Thursday, April 26, 2007

பஞ்சகவ்யம் - விவசாயிகளின் சர்வரோக நிவாரணி!

``ஜீபும்பா! எந்தப் பயிரும் வளர்வதற்குத் திராணியற்ற இந்த நிலத்தில் இனி நெற்பயிரும் பருப்பும் கத்திரியும் வெண்டையும் வாழையும் பூஞ்சோலையும் மாவும் தென்னையும் பலாவும் வளர்ந்து செழிக்கட்டும்' என்று நம்பிக்கையோடு பஞ்சகவ்யத்தைத் தெளியுங்கள்! உங்கள் வயலில் நீங்கள் இதுவரை பார்த்திராத அதிசயத்தை அடுத்து வரும் சில வாரங்களில் பார்க்க ஆரம்பிப்பீர்கள்''

இப்படிச் சொல்வது நானல்ல, தமிழ்நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள்.

`பஞ்சகவ்யமா? அப்படி என்றால் என்ன? அதைக் கண்டுபிடித்தது யார்?' என்று விசாரித்தபோது `கரூருக்குப் பக்கத்தில் கொடுமுடி என்கிற ஊரில் நடராஜன் என்று ஒருவர் இருக்கிறார். ஆங்கில மருத்துவர். அவரிடம் போய் இந்தக் கேள்வியைக் கேளுங்கள்' என்று சொல்லிவிட்டார்கள். அடுத்த நாள் நடராஜன் அய்யா வீட்டின் கதவைத் தட்டினோம். பஞ்சகவ்யத்தைக் கண்டுபிடித்தது நீங்கள் தானா? என்று கேட்டோம். பொறுமையாக பதில் சொல்ல ஆரம்பித்தார்.

``நான் தான் பஞ்சகவ்யத்தைக் கண்டுபிடித்தேன் என்பது கொஞ்சம் மிகையான கூற்று. 1998-ஆம் ஆண்டில் பெங்களூரில் நடந்த மூலிகைக் கண்காட்சிக்குப் போனபோது Organic Farming - Source Book என்று ஒரு புத்தகத்தைப் பார்த்தென். பிரேசில் நாட்டு விஞ்ஞானி ஒருவர் எழுதியது. பசுவின் பாலையும் சிறுநீரையும் 21 நாட்கள் ஊறவைத்து நுண்ணாட்டச் சத்து கலந்து அதில் இரண்டு சதவிகித கரைசலைத் தண்ணீருடன் சேர்த்து திராட்சை தோட்டத்திற்கு அடித்தபோது நல்ல பலன் தந்ததாக எழுதியிருந்தார்.

நாமும் இது போல செய்து பார்க்கலாமே என்றிருந்த நேரத்தில் மகா சிவராத்திரி வந்தது. கோயிலுக்குப் போய் சாமியை தரிசிக்கச் சென்றேன். பூஜைக்குப் பின் பிரசாதம் கொடுத்தார்கள். சுவாமிகளே! என்ன இது? என்று கேட்டேன். பஞ்சகவ்யம் என்றார். இதை ஏன் கொடுக்கிறீர்கள் என்றேன். இது வந்த நோயைப் போக்கும். இனிவரும் நோயை வராமல் தடுக்கும்'' என்றார்.

பசுவைன் சாணியையும் கோமியத்தையும் மட்டும் பயன்படுத்துவதற்குப் பதிலாக பசு கொடுக்கும் ஐந்து பொருட்களையும் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். என் வீட்டிலேயே பஞ்சகவ்யம் தயாரித்தேன். அதை சில பயிர்களின் மீது அடித்தும் பார்த்தேன். அதன்பிறகு நடந்தது அற்புதம்.

இன்றைக்குத் தமிழகம் முழுக்க பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் பஞ்சகவ்யத்தை பயன்படுத்துகின்றனர். ஏழை விவசாயிகளுக்குக் கிடைத்த போக்கிஷம் என்று புகழ்கின்றனர். இதுதான் நான் பஞ்சகவ்யத்தைக் கண்டுபிடித்த கதை'' என்று முடித்தார்.

பஞ்சகவ்யத்தை எப்படித் தயாரிப்பது? இந்த இயற்கை உரத்தைத் தெளித்தால் என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை பிறகு சொல்லவா?

3 comments:

Santhosh said...

இயற்கை விவசாயத்தைப்பற்றி எழுதி சமுதாயத்துக்கு ஒரு நல்ல விடயத்தை செய்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. தாங்கள் உங்களது பதிவை மற்ற திரட்டிகளிலும் சேர்த்தால் நிறைய பேரை சென்று அடையும்.

அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள சம்சாரி
படிக்கவே சந்தோசமான விசயம் இது. பஞ்சகவ்யத்தில் நெய்யை குறைத்துக்கொண்டு சாண எரிவாயுக்கழிவு கரைசலை ஊற்றினால் இன்னமும் நல்ல பயன் தரும். குறிப்பாக இரண்டு மாடுகளை கொண்ட விவசாயிகளுக்கு குறைந்த கொள்ளளவு கொண்ட சாண எரிவாயுகலன் (2 க்யூபிக் மீ) விவேகானந்த கேந்திரத்தில் கட்டிக்கொடுக்கின்றனர்.

Unknown said...

தொடர்ந்து எழுதுங்கள்.

நல்ல பயனுள்ள தகவல்கள்

நன்றி!