Wednesday, May 23, 2007

முல்லைப் பெரியாறு தமிழனுக்குச் சொந்தமில்லை!


முல்லைப் பெரியாறு தமிழகத்துக்குச் சொந்தமானதல்ல. அதிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீரைப் பெறுவதற்குக்கூட தமிழனுக்கு உரிமை இல்லை என்கிற நினைப்புதான் கேரள அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது.

இன்றைய தேதியில் முல்லைப் பெரியாறின் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருக்கிறது. ஜூன் மாதம் பருவமழை ஆரம்பித்தால்தான் அணைக்குத் தண்ணீர் வர ஆரம்பிக்கும். சரியான நேரத்தில் பருவமழை பொழிந்து அணைக்குத் தண்ணீர் வந்தால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் முதல் போகம் பயிர் செய்ய முடியும். இப்போது அணையில் தண்ணீர் இல்லாததால் முதல் போக விவசாயத்துக்கான தண்ணீர் கிடைக்காது என்கிற செய்தி கேட்டு பல லட்சக்கணக்கான விவசாயிகள் வருத்தத்தில் மூழ்கி இருக்கிறார்கள்.

தமிழக மக்கள் நியாயமாகக் கேட்கிற மாதிரி 152 அடிக்கு அணையில் நீரைத் தேக்கி வைத்திருந்தால் தமிழகத்தில் இருக்கும் ஐந்து மாவட்ட விவசாயிகளின் முதல் போக விவசாயத்துக்கு பங்கம் வந்திருக்காது. 152 அடிக்குத்தான் தேக்கி வைக்கவில்லை. உச்சநீதிமன்றம் சொன்ன அளவுக்காவது தண்ணீர் தேக்கி இருந்தால்கூட பாதி நிலத்துக்குத் தண்ணீர் கிடைத்திருக்கும். ஆனால், இரண்டையும் செய்யாமல் 136 அடிக்கு மேல் ஒரு இஞ்ச்கூட தண்ணீர் தேக்க விடமாட்டோம் என்று அடம் பிடிக்கும் கேரள அரசியல்வாதிகளை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை.

முல்லைப் பெரியாறு அணை பற்றி ஒரு அருமையான புத்தகம் சமீபத்தில் வந்திருக்கிறது. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த புத்தகம் முல்லைப் பெரியாறு பற்றி அத்தனை விஷயங்களையும் புட்டுப் புட்டு வைக்கிறது.

இப்போது கேரள எல்லைக்குள் இருக்கும் முல்லைப் பெரியாறு நிலப்பகுதி உண்மையில் தமிழகத்துக்குச் சொந்தமானது. ஆங்கில அரசாங்கம் செய்த ஒரு சிறுதவறின் காரணமாக, தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் ஜென்மப் பகை உருவாகிவிட்டது. நமக்குச் சொந்தமான நிலம் எப்படி கேரள அரசாங்கத்திடம் போனது என்பதில் ஆரம்பித்து, பென்னிகுக் என்னும் ஆங்கிலேயர் முல்லைப் பெரியாறு அணையை எப்பாடுபட்டுக் கட்டினார், பிரச்னை எப்படி ஆரம்பமானது, பிரச்னையின் இன்றைய நிலை என்ன என்பது வரை மிக மிக எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் ஆசிரியார் ஊரோடி வீரகுமார். இவர் ஒரு இயற்கை விவசாயி. முல்லைப் பெரியாறு பற்றி கிஞ்சித்தும் தெரியாதவர்கள் அலுங்காமல் குலுங்காமல் அது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அவசியம் இந்த புத்தகத்தைப் படிக்க வேண்டும் .

கர்நாடகவோடு காவிரிப் பிரச்னை, ஆந்திராவுடன் பாலாறில் பிரச்னை என தமிழகத்தின் மூன்று திசைகளில் உள்ள மாநிலங்கள் தண்ணீர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தொல்லை கொடுப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்தப் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு நதிகளை தேசியப் பட்டியலில் கொண்டு வருவதுதான். ஒரு சொட்டு தண்ணீர்கூட வீணாக்கப்படாமல் பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கிற ஒரு அமைப்பிடம் நீர் மேலாண்மை இருக்க வேண்டுமே ஒழிய, இந்தத் தண்ணீர் தமிழக விவசாயிக்கா, கர்நாடகா விவசாயிக்கா என்று பார்க்கக்கூடாது.

4 comments:

Voice on Wings said...

எனக்கு அதிகம் விவரம் தெரியாது. இருந்தாலும், நான் கேள்விப்பட்ட வரையில் முல்லைப் பெரியாறு அணை பழைமையடைந்து வலுவிழந்து விட்டதாகவும், இதற்கு மேல் அதிக நீரைத் தேக்கினால் அணையே உடைந்து பல ஊர்களுக்கு வெள்ள அபாயத்தை உருவாக்கக்கூடிய நிலை இருப்பதாகவும் கேரளத் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறதாமே? அது பற்றி உங்கள் கருத்தென்ன?

a.rajaramkumar@gmail.com said...

அணையின் பலம் பற்றி தமிழக மக்களோ, கேரள மக்களோ என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பதைவிட கட்டுமானத் துறையில் மிகப் பெரும் அனுபவம் கொண்டவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பதே சரி. அந்த வகையில் அணையை மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களும், உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களும் ஆய்வு செய்துள்ளன. ஆணையின் தாங்கும் சக்தி பற்றி திருப்தி தெரிவித்திருக்கின்றன. அணை உடையும் நிலையில் இல்லை. அது பலமாகத்தான் இருக்கிறது என்பதைத் தெளிவாகவே சொல்லி இருக்கின்றனர்.

ஒருவேளை அணை உடைந்துவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இடுக்கி உள்பட எந்தப் பகுதியும் நீரில் மூழ்காது. யாரும் இறக்கவும் மாட்டார்கள். காரணம், நீரில் மூழ்கிவிடும் என்று சொல்லப்படும் இடுக்கி உள்பட பல பகுதிகள் ஆற்றின் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் உள்ளன. ஆற்று நீர் பள்ளத்தை நோக்கித்தான் பாயும். மேட்டை நோக்கிப் போகாது என்கிற அடிப்படை அறிவியலை கேரள சகோதரர்கள் ஏனோ புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

உண்மைத்தமிழன் said...

முல்லைப் பெரியாரில் முரண்டு பிடிப்பவர்கள் கேரளாவின் அரசியல் கட்சிகள்தானே ஒழிய கேரள மக்களல்ல. அதே போல் ஆந்திராவில் பாலாற்றில் அணை கட்டியே தீருவோம் என்பவர்களும் அரசியல்வாதிகள்தானே தவிர அது ஒட்டு மொத்த மக்களின் விருப்பமும் அல்ல.

முல்லைப் பெரியாரில் 136 அடிக்குத் தண்ணீரைத் தேக்கி கிடைக்கின்ற தண்ணீரை வைத்து தமிழகத்தில் விவசாயம் செய்து கொள்ளலாம். ஆனால் கேரளாவில் அந்த நிலைமைக்குத் தண்ணீர் கிடைக்காத சூழல் உருவானால் இயற்கையாக சாதாரண பொது ஜனங்களுக்கு உண்டாகும் கோபத்திற்கு ஆளாகக்கூடாது.. அவர்களின் கோபம் ஓட்டுச் சீட்டு மீது பாய்ந்தால் நாம் அடுத்தும், தொடர்ந்தும் அரசாள முடியாது என்பதாலும் அங்கே அரசியல்வாதிகள் விட மறுக்கிறார்கள். ஆந்திராவிலும் இதே நிலைமைதான்.. தேர்தல் ஓட்டை மனதில் வைத்துத்தான்..

தமிழ்நாட்டிலும் இதே கதைதான்.. ந்தக் கட்சி முயற்சியெடுத்து போராட்டம் நடத்தி ஏதாவது ஒன்று நடந்து அது மக்களுக்கு நல்லதாவிட்டால் அவர்கள் நல்ல பெயர் எடுத்து ஓட்டுக்களை வாங்கி விடுவார்களே என்பதால்தான் நம் ஊர் அரசியல்வாதிகளும் எந்த அளவிற்குக் கத்த வேண்டுமோ அதைவிடக் கூடுதலாகவும் கத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே அரசியல்தான்..

பெரியார் அணை 150 அடி தண்ணீரை தாங்கும் சக்தி படைத்தது என்பது கேரளாக்காரர்களுக்கும் தெரியும். ஆனால் சொல்ல மாட்டார்கள். கேரளாக்காரர்கள் இதைத் தாங்க மாட்டார்கள் என்பது நம்ம ஊர் அரிவாள், சுத்தியல்காரர்களுக்கும் தெரியும். ஆனால் இவர்களும் நேரடிப் போராட்டத்தில் இறங்க மாட்டார்கள். பேச்சுவார்த்தை நடத்துங்கள்.. பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்பார்கள்.

அரசியலை அறவே ஒதுக்கிவிட்டு எந்த ஆய்வையும் செய்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வு காண வழி கிடைக்கும். இந்திய ஒருமைப்பாட்டை கேள்விக்குறியாக்கும் செயல்கள்தான் இது போன்ற மாநிலங்களுக்கிடையேயான எல்லைப் பிரச்சினைகள், நிலப் பிரச்சினைகள், நீர்ப்பிரச்சினைகள்.. தீர்க்க வேண்டியது மத்திய அரசுதான்.. மாநில அரசுகளின் ஆதரவு இல்லாமல் மத்திய அரசு நீடிக்க முடியாத வித்தியாசமான ஜனநாயகத்தை நாம் சந்தித்துக் கொண்டிருப்பதால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு என்பது எக்காலத்திலும் நடக்காது என்றே நான் நினைக்கிறேன்..

a.rajaramkumar@gmail.com said...

மக்கள் வேறு, அரசியல்வாதிகள் என்று பிரித்துப் பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஆதரவு, எதிர்ப்பு என்று இரு நிலைகள் மக்களிடம் உள்ளன. எதிர்ப்பு நிலைக்கு மக்களிடம் அதிக ஆதரவு இருப்பதால் அரசியல்வாதிகள் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தகவல்களை சரியாகப் புரிந்துகொள்ளும் மனிதர்களிடம் யாரும் அரசியல் செய்து லாபம் சம்பாதிக்க முடியாது.

தவிர, தமிழகத்துக்கு தண்ணீர் கொடுப்பதன் மூலம் கேரளாவுக்கு எந்த வகையிலும் நீர் இழப்பு ஏற்படாது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் டி.எம்.சி. தண்ணீர் முல்லைப் பெரியாறைக் கடந்து கடலில் சென்று கலக்கிறது. இதில் தமிழகம் கேட்பது பத்து சதவிகிதம்கூட இல்லை. வீணடிப்பேனே ஒழிய உனக்குத் தர மாட்டேன் என்பது எந்த ஊர் நியாயம்?