Saturday, April 28, 2007

பஞ்சகவ்யம் - பகுதி 3




`பஞ்சகவ்யத்தில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன?' என்று டாக்டர் நடராஜனிடம் கேட்டோம். அவர் சொன்னார்.


``செங்கல்பட்டு இயற்கை விவசாயி பி.பி.முகுந்தன், கள் சேர்த்தும் சேர்க்காமலும் இரண்டு விதமாக பஞ்சகவ்யத்தைத் தயார் செய்து, அங்குள்ள உயிரியில் கட்டுப்பாட்டு ஆய்வு மையத்தில் உள்ள முதன்மை விஞ்ஞானி சோலையப்பனிடம் ஆராய்ச்சி செய்யக் கொடுத்தார். அதை ஆராய்ந்து பார்த்ததில், அவர்களே பிரமித்துப் போகும் அளவுக்கு அதில் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் மிக மிக அதிகமாக இருப்பதையும் அந்த நுண்ணுயிர்கள் அதிக ஆற்றலுடன் இருப்பதையும் கண்டார்கள்.


பஞ்சகவ்யத்தில் தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசோஸ்பைரில்லம் பத்து கோடி இருந்தது. தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசடோபேக்டர் பல லட்சக்கணக்கில் இருந்தது. மணிச்சத்தைக் கரைத்துக் கொடுக்கக்கூடிய

பாஸ்போபேக்டீரியா ஐந்து கோடிக்கும் அதிகமாக இருந்தது. நோய் எதிர்ப்பாற்றலைத் தரும் சூடோமோனஸ் ஆறு கோடிக்கு மேல் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிசயித்துப் போனார்கள்.


பயிர்கள் வளர்வதற்குத் தேவையான் 13 வகையான பேரூட்ட, நுண்ணூட்டச் சத்துக்களும் தேவையான அளவில் உள்ளன. எனவே, எல்லா வகையான பயிர்களுக்கும் தாராளமாகப் பயன்படுத்தலாம்'' என்றார் அவர்.


பஞ்சகவ்யத்தை எப்படித் தயாரிப்பது என்பதையும் எப்படி பயன்படுத்துவது என்பதையும் `பணம் குவிக்கும் பஞ்சகவ்யா' என்கிற புத்தகத்தில் விளக்கமாக எழுதியிருக்கிறார் டாக்டர் நடராஜன். கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்து பதிப்புகளைக் கண்டுவிட்டது இந்தப் புத்தகம். மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது.


சில ஆண்டுகளுக்கு முன்பு, பஞ்சகவ்யத்தைப் பற்றி கேள்விப்பட்ட ஆந்திர அமைச்சர் ஒருவர், அந்த மாநில அரசாங்கத்துக்கும் பெரும் தலைவலியைக் கொடுத்த பருத்திச் சாவைத் தடுக்க பஞ்சகவ்யத்தை பயன்படுத்தலாமா என்று கேட்டு, டாக்டர் நடராஜனின் வீட்டுக்கே வந்துவிட்டாராம்.


டாக்டர் நடராஜன் கண்டுபிடித்தது பஞ்சகவ்யம் அல்ல! தமிழ்நாட்டு விவசாயிகளின் பஞ்சத்தைப் போக்க பஞ்சாமிர்தம்!

2 comments:

அரவிந்தன் நீலகண்டன் said...

பல சமூகங்களில் வயதுக்கு வரும் பெண்ணுக்கு கோமூத்திரம் பசுஞ்சாணம் நெய் பால் கலந்து கொடுக்கிற வழக்கம் இருக்கிறது. சில முக்கியமான காலகட்டத்தில் வேண்டிய ஊட்ட சத்துக்கள் கிடைக்க. இன்று நாம் மீள்-கண்டுபிடிக்கும் பல விசயங்கள் ஏற்கனவே நம்முடைய விவசாய முறையில் இருந்ததுதான். CIKS காரர்கள் இது குறித்து நன்றாக ஆராய்ச்சிகள் செய்துள்ளார்கள். மேலும் பஞ்சகவ்யம் போன்ற தயாரிப்புகள் இராசாயன முறையின் கறாரான பார்முலாக்களில் நிற்காதவை. அவை பயிருக்கு பயிர், பருவத்துக்கு பருவம், மாட்டுவகைகள் இத்யாதியை பொறுத்து மாறுபடவும் செய்யும்.

Syam said...

மிகவும் அருமையான வலைப்பூ...தொடருங்கள் உங்கள் சேவையை....