Saturday, March 1, 2008

கடன் ரத்து செய்துவிட்டால் விவசாயிகளின் பிரச்னை தீர்ந்துவிடுமா?

இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் இந்தியா முழுக்க உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது.

விவசாயிகளுக்கு மத்திய அரசாங்கம் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று பா.ஜ.க.வும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் பங்குக்குக் கோரிக்கைகளை எழுப்பின. நாடாளுமன்றத்தில் சபையே நடத்த முடியாதபடிக்கு குரல் கொடுத்தது பா.ஜ.க.


எல்லா அரசியல் கட்சிகளின் வாயை அடைக்கிற மாதிரி சிறு விவசாயிகள் வாங்கிய கடன் தொகையை ரத்து செய்திருக்கிறது மத்திய அரசாங்கம். இதற்காக அரசாங்கத்துக்குக் கூடுதலாக 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இதனால் இந்தியாவில் உள்ள 4 கோடி விவசாயிகள் நன்மை அடைவார்களாம்.

விவசாயிகளின் கடனை ரத்து செய்தது வரவேற்கத்தக்க விஷயம்தான். கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கும் சுறுக்குக் கயிற்றைக் கொஞ்சம் பின்னுக்கு இழுத்துவிட்ட மாதிரி விவசாயிகள் நினைக்கிறார்கள். ஆனால் சுறுக்குக் கயிறு இன்னும் கழுத்தை விட்டு முழுவதுமாக நீங்கிவிடவில்லை என்பது சில விவசாயிகளுக்கு மட்டுமே தெரியும்.

இந்தக் கடன் ரத்தானாலும் நாளை மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலையே விவசாயிகளுக்கு ஏற்படும். அந்தக் கடனையும் விவசாயிகளால் கட்ட முடியாது. மீண்டும் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழும். பல விவசாயிகள் சாவார்கள். மீண்டும் ஒரு 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் ரத்து செய்ய வேண்டியிருக்கும்.

எனவே, கடன் ரத்து என்கிற விஷயத்தோடு அரசாங்கம் நிறுத்திக் கொள்ளாமல், விவசாயிகள் ஏன் மீண்டும் மீண்டும் கடனில் போய் மாட்டிக் கொள்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

இன்றைய தேதியில், விவசாயம் என்பது செலவு மிகுந்ததாக இருக்கிறது. விதைச் செலவு அதிகம். உரச் செலவு அதைவிட அதிகம்.பூச்சி மருந்துச் செலவு எல்லாவற்றையும் விட அதிகம். இத்தனையும் செய்துவிட்டு, தண்ணீர் கிடைக்க வேண்டும். இயற்கை ஏமாற்றாமல் இருந்தால் நல்ல விளைச்சல் கிடைக்கலாம்.

நிறைய விளைச்சல் மட்டும் கிடைத்துவிட்டால் போதுமா? அதை விற்கிற விவசாயிக்கு நல்ல விலையும் கிடைக்க வேண்டும்.

இப்படிப் பல பிரச்னைகள் இருக்கிறது. இதற்கெல்லாம் எந்தத் தீர்வு மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப் போகின்றன?

கடன் ரத்து தற்காலிகமான ஒரு தீர்வுதான். விவசாயிகளின் பிரச்னைகளுக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டுமெனில் அனைவரும் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கான முயற்சிகளில் மத்திய, மாநில அரசாங்கங்கள் இறங்க வேண்டும்.

3 comments:

மணியன் said...

மிகச் சரியான பதிவு. நோய்நாடி நோய்முதல்நாடி வைத்தியம் செய்யாமல் மேலோட்டமான தீர்வு கண்டிருக்கிறார்கள். இந்த 60,000 கோடி ரூபாய் எங்கிருந்து எடுக்கப் போகிறார்கள் ? அந்த அளவு வளர்ச்சித்திட்டங்கள் பாதிக்கப்படப் போகின்றன. இது அரசின் inefficiencyக்கு கொடுக்கப்படும் விலை.
தவிர நிலப்பரப்பு அடிப்படையில் கொடுக்கப்படுவதும் சரியில்லை. விதர்பா விவசாயிகள் பெரும் நிலப்பரப்பில் (> 2 ஹெக்டேர்) பயிரிடும் ஏழை விவசாயிகள். அதேசமயம் பவாரின் மேற்கு மகாராட்டிரத்தில் சிறுநிலபரப்பில் cash crops பயிரிடும் விவசாயிகள் வசதியானவர்கள்.

Sundararajan P said...

கடன் ரத்து என்பதோடு, விவசாயக்கடன்களுக்கு இரு மடங்கு ஒதுக்கீடு என்ற செய்தியையும் கவனிக்க வேண்டும்.

விவசாயிகளை கடன்பொறியிலிருந்து விடுவிப்பது மன்மோகன்சிங், சிதம்பரம் வகையறாவின் நோக்கமல்ல.

விவசாயிகளை மரபணுமாற்று விவசாய நிறுவனங்கள், பூச்சி மருந்து நிறுவனங்கள், உர நிறுவனங்களின் கொத்தடிமையாக மாற்றுவதே இவர்களின் முதன்மை விருப்பம். இதற்கு ஏவல் செய்வதே பிரபல வேளாண்மை விஞ்ஞானி(!) எம். எஸ். ஷ்ஸ்வாமிநாதன் போன்றவர்களின் தேசப்பற்று.

உண்மைத்தமிழன் said...

விவசாயிகளின் இந்த வருடத்திய கடன் ரத்து என்பது வரும் தேர்தலை முன்னிட்டுத்தான் செய்யப்பட்டுள்ளது என்பது கண்கூடு.

விவசாயத் தொழிலையே மத்தி, மாநில அரசுகள் கண்டு கொள்ளாத போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

விவசாயத் துறையின் உள்நோக்கிப் பார்த்தால் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல் பல்வேறு மட்டங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உண்டு.

விவசாயத்திற்கு கடன் உதவி செய்வது முக்கியமல்ல.. அக்கடன் தொகை மிகச் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் பார்க்க வேண்டும். அதற்கு பல காரணிகள் உண்டு. ஆனால் அரசுகளுக்கு புள்ளிவிவரங்கள் மட்டுமே போதுமானதாக உள்ளதால் அதற்கு மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுகிறார்கள்.

படிப்பறிவைக் குறைவாக கொண்டுள்ள விவசாயிகளுக்குள் தற்போதைக்கு எந்தக் கடன் வாங்கினாலும் பிற்காலத்தில் எப்படி அழுதாவது கடன் ரத்தை செய்துவிடலாம் என்ற அலட்சியப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

கரும்பு பயிருக்கு தோதான விலையை நிர்ணயம் செய்ய வருடம்தோறும் சச்சரவுகள் எழுந்த வருகின்றன. எந்த மாநில அரசுகள் அதை நியாயமான முறையில் எதிர் கொள்கின்றன..?

நம்முடைய விவசாயத் துறை அமைச்சருக்கோ, கிரிக்கெட் வாரிய வேலைகளைக் கவனிக்கவே நேரமில்லை.

மத்திய அமைச்சரே இந்த லட்சணத்தில் என்றால், அந்தத் துறை என்ன லட்சணத்தில் இருக்கும்..?