலை இன்னும் சில ஆண்டுகளில் தமிழகம் முழுக்கப் பரவி பரபரப்பை ஏற்படுத்தப் போகிறது.

காந்தி கடலையா? அது என்ன என்று விசாரிக்க தக்கோலம் நோக்கிப் போனோம். அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் கிட்டத்தட்ட பதினைந்து கி.மி. தொலைவில் இருக்கிறது தக்கோலம் பேரூராட்சி. ஊரில் போய் இறங்கி 'நீலசம்பத்' என்று கேட்டால், "ஓ, திருக்குறள் பண்ணைக்காரா?" என்று அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள் இளைஞர்கள்.

வீட்டுக்குப் போய் உட்கார்ந்தவுடன் கிராமத்து கலாசாரப்படி டம்ளர் நிறையத் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறார் நீலசம்பத்தின் மனைவி கோமளவல்லி. கூடவே கொஞ்சம் முந்திரி பருப்பைக் கொண்டு வந்து வைக்கிறார். விவசாயி வீட்டில் முந்திரி பருப்பு உபசாரமா? நாம் கொஞ்சம் திகைப்போடு கேட்க, பேச ஆரம்பித்தார் நீலசம்பத்."அது முந்திரி பருப்பு இல்லீங்க.. முந்திரி பருப்பு மாதிரி மொக்கை, மொக்கையா இருக்கிற காந்திக் கடலை. இதை நான் கண்டுபிடிச்ச விதமே சுவாரஸ்யமானது.

எங்க ஊர்ல எனக்கு மூணு ஏக்கர் நிலம் இருக்கு. புஞ்சை நிலம்தான். நெல்லையும் கடலையும்தான் பயிர் செய்வேன். நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜெ.எல்.24 என்கிற கடலை ரகத்தைப் பயிர் செய்தேன். விளைச்சல் முடிந்து கடலை விதைகளைப் பிரித்த போது, சில கடலை விதைகள் மட்டும் கொஞ்சம் பெரிதாக, நீளமாக இருப்பதை கவனித்திருக்கிறார் என் மனைவி. உடைத்துப் பார்த்தால், கடலைப் பருப்பு சிகப்பாக, பெரிதாக இருந்திருக்கிறது. இந்த மாத்ரி கடலைகளை மட்டும் தனியாகப் பொறுக்கி, அதை மீண்டும் விதைத்தோம். விதைத்த போதுதான் தெரிந்தது. அது படர்கொடியாக வளரக்கூடிய கடலைப் பயிர் என்று. விளைச்சலும் நன்றாக இருந்தது.

இந்தக் கடலைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று என் நண்பர் ஜான் தன்ராஜிடம் கேட்டேன். அவரும் ஒரு இயற்கை விவசாயி. பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இப்போது திருத்தணிக்குப் பக்கத்தில் உள்ள காவேரி ராஜபுரத்தில் அற்புதமாக விவசாயம் செய்து வருகிறார். என் கையில் இருந்த கடலையைப் பார்த்த தன்ராஜ், "இது குஜராத் மாநிலத்திலிருந்து வந்த கடலை. குஜராத்தில் இந்த வகை கடலையை நிறைய பயிர் செய்கிறாகள். எனவே இதற்கு காந்தி கடலை என்று பெயர் வைக்கலாம்" என்றார்.

கடலையையும் பசுவின் பாலையும் எல்லோரும் சாப்பிட வேண்டும் என்று சொன்னவர் காந்தி. அந்த மகாத்மாவின் பெயரை வைப்பது பொருத்தமாகத்தான் இருக்கும் என்று உடனே சரி என்று வைத்தேன். இப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் காந்தி கடலை வேண்டும், காந்தி கடலை வேண்டும் என்று கேட்டு வாங்கிப் பயிர் செய்கிறார்கள். நல்ல விளைச்சல் தந்து, விவசாயிகளுக்கு நிறைய வருமானம் தந்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சி; எனக்கும் மகிழ்ச்சி. என்னுடைய நோக்கமெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை விவசாயிகளின் வீட்டுக்கும் காந்தி கடலையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே.

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு காராபூந்தி, மைசூர்பாகு கொடுப்பதை விட காந்தி கடலையை வறுத்தோ, அவித்தோ கொடுக்கலாம். அவர்களும் ஆரோக்கியமான உணவை ஆனந்தமாக சாப்பிடுவார்கள்".முந்திரி பருப்பு போல இருந்த காந்தி கடலையை சாப்பிட்ட போது சுவையாகத்தான் இருந்தது. "இந்த கடலையில் சத்தும் அதிகம். எண்ணெய்ச் சத்து பத்து சதவிகிதம் குறைவு. எனவே, கொஞ்சம் அதிகம் சாப்பிட்டாலும் தலை சுற்றாது" என்றார் நீலசம்பத்.டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான ஒரு பட்டம் மட்டும் இப்போது காந்தி கடலையை சாகுபடி செய்கிறார் நீலசம்பத்.

தான் சாகுபடி செய்யும் கடலையை பெரும்பாலும் விதைக் கடலையாகவே விற்கிறார். ஒரு கிலோ கடலை விலை ரூ. 50. கடந்த ஆண்டு கிலோ 40 ரூபாய் விற்றாராம். விலையேற்றத்துக்குக் காரணம், விவசாய வேலை செய்ய ஆட்கள் கிடைக்காததுதான் என்கிறார்.

'சரி, உங்க பண்ணைக்கு ஏன் திருக்குறள் பண்ணை என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்?' என்று கேட்டோம்.

"வள்ளுவர், காரல் மார்ஸ், பெரியார், மாவோ - இந்த நான்கு சிந்தனையாளர்களின் வழி நடப்பவன் நான். என்னைப் பொருத்த வரை திருவள்ளுவர் மாதிரி ஒரு சிந்தனையாளரைக் கண்டது இல்லை. இந்த உலகத்தில் எத்த்னையோ தொழில்கள் வரலாம். ஆனால் விவசாயம்தான் எல்லா தொழிலுக்கும் அடிப்படையாக இருக்கும் என்று அன்றைக்கே சொன்னார் அந்த தத்துவ ஞானி. அவரைக் கண்டு என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை!" என்று உணர்ச்சி வசப்பட்டார்.

"உங்களுக்கு பணத் தேவை இருந்தால், உங்களிடம் உள்ள நகைகளை விற்றுக் கொள்ளுங்கள். நிலத்தை மட்டும் எந்தக் காரணத்தை கொண்டும் விற்காதீர்கள். இன்னும் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் வாரிசுகளுக்கு நீங்கள் விட்டுச் செல்லும் மிகப் பெரிய சொத்தாக உங்கள் நிலம்தான் இருக்கும்" என்கிறார் நீலசம்பத்.

வித்தியாசமான இந்த விவசாயியோட தொடர்பு கொள்ள நினைக்கிறவர்கள் பின்வரும் தொலைபேசி எண்ணில் பேசலாம். 04177-246448.

முகவரி: திருக்குறள் பண்ணை, 40, மேல் தெரு, தக்கோலம் - 631 151.

2 comments:

Unknown said...

நல்ல தகவல்கள் !
அப்படியே அவரின் முழு முகவரியையும் வெளியிட்டால் தேவைப் படுவோர் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்.

sirajudeen said...

Nice words from a nice lovable person. Some people do different things just for difference, but some others does the same for great innovations, I take the immense pleasure to say that he( my uncle) belongs to the second category . Let all of his dreams come true in the near future....