Saturday, August 9, 2008

அக்ரி இன்சூரன்ஸ் என்பது ஏமாற்றா?

இன்சூரன்ஸின் அருமை பெருமைகளை நீங்கள் நன்றாகவே உணர்ந்திருப்பீர்கள். இன்சூரன்ஸ் என்பது கடவுள் மாதிரி. இக்கட்டான காலத்தில் ஆபத்பாந்தகன் மாதிரி வந்த நம்மைக் காப்பாற்றும் இன்சூரன்ஸுக்கு ஈடு இணை எதுவும் இல்லை.
எத்தனை இழப்புகளுக்கு இழப்பீட்டைக் கொடுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளை மட்டும் அதிகம் அக்கறைப்படுவதே இல்லை. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் இந்தத் தொழிலைப் பாதுகாக்க பல விதமான இன்சூரன்ஸ் திட்டங்களை உருவாக்கி, விவசாயிகளுக்குத் தோள் கொடுக்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மறுத்து வருவது ஏனோ தெரியவில்லை.
விவசாய உற்பத்தி என்பது சூதாட்டம் மாதிரி ஆகிவிட்டது. அடுத்த ஆண்டில் இவ்வளவு விளைச்சல் கிடைக்கும் அல்லது கிடைக்காது என்பதை அறிவியல்பூர்வமாக தீர்மானிக்க முடியாததால், இந்தத் தொழிலில் இறங்க பயப்படுகின்றன இன்சூரன்ஸ் நிறுவனங்கள். விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் பாலிசிகளைக் கொடுத்து கையைச் சுட்டுக் கொள்ள அதற்கு விருப்பம் இல்லை.
இன்றைய தேதியில் எந்தத் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமும் பயிர் காப்பீட்டுக்கான இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குவதில்லை. மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய வேளாண்மைக் காப்பீட்டுத் திட்டம் என்கிற அமைப்பு மட்டுமே விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தை அளித்து வருகிறது.
இதற்காக விவசாயிகள் கட்டும் பிரிமியம் மிக மிகக் குறைவு. ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு பயிர் இன்சூரன்ஸ் செய்ய வெறும் 855 ரூபாய் கட்டினால் போதும். எனவே, 100 அல்லது 200 ரூபாய்க்குள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துவிடலாம். பிரிமியமாகக் கட்டும் பணத்தில் 50 சதவிகிதம் மானியமாகவும் மத்திய அரசே அளித்துவிடுகிறது.
இந்தத் திட்டம் கேட்பதற்கு இனிப்பாக இருந்தாலும் இது ஒரு ஏமாற்று. வெறும் கண் துடைப்பு என்று சொல்கின்றனர் விவசாயிகள். காரணம், பயிர் காப்பீடு பெற்ற விவசாயிகளுக்கு வறட்சி, வெள்ளம் போன்ற காரணங்களுக்காக உண்மையாகவே விளைச்சல் இல்லாமல் போனால் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீட்டைக் கொடுக்க மிகவும் யோசிப்பதாகச் சொல்கின்றனர் விவசாயிகள். ஒரு விவசாயிக்கு சரியான விளைச்சல் கிடைக்கவில்லை என்றால், அந்த வட்டாரத்திலேயே யாரும் சரியான விளைச்சல் கிடைத்திருக்கக்கூடாது. அப்போதுதான் இழப்பீட்டைக் கொடுக்க முடியும் என்று சொல்கிறதாம் விவசாயத் துறை.
இது என்ன நியாயம்? எனக்குக் காய்ச்சல். மருந்து கொடுங்கள் என்று கேட்டால், ஊரில் எவனுக்குமே வராத காய்ச்சல் உனக்கு மட்டும் எப்படி வரும்? மருந்து கிடையாது போ என்று சொன்னால், அந்த வாதத்தை எப்படி ஏற்றுக் கொள்வது என்று கேட்கின்றனர் விவசாயிகள்.
விவசாயிகளின் வாதம் சரியானது. வெளிநாடுகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எதன் அடிப்படையில் பயிர் இன்சூரன்ஸ் திட்டங்களை அளிக்கின்றன என்று விவரம் தெரிந்தவர்கள் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் சில விவசாயிகளின் மோட்டார் பம்ப் செட்டுகளுக்கும் வண்டிகளுக்கும் இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குகின்றன. எனினும் இந்த பாலிசிகளும் கேட்டவுடன் கிடைப்பதில்லை என்றே விவசாயிகள் சொல்கின்றனர். `அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஏஜெண்ட் என் நண்பர்தான். இருந்தாலும் அந்த பாலிசியை எனக்குக் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்' என்கிறார் ஒரு விவசாயி.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஓரளவுக்குத் தாராளமாக விவசாயிகளுக்கு அளிக்கும் இன்சூரன்ஸ் பாலிசிகள் என்றால், அது ஆடு, மாடுகளுக்கான இன்சூரன்ஸ்தான். காரணம், இதில் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு லாபம் அதிகம்.
விவசாயத் துறையில் உற்பத்தியை முன்கூட்டியே கணிக்க முடிவதில்லை என்கிற காரணம் காட்டி, விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் வழங்க அந்த நிறுவனங்கள் சுணக்கம் காட்டி வருவது வருந்தத்தக்கது. குசேலன் படம் வெற்றியா, தோல்வியா? சீனாவில் நடக்கும் ஒலிம்பிக்கில் நாம் எத்தனை தங்கப்பதக்கம் வாங்குவோம் என்று கவலைப்படும் புண்ணியவான்கள் வயிற்றுக்குச் சோறிடும் விவசாயிகள் பற்றியும் கொஞ்சம் அக்கறைப்பட்டால் நல்லது.

3 comments:

ஜோசப் பால்ராஜ் said...

மிக அருமையான பதிவு தோழரே.

மிக நன்றாக பயிர்காப்பீட்டுத்திட்டத்தின் ஏமாற்றை எடுத்துரைத்துள்ளீர்கள்.

//ஒரு விவசாயிக்கு சரியான விளைச்சல் கிடைக்கவில்லை என்றால், அந்த வட்டாரத்திலேயே யாரும் சரியான விளைச்சல் கிடைத்திருக்கக்கூடாது. அப்போதுதான் இழப்பீட்டைக் கொடுக்க முடியும் என்று சொல்கிறதாம் விவசாயத் துறை. //

இதைப் போல ஒரு கடைந்தெடுத்த கயமைத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

நண்பரே ஒரு ஹெக்டேர் என்பது 2.47105381 ஏக்கர்தான். தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

a.rajaramkumar@gmail.com said...

அன்புள்ள ஜோசப்,
தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்திக் கொள்கிறேன். பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இருக்கும் குளறுபடிகளை தமிழக அளவில் யாராவது ஒரு ஆய்வறிக்கை சமர்பித்தால் நன்றாக இருக்கும். உங்கள் பகுதி நிலைமைகளை நீங்கள் எழுதலாமே!

இயற்கை விவசாயம் said...

மிக அருமை தோழரே. Yes,all the real matter,I appreciate it...