Monday, February 25, 2008

வழி காட்டும் ஈரோட்டு கிராமம்!

இன்றைய தினம் வெளியான இந்து நாளிதழில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. சிறிய செய்தி என்றாலும் மனத்துக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி செய்தி.

ஈரோட்டுக்குப் பக்கத்தில் உள்ள கொடுமுடியின் எல்லைக்குள் உள்ள ஒரு சிறிய கிராமம் எழுநூற்றிமங்கலம். இந்தக் கிராமத்தில் உள்ள விவசாயிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இனி நாங்கள் செயற்கை உரங்களை பயன்படுத்தவே மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தார்கள். எடுத்தபடி செய்தும் காட்டினார்கள். இன்று அந்தக் கிராமம் செயற்கை உரம் என்கிற அரக்கனிடமிருந்து விடுதலை பெற்றிருக்கிறது.

(செயற்கை) உரத்தை பயன்படுத்தவில்லை எனில் எப்படி பயிர்களைப் பாதுகாப்பார்கள்? இதனால் அவர்களுக்கு நஷ்டம் வராதா என்று நீங்கள் கேட்கலாம்.

நிச்சயமாக ஒரு நயா பைசா நஷ்டம் வராது. காரணம், அவர்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைக் (Integrated Pest Management) கையாள்கிறார்கள். அது என்ன பயிர் பாதுகாப்பு முறை?

சிம்பிள். இயற்கை பல நூறு பூச்சிகளை உருவாக்கி இருக்கிறது. இதில் நல்லவையும் உண்டு. கெட்டவையும் உண்டு. கச்சிதமாகக் கணக்கெடுத்தால் கெட்டவை விட நல்லவையே அதிகம். எனவே பயிர்களுக்கு வில்லன்களாக மாறும் கெட்ட பூச்சிகளை அழிக்க நல்ல பூச்சிகளே போதும். தனியாக உரம் ஏதும் பயன்படுத்த வேண்டியதில்லை. இது ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை.

இந்த உண்மையைத் தெரிந்த கொண்டதால்தான் நம் முன்னோர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளாக எந்த செயற்கையான பூச்சி மருந்தையும் பயன்படுத்தாமல் விவசாயம் செய்தார்கள்.

இன்று நாம் பூச்சிகளைக் கொல்ல செயற்கை உரத்தை பயன்படுத்துகிறோம். அது கெட்ட பூச்சிகளை அழிப்பதோடு நல்ல பூச்சிகளையும் அழித்துவிடுகிறது. இதனால் பயிர்களுக்குத் தேவையான பாதுகாப்பு இல்லாமல் போய்விடுகிறது. செலவுக்குச் செலவு, நஷ்டத்துக்கு நஷ்டம். நம் வயல்களில் செயற்கை உரத்தை பயன்படுத்துவது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு ஒப்பானதாகும்.

ஈரோட்டு விவசாயிகள் இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கின்றனர். இதனால் அவர்கள் ஒரு ஏக்கருக்கு ரூ.1500 மிச்சப்படுத்தப் போகிறார்களாம்.

தமிழ்நாட்டில் உள்ள அத்தனை விவசாயிகளும் இந்தப் பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும். செயற்கை உரங்களை விட்டு ஒழிக்க வேண்டும்.

4 comments:

மாதங்கி said...

நல்ல செய்தி சம்சாரி

பல நாட்களுக்குமுன் நாளிதழில் ஒரு கட்டுரை படித்தேன், வீடுகளில் சக்திவாய்ந்த ரசாயன சுத்தம் செய்யும் நீர்மங்கள்/பொடிகள் , ஆகியவற்றுக்கு பதிலாக, வினிகர், சோடா உப்பு முதலியவை கொண்டு எப்படி சுத்தம் செய்யலாம் என்று போட்டிருந்தார்கள்

உண்மைத்தமிழன் said...

சம்சாரி அண்ணே..

இந்த மாதிரி பதிவையெல்லாம் நீங்களே எழுதி, நீங்களே படிச்சுக்கக்கூடாது.. பொதுத்திரட்டில இணைஞ்சு அதன் மூலமா நாலு பேரு படிச்சு.. அவுங்களும் அதைத் தெரிஞ்சு.. ஏதாவது சந்தேகம் வந்து உங்ககிட்ட கேள்வி கேட்டு.. நீங்க அதுக்குப் பதிலைச் சொல்லி..

எவ்வளவோ விஷயம் இருக்குங்கண்ணே..

ஓகே.. கம்மிங் டூ தி பாயிண்ட்டு..

செயற்கை உரங்கள் என்னென்ன? இயற்கை உரங்கள் என்னென்ன? கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லாயிருக்கும்..

ஜோசப் பால்ராஜ் said...

செயற்கை உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் பசுமை புரட்சி என்ற இனிப்பான திட்டத்தின் முலம் நமக்கு கிடைத்த கசப்பான அனுபவங்கள்.

அதுவரை இயற்கை முறையில் விவசாயம் செய்தவர்களையெல்லாம் ரசாயன முறைகளுக்கு மாற்றி, ஒரு குறிப்பிட்ட காலம் நல்ல விளைச்சலை கண்டோம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணை பாழ்படுத்திவிட்டோம்.

பேயர் என்ற ஜெர்மனி நாட்டை சேர்ந்த நிறுவனம் மீதைல் ஃபரத்தியான் என்ற இரசாயன உரத்தை மெட்டாசிட் என்ற பெயரில் பூச்சிக்கொல்லியாக விற்றுக்கொண்டிருந்தது. இந்த மீதைல் ஃபரத்தியான் ரசாயனத்தை ஜெர்மனி 30 ஆண்டுகளுக்கு முன்னரே தடை விதித்துவிட்டது. மற்ற எல்லா நாடுகளும் தடைவிதித்த பின்னரும், இந்தியாவில் இன்றுவரை தடையில்லை. பேயர் நிறுவனம் தானகவே முன்வந்து அதன் உற்பத்தியை இந்தியாவில் நிறுத்திவிட்டது. இதுதான் நமது அரசின் செயல்திறன்.

பசுமை புரட்சியால் நேர்ந்த நன்மைகளை விட தீமைகளே அதிகம் என விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதனே ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனாலும் இன்னும் நம் அரசாங்கம் ரசாயன உரங்களுக்குத்தான் மானியங்களை வழங்கிவருகிறது. இந்த கொடுமையை என்னவென்று சொல்வது?

இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவித்த விவசாயப் பொருட்களுக்கு தனி விலை நிர்ணயம் செய்தாலே போதும், எல்லா விவசாயிகளும் இயற்கைக்கு மாறிவிடுவார்கள்.

செயற்கை உரங்களின் தீமையை விளக்கி , இயற்கைக்கு விவசாயிகளை திரும்ப அழைக்கும் மகத்தான் பணியை தமிழகத்தில் இயற்கை வேளான் ஆய்வாளர் திரு.நம்மாழ்வார் அவர்களும், மராட்டியத்தை சேர்ந்த சுபாஷ் பாலேக்கர் அவர்களும் செய்து கொண்டுள்ளார்கள். விகடன் குழுமத்தின் பசுமை விகடனும் இவர்களோடு இணைந்து இந்த சமுதாயப்பணியில் முன்நிற்கின்றது. இவர்கள் அனைவரும் வணங்கப்பட வேண்டியவர்கள்.

Several tips said...

சுவையான பதிவு